PUBLISHED ON : அக் 02, 2017
மீன் கொத்தி
ஆங்கிலப் பெயர்: 'கிங் ஃபிஷர்' (King Fisher)
உயிரியல் பெயர்: 'அல்சிடைன்ஸ்' (Alcedines)
நீளம்: 10 செ.மீ.
எடை: 15 கிராம்
நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப்படும் வண்ணமயமான சிறு பறவை மீன் கொத்தி. 'அசிடைனிடே' குடும்பத்தைச் சேர்ந்த இந்த அழகிய பறவைகளை நதிக்கரைகள், நீர்நிலைகள், மரக்கிளைகள் என பல இடங்களில் காணலாம். இவற்றில் சுமார் 90க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. 'க்விக்' 'க்விக்' என்ற ஒலியெழுப்பியபடி தலைகீழாகப் பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் நீருக்கடியில் உள்ள மீன்களைப் பிடித்து வேகமாகப் பறந்து செல்லும். கண்களை முன் பின் அசைத்து, துல்லியமாக தன் இரையைக் கண்டுகொள்ளும். இதன் கண்கள் நீருக்கு வெளியேயும் நீருக்குள்ளேயும் துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டவை. கூரிய அலகு, குட்டையான வால், நான்கு வலிமையான விரல்களை உடைய சிறிய கால்களை உடையவை. இவற்றின் பிரதான உணவு மீன். தவளை, ஓணான், மண் புழு, பூச்சிகள், வெட்டுக்கிளி போன்றவற்றையும் உண்ணும். முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். நீர்நிலைகள் அருகில் உள்ள சரிவான மண் திட்டுகளில் வளைகளைத் தோண்டி அதனுள் முட்டைகளை இடும். கிணற்றின் உட்சுவர்களில் உள்ள பொந்துகளிலும் முட்டை இடும். பளபளப்பான வெள்ளை நிறத்தில் 6 முதல் 10 முட்டைகள் வரை இடும். நீர் நிலைகள், கடலோரப் பகுதிகள், தீவுகள் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும். இந்தப் பறவைகள் உலகம் முழுவதும் உள்ளன.
வகைகள்
சாதாரண மீன் கொத்தி (Common King Fisher)
வெள்ளை மார்பு மீன் கொத்தி (White Breasted King Fisher)
வெள்ளை கருப்பு புள்ளி மீன் கொத்தி (Pied King Fisher)
- ப.கோபாலகிருஷ்ணன்

