
1. பூமி வட்டமாக இருப்பதற்கு அறிவியல்ரீதியாக என்னென்ன ஆதாரங்கள் உள்ளன?
கே. காளிசெல்வன், 8ஆம் வகுப்பு, ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, உளுந்தூர்பேட்டை.
பூமியின் வடிவம் வட்டம் என நாம் கூறினாலும் உண்மையில் அதன் வடிவம் கோளம். உதாரணத்திற்கு, கடலில் பயணிக்கும் கப்பல் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அது தொலைவு செல்லச் செல்ல அதன் பார்வை கோணம் குறையும். எனவே நமக்குச் சின்னதாகத் தெரியும். ஒருவேளை பூமி சமதளப் பரப்பாக இருந்தால் எவ்வளவு தொலைவு சென்றாலும் கப்பல் சின்னதாகத் தெரிந்துகொண்டே இருக்கும். தொலைநோக்கி வழியே காண வேண்டிவரும்.
அதே சமயம் பூமி கோளவடிவம் எனில் குறிப்பிட்ட தொலைவு சென்ற பின் கப்பல் பார்வைக்குச் சிறியதாகத் தெரிவதுடன் கப்பலின் அடிப்பாகம் தென்படாது. வளைந்த பூமியில் கப்பலின் அடிப்பாகம் மறைந்துபோகும். தொலைவு செல்லச் செல்ல அதன் உருவம் கொஞ்சமாக மறைந்து போகும்.
பூமியின் நிழல் நிலவில் விழுந்துதான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நிலவில் விழும் பூமியின் நிழல், வில் அமைப்பு போல காணப்படுகிறது. எனவே, பூமியின் நிழல், வட்டம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். பூமியின் எந்த திசையிலிருந்து சூரிய ஒளி பட்டாலும் அதன் நிழல் வட்டம் தான். வெறும் கோளம் மட்டுமே எல்லா திசையிலிருந்தும் வட்ட வடிவ நிழலை ஏற்படுத்த முடியும். இதிலிருந்தும் பூமியின் வடிவத்தைக் கண்டுபிடிக்கலாம்.
2. சூரிய சக்தி அமைப்பு எவ்வாறு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது?
பா.சஞ்சய், 10ஆம் வகுப்பு, நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், சென்னை.
ஒளிமின் விளைவு என்பதுதான் சூரிய மின்கலங்களின் அடிப்படை. சார்பியல் தத்துவத்துக்காக ஐன்ஸ்டீன் அறியப்பட்டாலும், அவருக்கு நோபல் பரிசு வாங்கித் தந்தது இந்த விளைவுக்கான இயற்பியல் தத்துவத்தை உருவாகியதுதான்! போட்டான் என்கிற ஒளித்துகள் சில உலோகத் தகடுகளின் மீது விழும்போது, அந்த உலோகத் தகட்டிலிருந்து எலக்ட்ரான்கள் வெளியே சிதறும் என 1887ஆம் ஆண்டு ஹெர்ட்ஸ் எனும் ஆய்வாளர் கண்டார். இந்த எலக்ட்ரான்கள் உலோகத்தின் அருகே உள்ள காற்றில் கரைந்துவிடும். இந்த எலக்ட்ரான்களை வீணடிக்காமல் சேகரித்து அதைக்கொண்டு மின்னழுத்தம் உருவாக்கினால் மின்னோட்டம் ஏற்படும். இதைத்தான் ஒளிமின்னழுத்த விளைவு என்கிறோம். 1839இல் அலெக்சாண்டர் எட்மண்ட் பெக்கெரல் இந்த விளைவைக் கண்டுபிடித்தார்.
சூரியக்கலம் (solar cell) ஒரு மேம்பட்ட அமைப்பு. இவை சிலிக்கானின் அடுக்கைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சூரிய ஒளியில் சிலிகானின் எலக்ட்ரான்கள் கிளர்ந்து வெளிப்படும். அவ்வாறு வெளியேறும் எலக்ட்ரான்கள் p-n சந்தி வழியே பாயும்போது, அவை p வகைப் பகுதியிலுள்ள துளைகளுடன் சேர்கின்றன. இந்த மின்னழுத்தத்தை வைத்துத்தான் மின்னோட்டம் உருவாகிறது.
3. உடலின் எந்தப் பகுதியில் எச்சில் சுரக்கிறது? அதன் பயன் என்ன?
ஆ.திவ்யதர்ஷினி, 6ஆம் வகுப்பு, மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளி, காஞ்சிபுரம்.
வாயில் உருவாகும் ஒரு நீர்மமே, எச்சில். குறிப்பாக, அமிலேஸ் என்கிற என்சைம் (நொதியம்) கொண்ட கலவை இது. வாயில் கன்னச்சுரப்பி (Parotid gland), கீழ்த்தாடைச் சுரப்பி (Submandibular gland) மற்றும் கீழ்நாச் சுரப்பி (Sublingual gland) என்கிற மூன்று பெரிய சுரப்பிகள் உள்ளன. இதுதவிர நாக்கு, கன்னம், உதடு, மேலண்ணம் போன்ற இடங்களில் சிறிய சுரப்பிகள் உள்ளன.
சராசரி மனிதர்களுக்கு ஒரு நாளில் சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் சுரக்கும்.
நம் உணவு வயிறுக்குச் சென்றபின் தான் செரிமானம் நடப்பதாகக் கருதுகிறோம். ஆனால், வாயிலேயே செரிமானம் தொடங்கிவிடுகிறது. உமிழ்நீரில் உள்ள அமிலேசு என்னும் என்ஸைம், கார்போஹைட்ரேட் மாவுப் பொருளோடு வினை புரிகிறது. குளூகோஸ் போன்ற சர்க்கரைப் பொருளாக மாற்ற உமிழ்நீர் உதவுகிறது. மேலும் உடலுக்கு நீர் வேண்டும் என குறிப்பால் உணர்த்துவதும் உமிழ்நீரே!
மனிதர்களுக்கு மட்டுமின்றி, முதுகெலும்புள்ள எல்லா விலங்குகளுக்கும் உள்ள பொதுவான உடலியல் கூறு உமிழ்நீர்.
4. டேபிள் ஃபேனில் காற்று முன்புறம் மட்டும் வருகிறது. பின்புறம் வருவதில்லையே ஏன்?
கி.தே.தேவதர்ஷினி, 12ஆம் வகுப்பு, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
படகில் துடுப்பைத் தள்ளும்போது நீர் பின்னே செல்வதுபோல, மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் தள்ளுகின்றன. எல்லா மின்விசிறிகளின் இறக்கைகளும் குறிப்பிட்ட கோணத்தில் வளைந்து இருக்கும். கடிகார எதிர்திசையில் சுழலும் இவற்றைக் கூர்ந்து கவனித்தால், சுற்றும் திசை நோக்கியுள்ள விளிம்புப்பகுதி உயர்ந்தும் பின்பகுதி தாழ்ந்தும் இருக்கும். எனவே தான், அவை சுழலும்போது அவற்றின் பின்பகுதியில் உள்ள காற்றை உள்ளிழுத்து முன்னே தள்ளுகிறது. சில மேலை நாடுகளில் குளிர் காலத்தில் வீட்டுக் கூரையின் அருகே உள்ள வெப்பக்காற்றைக் கீழ்நோக்கித் தள்ள மின்விசிறி கடிகார திசையில் சுழலும். சமையலறை மற்றும் கழிப்பிடங்களில் காற்றை வெளியே தள்ள அமைக்கப்படும் மின்விசிறிகளும் இவ்வாறே செயற்படுகின்றன. அங்கே காற்று பின்புறமாகத் தள்ளப்படுகிறது.
மின் விசிறியில் உள்ள இறக்கைகள் அசையும்போது, காற்றோட்டம் ஏற்படுகிறது. அந்தக் காலத்தில் பனையோலை முதலியவற்றால் விசிறி செய்யப்பட்டது. அதன் பின்னர் கூரையில் விசிறிபோல தடிமனான துணியைக் கட்டி கயிறு கொண்டு இழுத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும் முறையை ஏற்படுத்தினர். புழுக்கமான வானிலையில் உடலில் வியர்வை ஏற்படும்போது, அதன் மீது காற்றுப்படச் செய்தால் சில்லென்று இதமாக இருக்கும்.

