PUBLISHED ON : நவ 18, 2019

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி.
1. அதிக எடையுள்ள பறவைகளில் ஒன்றான மியூட் ஸ்வான் (Mute swan) எவ்வாறு பறக்கிறது?
சூ.இ. வருண் ஆதித்யா, 8ஆம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், மதுரை.
டைனோசர்கள் (Dinosaurs) வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த டெரடோர்ன்ஸ் (Teratorns) எனும் பறவையுடன் ஒப்பிட்டால், 'மியூட் ஸ்வான்' போன்ற பறவைகள் சிறியவையே. சராசரியாக டெரடோர்ன்ஸ் பறவையின் எடை 120 கிலோ; மூன்று மீட்டர் அகலம் கொண்ட இறக்கைகள். இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 'மியூட் ஸ்வானின்' எடை சுமார் 18 முதல் -20 கிலோ தான்.
'மியூட் ஸ்வான்' எடையைவிட பல ஆயிரம் மடங்கு அதிக எடை கொண்டது ஆகாய விமானம். அதுவே வானில் பறக்கும்போது, 'மியூட் ஸ்வான்' பறப்பதில் வியப்பில்லை. பெர்னோலி தத்துவம் போன்ற காற்று இயக்கவியல் (Aerodynamics) தத்துவங்கள் காற்றைவிட அதிக எடைகொண்ட பொருட்கள் பறப்பதை விளக்குகின்றன. இறக்கைகளின் வடிவமைப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.
2. வேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது?
ஜி.இரத்தினவேல், 8ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.கே.வி. உயர்நிலைப் பள்ளி, கோவை.
நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மெல்லிய உறிஞ்சு குழாயை (straw) வைக்கவும். நாம் உறிஞ்சாமலேயே குவளையின் நீர் மட்டத்தைவிட சற்றே கூடுதல் உயரத்தில் ஸ்ட்ராவின் நீர் மட்டம் இருக்கும். எப்படி ஸ்ட்ராவில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலே நீர்மட்டம் உயர்ந்தது? இதைத்தான் தந்துகிக் கவர்ச்சி (Capillary action) என்பார்கள். வேர் வழியே நீர் தாவரத்தின் மேல் பகுதியில் உள்ள இலைகளுக்குச் செல்வதும், விளக்கின் திரி வழியே எண்ணெய் மேலே சென்று எரிவதும் இதே தத்துவம்தான்.
3. சோப்பு பல்வேறு நிறங்களில் இருந்தாலும் அவற்றின் நுரை மட்டும் ஏன் வெண்மையாகவே இருக்கிறது?
பெ.ஆ. பிரவீன், 9ஆம் வகுப்பு, பிரசிடென்ஸி மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
எடுத்துக்காட்டாக மஞ்சள் நிறத்தைப் பிரதிபலித்து, மற்ற நிறங்களை உறிஞ்சிக்கொள்ளும்போது, அந்தப் பொருள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். அந்த வகையில் எல்லா நிறத்தையும் பிரதிபலிக்கும்போது, அது வெண்மை நிறத்தில் காட்சி தரும். காற்று நிரம்பிய சோப்பு மென்படலத்தின் மேலே குமிழி சூழ்கிறது. சோப்பு மென் படலம் கண்ணாடிபோலச் செயற்பட்டு, எல்லா நிறங்களையும் பிரதிபலிக்கும். எனவே தான், எல்லா சோப்புக் குமிழிகளும் வெண்மை நிறத்தில் காட்சி தருகின்றன.
4. மேலே எவ்வளவு தூரம் சென்றால், பூமியின் முழுத் தோற்றத்தையும் பூமி சுழல்வதையும் பார்க்க முடியும்?
பி.ஸ்ரீசுதன், 10ஆம் வகுப்பு, ஸ்ரீ வள்ளி வரதராஜ் மெட்ரிக் பள்ளி, பெரியகுளம், தேனி.
பூமி ஓர் உருண்டை. எனவே, அதிகபட்சம் அதன் பாதி அளவைத்தான் பார்க்க முடியும். பார்த்தல் என்றால் என்ன? பூமிப் பந்தின் தொடுகோடு ஒரு புள்ளியில் வந்து அடைய வேண்டும். வட்டத்தின் இரு முனைகளிலிருந்து தொடுகோடு வரைந்தால் அவை இணைகோடுகளாகவே அமையும். எனவே, பாதிக் கோளத்தைக்கூட ஒரே சமயத்தில் பார்க்க முடியாது.
வலப்புறம் உள்ள படத்தைப் பாருங்கள். கோளத்தின் முன்னே நின்று பார்க்கும்போது, பார்வைக்கோடு அந்தக் கோளத்தின் தொடுகோடாக அமையும் பகுதி மட்டுமே தெரியும். மீதமுள்ள பகுதிகள் தெரியாது. குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதிகபட்சம் எவ்வளவு பூமி பரப்பைக் பார்க்க முடியும்?
h என்ற உயரத்தில் உள்ளபோது தொடுவானப் பகுதி அளவை F = 50%x [h / (h + R)] }என்ற சூத்திரம் தரும். இதில் F என்பது பூமிக் கோளத்தில் எத்தனை சதவீதம் நமது கண்களுக்குப் புலப்படும் என்பதாகும். R பூமியின் ஆரம். மீதமுள்ள பகுதி கண்பார்வையில் இருக்காது.
உயரமான ஒரு நபரின் சராசரி உயரம் ஆறு அடி. அதாவது சுமார் 0.002 கி.மீ. பூமியின் ஆரம் சுமார் 6,370 கி.மீ. எனவே, மேலே உள்ள சூத்திரத்தின்படி F = 0.000016% பூமிப் பரப்பைத்தான் சமதள பூமியில் நிற்கும்போது நம்மால் பார்க்க முடியும்.
பூமியின் மேற்பரப்பு சுமார் 5,101 லட்சம் சதுர கி.மீ. எனவே, 0.000016% பூமிப் பரப்பு என்பது சுமார் 82 சதுர கி.மீ. வட்டம். எனவே, இந்த வட்டத்தின் ஆரம் சுமார் ஐந்து கி.மீ. அதாவது தெளிந்த வானம் இருக்கும்போது, கடலின் எல்லையிலிருந்து தென்படும் தொடுவானம் சுமார் ஐந்து கி.மீ. தொலைவு மட்டுமே. புவிநிலைச் சுற்றுப்பாதை செயற்கைக்கோள் செல்லும் 35,800 கி.மீ. உயரத்தில் 42.4% பூமி மட்டுமே தெரியும். பூமியில் இருந்து நிலா இருக்கும் தொலைவில் நாம் இருந்தால், சுமார் 49% பூமியைக் காணமுடியும்.
