PUBLISHED ON : பிப் 11, 2019

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. சாதாரண நாட்களில் சரியாக மூடிக்கொள்ளும் மரக்கதவுகள் மழை, பனிக்காலங்களில் இயல்பாக மூடுவதில்லையே ஏன்?
கா.மணிகண்டன், 4ஆம் வகுப்பு, முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.
மரங்களும் அதன் பாகங்களும் செல்லுலோசால் ஆனவை. அவற்றின் செல்களில் நீரை உறிஞ்சும் கூழ்மப் பொருள் இருக்கும். இந்தக் கூழ்மங்கள் பருவநிலைக்கு ஏற்ப, நீர் அல்லது ஈரப்பதத்தை அதிகம் உறிஞ்சி, சிறிதளவு வெளியிடும் திறனைப் பெற்றிருக்கும். எனவே, மழைக்காலங்களில் மழை நீர் படிந்து அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, கதவு, ஜன்னல்கள் இயல்பாக மூட முடியாத அளவுக்குப் பெரிதாகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மரக்கதவுகளுக்குப் புதிதாக பெயின்ட் அடித்தால் இப்பிரச்னையைத் தீர்க்க முடியும்.
2. இயற்கையான பற்களைவிட நாமாகக் கட்டிக்கொள்ளும் பொய்ப் பற்கள் சிறப்பாகச் செயற்படுமா?
மு.தமிழ்ச்செல்வி, 8ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
செயற்கைப் பற்கள், தாடை எலும்பில் துளையிட்டு டைட்டானியம் திருகாணி மூலம் பொருத்தப்படுகின்றன. இயற்கைப் பற்கள் தாடையில் உள்ள திசுக்களின் தசைநார்களால் பிணைக்கப்பட்டு உள்ளன. பல் பதிந்துள்ள திசுப்பகுதி தாடை எலும்போடு தசைநார்களால் பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது, இயற்கைப் பல்லுக்கு, நெகிழும் தன்மை உண்டு. ஆனால், செயற்கைப் பற்கள் விறைப்பாக இருக்கும். இதனால், அவை வலிமையானதாகத் தோன்றும். ஆனால், செயற்கைப் பற்களால் உணவுப் பொருட்களைக் கடிக்கும்போது, அதன் அழுத்தம் நேரடியாகத் தாடை எலும்பில் அழுத்தும். இயற்கைப் பற்களில் மேலிருந்து கீழாக அழுத்தம் ஏற்பட்டாலும், தாடைத் தசைகள் பக்கவாட்டில் அசைந்து விலகி, நேரடியாகத் தாடை எலும்பில் செலுத்தும் அழுத்தம் குறையும்.
எனவே, உடல் ஆரோக்கியம் ரீதியிலான காரணங்கள் அன்றி பற்களை நீக்கக்கூடாது. இயற்கைப் பற்கள் இல்லாத நிலையில் மட்டுமே செயற்கைப் பற்களைப் பொருத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.
3. பூமி சுற்றாமல் இருந்தால் இரவில் அனைத்து நட்சத்திரங்களையும் நம்மால் பார்க்க முடியுமா?
ஹேமேந்த்ரா, மின்னஞ்சல்.
பூமி, தன்னைத் தானே சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. தானும் சுற்றாமல் சூரியனையும் சுற்றாமல் இருந்தால், பூமியின் ஒரு பகுதி சூரியனை நோக்கி இருக்கும்; மறுபகுதி எப்போதும் இரவாக இருக்கும். இதனால் இரவு நேர பூமியிலிருந்து வானின் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே காண முடியும்.
ஒருவேளை, தன்னைத் தானே சுற்றியபடி சூரியனைச் சுற்றாமலும் பூமி இருந்தால், பின்புறம் உள்ள விண்வெளி புலப்படாது. மாறாக, தன்னைத்தானே சுற்றாமல் சூரியனை மட்டும் சுற்றிவந்தால், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விண்வெளியின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே புலப்படும்.
அதே சமயம், பூமி தன்னைத் தானே சுழலும் காலமும், சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலமும் ஒன்றாக இருந்தால், பூமியின் ஒரு முகம் எப்போதும் சூரியனை நோக்கி இருக்கும். மறுபுறம் இரவாகவே இருக்கும். இப்போது இரவுப் பகுதி பூமியில் இருந்து ஓராண்டில் முழு விண்வெளியையும் கண்டுவிடலாம்.
தற்போது பூமியின் இயக்க நிலையிலும் வடதுருவத்துக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து தென் வான்கோள விண்மீன்களை காணவே முடியாது. அதுபோல தென்துருவப் பகுதியிலிருந்து துருவ விண்மீன் உட்பட பல்வேறு வட வான்கோள விண்மீன்களை நம்மால் பார்க்க முடியாது.
4. பச்சோந்தி எப்படி சூழலுக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது?
ர.ர.தேஜஸ்வி, 7ஆம் வகுப்பு, அமிர்தா வித்யாலயம், நல்லாம்பாளையம், கோவை.
அன்று கோண்டுவானாவில் (இன்றைய ஆப்பிரிக்கா) 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்த உயிரினம் பச்சோந்தி. சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் இதன் குணம், ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆண்டுகளாகப் புதிராகவே இருந்தது. இதற்கான விடையை 2015இல் சுவிஸ் நாட்டு விஞ்ஞானிகள் ராமன் நிறமாலை பகுப்புமானி (Raman spectroscopy) மூலம் கண்டுபிடித்தார்கள்.
பச்சோந்தியின் மூன்று அடுக்குத் தோல்கள்
1. மேலடுக்கு: ஒளியைக் கடத்தும்.
2. கீழடுக்கு: ஒளியைப் பிரதிபலிக்கும்
3. இடை அடுக்கு: விரைவாக நிறத்தை மாற்றிக் கொள்ள உதவும்
இடை அடுக்கில் உள்ள இரிடோபோர் (Iridophores) செல்களில் நுண்பளிங்குகள் உள்ளன. இவையே, ஒளியைப் பிரதிபலிக்கும் நிறமிப் பொருள். பச்சைய நிறமி குளோரோபில், எல்லா நிற ஒளி அலைகளையும் உறிஞ்சிக்கொண்டு பச்சை நிறத்தை மட்டுமே பிரதிபலிக்கும். எனவேதான், இலைகள் பச்சை நிறத்தில் தென்படுகின்றன. பச்சோந்தியின் நுண்பளிங்கு இரிடோபோர்கள், நிறங்களின் அடர்த்தியைக் கூட்டிக் குறைத்து பிரதிபலிக்கும் அலைநீளத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
