
கோமாளி மீன்
ஆங்கிலப் பெயர்கள்: 'கிளோவ்ன் ஃபிஷ்' (Clown Fish), 'அனிமோன் ஃபிஷ்' (Anemone Fish)
உயிரியல் பெயர்: 'ஆம்பிபிரியானினே' (Amphiprioninae)
நீளம்: 18 செ.மீ.
ஆயுட்காலம்: 8 ஆண்டுகள்
ஆரஞ்சு, வெள்ளைப் பட்டைகளுடன் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடன் இருக்கும் கடல் வாழ்மீன் கோமாளி மீன். பிரபலமான குழந்தைகள் திரைப்படமான 'ஃபைண்டிங் நீமோ' (Finding Nemo) படத்தில் இதைப் பார்த்திருப்பீர்கள். வெப்ப மண்டலப் பவளத் திட்டுகளில் காணப்படும் இந்த மீன் 'போமாசென்ட்ரிடே' உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் 28 துணை இனங்கள் உள்ளன. இந்திய, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள பவளத்திட்டுப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. கடலுக்குள் வாழும் கடல் சாமந்தி என்ற நச்சுத்தன்மை உள்ள உயிரினத்திற்குள் அதிகம் வசிக்கின்றன. ஆரஞ்சு, வெள்ளை மட்டுமின்றி பல நிறங்களிலும் இந்த மீன்கள் உள்ளன. எப்போதும் கூட்டமாகவே திரிகின்றன.
அனைத்துண்ணியான இந்த மீன்கள் கடல்வாழ் மிதவை உயிரினங்கள், கடற்பாசி போன்றவற்றை உணவாக உண்கின்றன. கடல் சாமந்தி உண்ணும் உணவின் மீதியையும் அவற்றின் மீதுள்ள ஒட்டுண்ணிகளையும் சாப்பிடும். பெரிய மீன்கள், சுறா, ஈல் போன்றவை இவற்றின் எதிரிகள். சிறிய மீன்களாக இருப்பதாலும், கூட்டமாக நீந்துவதாலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோமாளி மீன்களை பெரிய மீன்கள் விழுங்கி விடுகின்றன. பவளப்பாறைப் பகுதியில் உள்ள இடுக்குகளில் இவை முட்டைகளை இடுகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் தன்மை உடையது. முட்டைகளை ஆண் மீன்கள் பாதுகாக்கின்றன. கோமாளி மீன்கள் சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்து, தங்களைச் சுற்றி ஒரு போர்வை போல உருவாக்கிக்கொள்கின்றன. இந்தத் திரவம்தான் கடல் சாமந்தியிடமிருந்து கோமாளி மீன்களைக் காப்பாற்றுகிறது.
- ப.கோபாலகிருஷ்ணன்