தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : ஆக 26, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

நட்சத்திரங்களுக்கு மின்னும் தன்மை எப்படி வந்தது?

எம்.ஆசிகா, 12ஆம் வகுப்பு, பிரின்ஸ் உயர்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.


எல்லா நட்சத்திரங்களும் சூரியன் போன்ற வான் பொருட்களே! பெரும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற பொருட்கள் மிகுந்து இருக்கும். அதன் மையத்தில் பெரும் அழுத்தம் காரணமாக உயர் வெப்பநிலையில் இருக்கும். அந்த மீ அழுத்தம், மீ வெப்ப நிலையில் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஹீலியம் அணுக்கருவாக மாறும். சில விண்மீன்களில் ஹீலியம் அணுக்கருக்கள் பிணைந்து, கார்பன் அணு உருவாகும். இவ்வாறு அணுக்கருப் பிணைவு நடைபெறும்போது, வெளிப்படும் ஆற்றலே சூரியன் உட்பட விண்மீன்கள் ஒளிரக் காரணம்.

பூமியின் வளிமண்டலம் முழுவதும் ஒரே வெப்ப நிலையில் இருக்காது. எனவே காற்று அடுக்குகள் அங்கும் இங்கும் நகரும். ஒரு காற்று அடுக்கின் மீதுள்ள இன்னொரு காற்று அடுக்கு வேறு திசையில் செல்லும். இந்தக் காற்று அடுக்கின் வழியாகவே விண்மீனின் ஒளிக்கதிர்கள் வர வேண்டும். அவ்வாறு வரும் ஒளிக்கதிர் சற்றே ஒளிவிலகல் அடையும். ஒவ்வொரு கணமும் அங்கும் இங்குமென வெவ்வேறு திசைகளில் ஒளிவிலகல் ஏற்படுவதால், விண்மீன்கள் மின்னுவது போலத் தோற்றம் தருகின்றன. வளிமண்டலத்துக்கு வெளியே சென்று விண்மீன்களைப் பார்த்தால் அவை மின்னாமல், தொடர்ந்து சீராகவே ஒளிரும்.

பூமி இப்போது சுற்றுவதைவிட இன்னும் வேகமாகச் சுற்றினால் என்ன ஆகும்?

டி.ஆர்.சந்திரசேகரன், 9ஆம் வகுப்பு, பி.எஸ்.பி.பி. பள்ளி, சென்னை.


ஒரு நாள் என்ற கால அளவு குறையும். சீக்கிரமாகத் தூங்கி சட்டென்று விழிப்பு ஏற்படும். இன்றைக்கு இருப்பதைவிட சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கூடுதல் வேகத்தில் பூமி சுற்றியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அப்போது ஒரு நாள் என்பது வெறும் ஆறு மணி நேரம் மட்டுமே! சுமார் மூன்று மணி நேரம் பகல், மூன்று மணி நேரம் இரவு.

நிலா தன் ஈர்ப்பு விசையால் கடல் பரப்பை தன்னை நோக்கி இழுக்கிறது என நாம் அறிவோம். இதனால் தினமும் கடலின் ஒவ்வொரு புள்ளியிலும் கடல் ஓதம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் ஓதம் ஒருவகையில் உராய்வு விசைதான். எனவே பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போகிறது. இதன் மறுபுறத்தில் நிலவின் தொலைவு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இன்றைக்கு உயிரிகள் எல்லாம் சுமார் 24 மணி நேரம் எனும் நிலைக்கு பழகிவிட்டன. திடீரென பூமி வேகமாகச் சுற்றத் தொடங்கி ஒரு நாள் என்பது பத்து மணிநேரம் என ஆகிப்போனால் இன்றைய உயிரிகள் இதனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்து போகும்.

விலங்குகளின் மோப்ப சக்தி எத்தகையது?

அ.மாணிக்கம், 10ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.


பள்ளி முடிந்து, பசியோடு வீட்டுக்கு வரும்போது, மூக்கைத் துளைக்கும் 'கம கம' வாசம், என்ன உணவு தயாராகி இருக்கிறது என்பதை நமக்குத் தெரிவிக்கும். அதுபோல பல மணங்கள் எது உணவு, எது உணவு இல்லையென விலங்குகளுக்கு உணர்த்தும். தேன் செறிவான மலரின் வாசமும், மகரந்தச் சேர்க்கை முடிந்து தேன் தீர்ந்த பின் வரும் வாசமும் ஒன்றாக இருக்காது. இதைப் பட்டாம்பூச்சி உணரும். இவ்வாறு சுற்றிலும் உள்ள வாசனை விலங்குகளுக்குப் பல செய்திகளைக் கூறும்.

விலங்குகளின் மோப்பக் குழிவணைச் சவ்வு (Olfactory epithelium) அளவு, மனிதனைவிட அதிகம். அதனால், எளிதில் விலங்குகள் கூடுதல் திறனுடன் வாசனையை மோப்பம் பிடிக்கின்றன. மேலும் மூளையின் மோப்ப நரம்புக் குமிழ்கள் (Olfactory bulb) விலங்குகளுக்கு அதிகம். மேலும் முதுகெலும்புள்ள விலங்குகளுக்கு கூடுதலாக நுகரும் மண்டலம் (Vomeronasal organ) உண்டு. மனிதனிடத்தில் இது தேய்ந்த நிலையில் மட்டுமே உள்ளது.

பூக்களில் தேன் உள்ளதை தேனீ அறியும். நீர் நிலைகளை யானை கண்டுபிடிக்கும் என, ஒவ்வொரு விலங்குக்கும் அதன் தகவமைப்புக்கு ஏற்ப மோப்ப சக்தி இருக்கிறது.



மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வித்தியாசமாக இருப்பது ஏன்?

கே.தனராஜ், 8ஆம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, மதுரை.


இது ஒரு நம்பிக்கையே! மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கூடுதல் தீவிரமடைவார்கள் என பலரும் நம்புகிறார்கள். அதைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் நோயாளிகளை மறைமுகமாகத் தூண்டுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

அமாவாசை அன்று மனநல பாதிப்பு தீவிரமடையும் என நம்பும் நோயாளிகளுக்கு அமாவாசை அல்லாத ஒரு நாளை அமாவாசை என நம்ப வைத்து ஒரு சோதனை நடத்திப் பார்த்தார்கள். சோதனையில் அமாவாசை அல்லாத அந்த தினத்திலும் அவர்களது மனநலம் மோசமடைந்தது; மெய்யான அமாவாசை அன்று அவர்கள் எப்போதும் போலவே இருந்தார்கள் என ஆய்வு நிறுவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us