PUBLISHED ON : டிச 10, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. அமேசான் போன்ற காடுகளில் அதிக அளவு மழை பொழிய அங்கிருக்கும் மரங்கள்தான் காரணமா?
ரா.மணிமேகலை, 9ஆம் வகுப்பு, ஆர்.வி.ஜி. மேல்நிலைப் பள்ளி, குறிச்சிக்கோட்டை.
மழைப் பொழிவு கூடுதலாக உள்ள பகுதிகளில்தான் செழிப்பான மழைக்காடுகள் இருக்க முடியும். அப்படி ஒரு மழைப்பாங்கான பகுதியில்தான் அமேசான் காடுகள் அமைந்துள்ளன.
பொட்டல் நிலத்தில் பொழியும் மழையைவிட மூன்று மடங்கு கூடுதலாக நீராவியை ஏந்திவரும் காற்று, காடுகளின் மீது நகரும்போது அதிக மழையைப் பொழிகிறது என ஓர் ஆய்வு கூறுகிறது. மழைக்காடுகளில் மரங்கள், தாவரங்கள் ஆகியவை நீரை எடுத்து இலைகள் போன்ற பாகங்களின் வழியே, காற்றில் நீராவியைச் சேர்க்கும். இதன் காரணமாக, எப்போதும் புழுக்க நிலை இருக்கும். மரங்கள் வெளியிடும் சிலவகை வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள நீராவியைக் குளிர்வித்து நீர்த் திவலைகளாக மாற்றும். காற்றில் கூடுதல் நீராவி உள்ள நிலையில் மழைக்காடுகளில் மழையாகப் பொழியும்.
புவியின் தட்பவெப்ப நிலையில் காடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மழை பொழிய மரங்கள்தான் காரணம் எனக் கருதக்கூடாது.
2. தொலைநோக்குக் கருவிகள் இல்லாமல் கிரகணங்கள் போன்ற நிகழ்வுகளை நமது முன்னோர்கள் எப்படிக் கணித்தார்கள்?
ம. ஸ்ரீபார்வதி, 7ஆம் வகுப்பு, சொசியத்தே புரோகிரஸ்த்தே அரசு உதவி உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
பல்வேறு வானியல் நிகழ்வுகள் ஊசல் இயக்கம் கொண்டவை. அதாவது, குறிப்பிட்ட கால அளவில் மறுபடி திரும்ப வருவதைத் தொடர்ந்து கவனித்தால் யூகிக்கலாம்.
ஓராண்டு என்பதை, பூமி சூரியனை ஒரு சுற்றுச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் எனக் கூறுவோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் சூரியன் தான் பூமியைச் சுற்றி வந்தது எனக் கருதினார்கள்.
நிலத்தில் செங்குத்தாக ஒரு கல்லை நட்டுவைத்துப் பார்த்தால், சூரியன் உதிக்கும்போது அதன் நிழல் மேற்கு நோக்கி நீளமாக இருக்கும். சூரியன் உயர உயர நிழலின் நீளம் குறையும். சரியாக நண்பகல் 12 மணிக்கு நிழலின் நீளம், மிகக் குறைவாக இருக்கும்.
மறுபடி மேற்கு நோக்கி சூரியன் சாயத் தொடங்கும்போது, நிழலின் நீளம் மறுபடி கூடும். இதை வைத்துச் சரியாக மணியை அளவிடலாம். அதேபோல, நிழலின் நீளத்தை வைத்து சூரிய உதயத்துக்குப் பிறகு கடந்த காலத்தைக் கணக்கிடலாம். அதாவது உச்சிப்பொழுது நிழல் வடக்கிலிருந்து தெற்கு; பின்னர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பொழுதை ஓராண்டு என கணக்கிட்டனர் என்பதைத் தடயங்கள் மூலம் அறிகிறோம்.
3. மரம், செடி கொடிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் என்பது உண்மையா?
இ.இன்சமாம், 8ஆம் வகுப்பு, திருச்சி.
'இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல்' என்று கேட்பதுபோல, மரம், செடி கொடிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதில்லை. பேசுதல் எனும் உடலியக்கச் செயலுக்கும், செய்தித் தொடர்பு என்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. சமீபத்தில் நடந்த ஆய்வுகளில் தாவரங்கள் வேதிப்பொருட்களை வெளியிட்டு இன்னொரு தாவரத்துக்குச் செய்திகளைத் தருகிறது எனக் கண்டுபிடித்தனர். இதை ஊடகங்கள் 'மரங்கள் பேசிக் கொள்கின்றன' என செய்தி வெளியிட்டன.
ஒரு வில்லோ (Willow Tree) மரத்தைப் பூச்சி தாக்கும்போது, அந்த மரம் எளிதில் ஆவியாகக்கூடிய கரிம உயிரிவேதிப் பொருளை உமிழும். இந்த உயிரிவேதிப் பொருள் காற்றில் கலந்து அடுத்த மரத்துக்குச் செல்லும். அந்த மரம் தம்மை ஆபத்து நெருங்குகிறது என உணர்ந்து, பூச்சித் தாக்குதலை முறியடிக்கும் உயிரிவேதிப் பொருட்களை வேகவேகமாக உற்பத்தி செய்து தன்னைக் காத்துக்கொள்ளும். இதேபோல பூச்சி தாக்குதல், மண்ணில் நீர்ப்பசை இன்மை போன்ற செய்திகளை, வேர்கள் மூலமாக சில தாவரங்கள் வேதிப்பொருட்களை உமிழ்ந்து தெரிவிக்கின்றன என, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. தண்டுகளை வெட்டி வைத்தால்கூட சில தாவரங்கள் வளர்கின்றன. அதுபோல் மனித உடலின் பாகங்கள் வளர்வதில்லையே, ஏன்?
பி.ஜானகி, கோவை.
மனிதன் மற்றும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை எடுத்துக் கொள்வோம். தாயின் முட்டையுடன் தந்தையின் விந்து சேர்ந்து கருமுட்டை உருவாகிறது. ஒரே ஒரு செல் பிரிந்து இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி என, செல்களின் எண்ணிக்கை பெருகி கருவாகி, சுமார் 260 கோடி செல்களுடன் குழந்தை பிறக்கும். ஸ்டெம்செல்கள் தவிர மற்ற செல்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகை செல்களாக மாறிவிடுகின்றன.
விதையில் உள்ள ஆக்குத்திசு (meristem) எனப்படும் மிகச்சிறிய வளர்ச்சி மையத்தில் இருந்துதான் வேர், இலை, தண்டு போன்ற தாவரங்களின் பாகங்கள் உருவாகின்றன. எனவே, வேர் முனை, காம்புகளின் முனை போன்ற பகுதிகளில், வளர்ந்த நிலையிலும் ஆக்குத்திசு இருக்கும். இவ்வாறு ஒரு தாவரத்தின் ஆக்குத்திசு செழிப்பாக உள்ள பகுதியை நட்டுவைத்தால் மட்டுமே தாவரம் வளரும்.
பல்லி போன்ற சில உயிரினங்களின் சில உடற்பகுதிகளில் எந்தவித செல்களையும் உருவாக்கும் திறன் கொண்ட ஸ்டெம் செல்கள் உள்ளன. இதனால்தான் பல்லியின் வால் அறுந்தாலும் புதிய வால் வளர்கிறது. இதுபோன்ற உயிரி நிகழ்வை ஆராய்ந்து, செயற்கை கிட்னி, இதயம் போன்ற உடலுறுப்புகளை உருவாக்க முடியுமா என, ஆய்வுகள் நடந்து வருகின்றன.
