தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : ஜூன் 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

மழைநீர் கடலில் கலந்தாலும் அதன் உப்புத்தன்மை குறைவதில்லையே ஏன்?

ராகேஷ் நாகநாதன், 6ஆம் வகுப்பு, லோட்டஸ் ஏ.என்.வெங்கடாசலம் செட்டியார் பள்ளி, தேவகோட்டை.


ஒரு தண்ணீர் பாட்டிலில் நீரை நிரப்பி, ஒரு துகள் சர்க்கரையைக் கரைத்தால், அதில் இனிப்புச் சுவை இருக்கவே இருக்காது. அடுத்ததாக இரண்டு கரண்டி சர்க்கரையைக் கலந்தால், இனிப்புச் சுவை தெரியும். மேலும் கூடுதலாகச் சர்க்கரையைக் கலந்தால், கூடுதலாக இனிக்கும். ஆகவே, கலவையின் செறிவுத்தன்மை சார்ந்தே அதன் குணம் வெளிப்படுகிறது.

அந்தப் பாட்டிலின் கழுத்துவரை இனிப்புச் சுவையுள்ள நீரை வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள காலி இடத்தில் நன்னீரைச் சேர்க்கவும். இப்போதும் இனிப்புச் சுவையில் வேறுபாடு தெரியாது. இதுபோலவே எவ்வளவு நன்னீரைக் கடலில் கலந்தாலும் கடலின் உப்புத் தன்மை மாறாது.

உலகில் உள்ள மொத்த நீரில், சுமார் 96.5 சதவீதம் கடலில் உப்பு நீராக உள்ளது. சுமார் 3.5 சதவீதம் மட்டுமே ஆறு, குளம், ஏரி, பனிமலை என நன்னீராக உள்ளது. நிலத்தின் மீது நன்னீராக உள்ள 3.5 சதவீதம் நீரை 96.5 சதவீதம் உப்பு நீரில் கலந்தால் எந்த வேறுபாடும் தெரியாது. இதையே 'கடலில் கரைத்த பெருங்காயம் போல' என்ற சொலவடை சுட்டிக் காட்டுகிறது.

சந்திரன் தன் சுற்றுப் பாதையை மாற்றி வேறு பாதையில் சுற்றுமா?

வி.ஸ்டெஃபி வின்ஸி, 8ஆம் வகுப்பு, புனித ஜோசப் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி, பெரம்பூர், சென்னை.


நீள்வட்ட வடிவில் நிலவின் பாதை உள்ளது. சுமார் 27.3 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது என்பது ஓரளவுக்கே சரியான தகவல். பூமியிலிருந்து நிலவின் சராசரி தொலைவு, ஆண்டுதோறும் மூன்று சென்டி மீட்டர் கூடிக்கொண்டே போகிறது. எனவே நுணுக்கமாகப் பார்த்தால் நிலவின் பாதை நீள்வட்டம் போன்ற மூடிய பாதை அல்ல; மாறாக விரிந்து கொண்டே செல்லும் சுருள் பாதை என்று தெரியும். இதிலும் தள்ளாட்டம் போட்டுத்தான் நிலவின் பயணம் அமையும். சூரியனின் ஈர்ப்பு மற்றும் பிறகோள்களின் ஈர்ப்பு முதலியன நிலவின் பாதையில் மிகமிக நுணுக்கமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

சிறுசிறு நுணுக்க வேறுபாடுகள் இருந்தாலும், நிலவின் பாதையை நீள்வட்டம் என தோராயமாகக் கூறலாம். வேறு ஏதாவது ஒரு வான்பொருள் கூடுதல் உந்தம் கொண்டு மோதி, நிலவின் திசைவேகத்தில் மாற்றம் ஏற்படுத்தினால் தவிர, நிலவின் பாதையில் மாற்றம் ஏற்படாது.

பூமி சுழல்வது, அதன் ஈர்ப்புவிசை போன்ற அடிப்படை விஷயங்களை நம்மால் உணர முடிவதில்லையே ஏன்?

வி.ரஞ்சனி, 11ஆம் வகுப்பு, ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமி வித்யா மந்திர், மின்னஞ்சல்.


'தான் நீந்தும் நீர், மீனுக்குத் தெரியாது' என்பார்கள். அதுபோலவே இவையும் நமக்குத் தெரிவதில்லை. முதலில் பூமி சுழல்வதைப் பார்ப்போம். குலுங்காமல் சீரான ஓட்டத்தில் செல்லும் பேருந்தில் தூங்கும்போது, பயணிப்பதை நம்மால் உணர முடியாது. அதுபோல், ஆகாய விமானத்தில் பறக்கும்போது வெளியே பார்க்கவில்லை என்றால் விமானம் பறக்கிறது என்ற உணர்வே வராது. அதே சமயம் பேருந்து திடீரென பிரேக் பிடித்தால் அல்லது வேகத்தைக் கூட்டினால், பயணிப்பதை நம்மால் உணர முடியும். பூமி சீரான வேகத்தில் சுழல்வதால், நம்மால் அதை உணர முடிவதில்லை.

உதாரணமாக, விசை கொடுத்தே தரையில் உள்ள ஒரு பையை நாம் தூக்குகிறோம். அந்த விசை தரைக்கு எதிர்த்திசையில் உள்ளதைக் கவனியுங்கள். அதாவது பையின் மீது பூமி செலுத்தும் ஈர்ப்பு விசையை, அதன் எதிர்த் திசையில் விசை செலுத்தி தூக்குவதன் மூலம் நாம் சமன் செய்கிறோம். அதன் விளைவாகப் பையைத் தரையை விட்டு உயர்த்துகிறோம்; தோளில் சுமக்கும்போது பை ஏற்படுத்தும் கீழ்நோக்கிய ஈர்ப்பு விசை காரணமாகவே தோளில் அழுத்தத்தை உணர்கிறோம்.

தெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?

வி.அர்ஜுன், 12ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சேலம்.


தெர்மாகோல் பொருட்கள், பாலிஸ்ட்ரீன் (Polystyrene) எனும் செயற்கைப் பொருள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. சேதமடையாமல் சரக்குகளைப் பாதுகாப்பாக அனுப்ப வெப்பம் அல்லது குளிர் காப்புறையைப் பயன்படுத்துகிறார்கள். கெட்டியான திடப் பொருள்போல உள்ளே சிறுசிறு குமிழ்களை உருவாக்கி அல்லது காற்றை நிரப்பி நுரை போலவும் தெர்மாகோல் தயாரிக்கலாம். சில சமயம் பீன் எனும் சிறு பந்துகள் போலவும் உருவாக்குகிறார்கள். அந்தந்தத் தேவையைப் பொறுத்து, பல்வேறு வடிவில் தெர்மாகோல் தயார் செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us