தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டயரி (40) - பழசு புதுசு ஆவது எப்படி?

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (40) - பழசு புதுசு ஆவது எப்படி?

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (40) - பழசு புதுசு ஆவது எப்படி?


PUBLISHED ON : அக் 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த வாரம் இணையும் வாசகர்களுக்கு மாலு யார் ?

மாலு என் கனவில் வந்த சிறுமி. பத்து வயது இருக்கலாம். “என்னைப் பத்தி எழுதுங்க மாமா” என்றாள். இவள் 'அங்கிள்' என்று சொல்லாமல் 'மாமா' என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “இயன்றவரை தமிழிலேயே பேசு. தமிழிலேயே எழுது என்று பாரதி மாமா சொல்லியிருக்கிறார்” என்றாள்.

மாலுவுடன் அவள் சிநேகிதர்கள் பாலுவும் வாலுவும் என் கனவில் வந்து பேசினார்கள். வாலு ஓர் எலி ! இல்லையில்லை. வாலு ஒரு மவுஸ். கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் மவுஸ். மூன்று பேரும் என் கனவில் வாராவாரம் வந்து அடிக்கும் அரட்டைதான் 'மாலுவின் டயரி'.

“மாமா. உங்களுக்கும் டிரான்சிஸ்டருக்கும் ஒரே வயசு.” என்றான் பாலு. ஞாநி மாமா சிரித்தார். “மாமா இன்னமும் இருக்கிறார். ஆனால் டிரான்சிஸ்டர் உலகத்தில் காணாமல் போய்விட்டதே!” என்றேன்.

“காணாமல் போகவில்லை. வேறு அவதாரம் எடுத்துவிட்டது. ஒவ்வொரு செல்பேசியும் ஒரு குட்டி வானொலிதான்,” என்றார் மாமா.

“செல்பேசி அளவுக்கு கை வானொலி பிரபலமாக இருந்ததா என்ன?” என்றேன். “ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால், டிரான்சிஸ்டர் ஒரு பெரிய புரட்சி. வீட்டில் பெரிய வானொலிப் பெட்டியை முடுக்கிவிட்டு அதில் வால்வுகள் சூடாகும்வரை காத்திருந்து அப்புறம்தான் இயங்கத்தொடங்கும். போகிற இடத்துக்கெல்லாம் கை வானொலியை எடுத்துக்கொண்டு போக முடியும் என்பது பெரிய வசதியாக இருந்தது. இன்றைக்கு சாதாரண எளிய மனிதர்கள் முதல், பெரும் பணக்காரர்கள் வரை செல்பேசி வைத்திருப்பது போல அன்றைக்கு கை வானொலியை எல்லோரும் வைத்திருந்தார்கள். மாதாமாதம் தவணை முறையில் பணம் கட்டி கை வானொலி வாங்கும் திட்டத்தை தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ் அறிமுகப்படுத்தியதும், லட்சக்கணக்கில் அவை விற்றன. எழுபதுகளில் பத்திரிகை ஓவியர்கள் குறவர்களை ஓவியமாகப் போட்டால், தவறாமல் ஒவ்வொரு குறவர், குறத்தி தோளிலும் டிரான்சிஸ்டர் தொங்குவது போலத்தான் போட்டார்கள்” என்றார் மாமா.

“டி.வி, வந்த பிறகு கை வானொலி அழிந்துவிட்டதா?” என்றான் பாலு. “இல்லை. டி.வி.யைப் போகும் இடங்களுக்கெல்லாம் எடுத்துப் போகமுடியாது இல்லையா? எங்கு போனாலும் கிரிக்கெட் வர்ணனை கேட்க டிரான்சிஸ்டர் பயன்பட்டுக்கொண்டுதான் இருந்தது. உண்மையில் செல்பேசியில் வானொலி இணைந்தபிறகுதான், டிரான்சிஸ்டர் காணாமல் போய்விட்டது,” என்றார் மாமா.

“இப்படி நிறைய பழைய விஷயம் காணாமல் போய்விடுகிறது. அதைத் தடுக்க முடியாதா?” என்றான் பாலு. உடனே மாமா சிரித்தார். “எது இன்றைக்கும் பயன்படுகிறதோ அது பழையதாக இருந்தாலும் நீடிக்கும். மின் விசிறி வந்த பிறகும் கூட இன்னும் பல வீடுகளில் பழைய பனை ஓலை விசிறி இருக்கத்தான் செய்கிறது. மின்சாரம் இல்லாதபோது பயன்படுத்துகிறோம் இல்லையா?” என்றார்.

தொடர்ந்து மாமா சொன்னார், “பல பழைய விஷயங்கள் புது வடிவத்துக்குள்ளேயும் சேர்ந்துகொள்ளும். செல்பேசியில் ரேடியோ வந்த மாதிரி. ஒரு பெரிய பழைய பாலத்தையே எடுத்துப் போய் இன்னொரு நாட்டில் புதிய பாலம் கட்டியிருக்கிறார்கள் தெரியுமா?” என்றார்.

“லண்டன் பிரிட்ஜ்தானே?” என்றது வாலு. “ஓ, அதனால்தான் லண்டன் பிரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டவுன் பாட்டு வந்ததா?” என்றான் பாலு.

“இல்லையில்லை. அந்தப் பாட்டு வந்து சில நூறு வருடங்களுக்குப் பிறகுதான் லண்டன் பாலத்தைக் கழற்றி விற்றார்கள். பாலம் சிதிலமாகியிருந்தது. புதுப் பாலம் கட்டவேண்டும். அதற்காக பழைய பாலத்தை இடிக்கிறபோது அமெரிக்காவிலிருந்து ஒருத்தர் வந்து அதை வாங்கிக் கொண்டார்.”

“அமெரிக்காவிலிருந்தா? யார் அந்த ஆள்?” என்றேன்.

“பெரிய பெட்ரோலிய தொழில் அதிபர் மக்கலோக் என்பவர். அவர் கொடுத்த தொகை 1972ல் 24 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள்! பாலத்தின் கற்களுக்கெல்லாம் நம்பர் போட்டு கப்பலில் ஏற்றி அமெரிக்காவில் அரிசோனாவில், தான் கட்டி வந்த பெரிய குடியிருப்புப் பகுதியில் இருந்த ஹவாசு ஏரியின் குறுக்கே, லண்டன் பாலம் போலவே கட்டி முடித்தார். அது ஒரு சுற்றுலா இடமாகிவிட்டது” என்றார் மாமா.

“அப்படியானால் தமாஷாக யாரோ ஆசாமி ரயில்வே நிலையத்தின் நடைமேடையையே ஏமாற்றி விற்றுவிட்டான் என்று சொல்கிற கதைகள் எல்லாம் கூட நிஜமாக முடியும் போலிருக்கிறதே?” என்றேன். “ரயில் நிலையத்தை தனி நபர் விற்கமுடியாது. ரயில்வேதான் விற்கமுடியும். அது கூட பிரான்ஸில் நடந்திருக்கிறது. பாரிஸில் சென்ட்ரல் என்ற ஒரு பழைய ரயில் நிலையத்தை விலைக்கு வாங்கி, அதை அப்படியே கலைப் பொருட்களுக்கான மியூசியம் ஆக்கியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? நம்ம ஊரிலேயே ஒரு தலைவர், ஒரு ரயில்வே ஷெட்டை வாங்கி தன் அலுவலகமாக்கி இருக்கிறார்,” என்றார் மாமா.

“யாரது மாமா?” என்றேன். “பெரியார் ஈ.வெ.ரா.தான். எழும்பூரில் இருந்த டிராம் ரயில் ஷெட்டை, டிராம் சர்வீஸை நிறுத்தியதும் விலைக்கு வாங்கினார். அதுதான் இப்போது இருக்கும் பெரியார் திடல்.”

“நான் சீக்கிரமே உலக சுற்றுப் பயணம் போகவேண்டும். எந்த ஊரில் என்ன விலைக்கு வாங்க முடியும் என்று கண்டுபிடிக்க வேண்டும்,” என்றான் பாலு. “ஜூல்ஸ் வெர்ன் கதை எழுதிய மாதிரி 80 நாட்களில் உலகம் சுற்ற முடியுமா என்று பார்” என்றார் மாமா.

“உலகத்தில் எந்த நாட்டிலும் எந்த ஊரையும் வாங்க 80 நாள் சுற்ற வேண்டாம். என்னோடு 80 நிமிஷம் உட்கார்ந்து மொனாபலி (Monopoly) ஆடினால் போதும்,” என்றது வாலு. “பைசா செலவில்லாத பர்ச்சேஸ்,” என்று சிரித்தார் மாமா.

வாலுபீடியா 1: அக்டோபர் 18,1954ல் அமெரிக்காவில் அறிமுகமான முதல் டிரான்சிஸ்டர் 'ரீஜென்சி' ஒரே வருடத்தில் ஒன்றரை லட்சம் செட்டுகள் விற்றன.

வாலுபீடியா 2: ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தன் நிலத்தை விற்ற வரலாறும் உண்டு. இப்போது அமெரிக்காவில் ஒரு மாநிலமாக இருக்கும் அலாஸ்காவை 1867ல் ரஷ்ய மன்னர் 72 லட்சம் டாலருக்கு (இன்றைய மதிப்பு 144 லட்சம் டாலர்) அமெரிக்காவுக்கு விற்றார்.

வாலுபீடியா 3: பூமியை விண்வெளியிலிருந்து முதல் புகைப்படம் எடுத்த நாள் அக்டோபர் 24, 1946. வி 2 என்ற ராக்கெட் வானத்தில் 107 மைல் சென்று இந்த, கறுப்பு வெள்ளைப் படத்தை எடுத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us