மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. பிரபஞ்ச வெடிப்பு என்றால் என்ன?
பா.நரேன் கார்த்திக், 9ஆம் வகுப்பு, அருள்மலர் மெட்ரிக். பள்ளி, கே.கே.நகர், மதுரை.
பிரபஞ்ச வெடிப்பு (Big bang) என்பது, பலூன் வெடித்தல் போன்ற நிகழ்வு அல்ல! கேக் செய்யும் மாவை மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்போது, எப்படி உப்புகிறதோ அதுபோன்றதொரு நிகழ்வுதான் பிரபஞ்ச வெடிப்பு. இது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது என மதிப்பீடு செய்துள்ளனர். ஒரு காலத்தில் நாம் இருக்கும் பால்வீதி மண்டல கேலக்ஸி தான் மொத்த பிரபஞ்சமும் என கருதினர். அதன் பின்னர் மேலும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி வந்தபிறகு, கோடி கோடி கேலக்ஸிகள் உள்ளன என தெரியவந்தது. எனவே, சிலர் நமது கேலக்ஸி தான் அண்டம் என்றும், பற்பல அண்டங்கள் நிறைந்தது பேரண்டம் எனவும் பொருள் கொள்கின்றனர். பெரும் வெடிப்பு நிகழ்ந்தபோது கேலக்ஸிகள், விண்மீன்கள் என எதுவும் இருக்கவில்லை. பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்ல மெல்ல கேலக்ஸிகள், விண்மீன்கள் திரட்சி பெற்று உருவாயின என்பதே அறிவியல் சொல்லும் உண்மை.
2. மனிதனைப் போல விலங்குகளுக்கும் டி.என்.ஏ. அமைப்பு உண்டா?
வ.பாலசுரேந்தர், 9ஆம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, பாதூர், விழுப்புரம்.
டி.என்.ஏ. என்பது புத்தகம் எனில், அதில் உள்ள ஜீன் குறிப்பிட்ட புரத உற்பத்தியின் செய்முறைக் குறிப்பு ஆகும். புரதங்களைத் தயாரிக்கும் செய்முறைத் தகவல்களை அடங்கிய தொகுப்பு, டி.என்.ஏ. அதன் அளவை பைட், KB, MB, GB என்ற அளவில் அளவிடுவார்கள். வைரஸ் போன்ற உயிரிகளில் டி.என்.ஏ. KB அளவில் தான் இருக்கும். பாக்டீரியா போன்ற உயிரிகளிடையே MB அளவில் இருக்கும். சிக்கலான உடலமைப்பு கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளில் டி.என்.ஏ., GB அளவில் இருக்கும்.
எல்லா உயிரிகளிடமும் A, T, G, C எனும் நான்கு எழுத்துகளால் தான் டி.என்.ஏ. ஆக்கப்பட்டிருக்கிறது.
3. சில பூக்களின் துர்நாற்றத்திற்குக் காரணம் என்ன?
சு.ஜான்சிராணி, 8ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
நாம் முகரும் வாசனை, துர்நாற்றம் போன்றவை மணம் பற்றிய மனிதனின் மதிப்பீடுகள்தான். அதுபோல அழுகிய உடல்களை உண்டு வாழும் பூச்சிக்கு, அந்தத் துர்நாற்றம் தான் நல்ல மணம். அவ்வாறே, சில பூக்கள் தனது மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சியைக் கவர்ந்து இழுக்க, அழுகிய துர்நாற்றத்தை வெளியிடுகின்றன. கூம்பு போன்ற வடிவத்தில் பழுப்பும் மஞ்சளும் கலந்து கண்ணைக் கவரும் வண்ணத்திலும் மலரும் அச்சி (Oroxylum) எனும் தாவரத்தின் பூ, மூக்கைப் பொத்திக் கொள்ளச் செய்யும் அளவுக்குத் துர்நாற்றம் உடையது. ஆனால், அந்த மலரை உண்ணும் பூச்சிக்கு அதுவே இனிய மணம்!
4. ஐந்தறிவு உயிரினங்களுக்கு ஞாபக சக்தி உண்டா? சிறந்த ஞாபக சக்தி கொண்ட உயிரினம் எது?
பி.ஆர்.ரேஷ்மா, 8ஆம் வகுப்பு, ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளி, சிறுபூலுவபட்டி, திருப்பூர்.
வாய்ப்பாட்டை நினைவில் வைத்திருத்தல், திருக்குறள் ஒப்பித்தல் போன்ற செயல்கள் மட்டும் 'ஞாபகம்' அல்ல. பல்வேறு வாசனைகளை நினைவு கொள்ளும் நாய், மேய்ச்சலுக்குப் பிறகு தொழுவத்துக்குத் தானே வந்து சேரும் மாடு, குஞ்சுகள் பொரிக்க தாம் பிறந்த அதே கடற்கரைக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பும் ஓலிவ் ரிட்லி ஆமைகள், இவ்வாறு, பழக்கத்தால் ஏற்படும் ஞாபகம், பிறப்பின் போதே இருக்கும் ஞாபகம் என்ற இரண்டைத் தவிர கற்றல் திறனால் வரும் ஞாபகம் சிறப்பானது.
மூளையின் வெவ்வேறு பகுதிகளில் பதியப்படும் நினைவுகள்:
* பின்மேடு (Hippocampus)
சம்பவங்கள் குறித்த நினைவுகள்
* முன் மடல் (Neocortex)
மொழியாற்றல், பகுத்தறிதல் போன்ற நினைவுகள்
* அமிக்டலா (Amygdala)
மகிழ்ச்சி, துக்கம், அவமானம், அன்பு, பரிவு, அச்சம் போன்ற உணர்வுகளோடு தொடர்புடைய நினைவுகள்
* அடிமூளைத் திரள் (Basal ganglia)
சைக்கிள் ஓட்டுதல், பம்பரம் விடுதல், நடனம் போன்ற உடலியக்கச் செயல் நினைவுகள்
* சிறுமூளை (Cerebellum)
ஊசியில் நூல் கோத்தல் போன்ற நுட்பச் செயற்பாடுகளின் நினைவுகள்.
பரிணாம வளர்ச்சிநிலை, ஒவ்வொரு உயிரினத்தின் நினைவுகளைப் பொறுத்தே மூளைத் திறன்கள் அமையும்.

