தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டைரி (9) - சிரித்து வாழ வேண்டும்

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (9) - சிரித்து வாழ வேண்டும்

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (9) - சிரித்து வாழ வேண்டும்


PUBLISHED ON : மார் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வாலு என்னென்னவோ ஜோக்கெல்லாம் சொல்லிப் பார்த்தது. பாலு மசியவில்லை. அப்படியே உம்மென்று உட்கார்ந்திருந்தான். எனக்கும் பாலுவுக்கு என்னதான் ஆயிற்று என்று புரியவில்லை.

அப்போது ஞாநி மாமா உற்சாகமாக ஏதோ பழைய பாட்டை விசிலடித்துக் கொண்டே வந்தார். மகிழ்ச்சியாக இருந்தால் அவர் அப்படித்தான் செய்வார். மாலு, பாலு என்று எங்களைக் கூப்பிடாமல், 'கண்ணு' என்று அழைப்பார். பாலுவைப் பார்த்ததும், 'என்ன கண்ணு, டல்லா இருக்கே?” என்றார்.

'ஒன்றுமில்லையே நன்றாகத்தான் இருக்கிறேன்' என்றான் பாலு. மாமா தொடர்ந்து அடுத்தடுத்து கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருந்தார். “யூனிட் டெஸ்ட்டில் ஏதாவது மார்க் குறைவாக வாங்கினாயா? ஃபுட்பாலில் முக்கியமான கோலைக் கோட்டை விட்டாயா? ஹெவி ஹோம் ஒர்க்கா? வீட்டில் யாராவது எதற்காகவாவது திட்டினார்களா? பிடித்த கமர்கட்டை மாலு வாங்கித் தரமாட்டேன் என்று சொன்னாளா?” “இதெல்லாம் எதுவுமே இல்லை; எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இதோ மாலு கொடுத்த கமர்கட்” என்று காட்டினான் பாலு.

“அப்படியானால் உனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியவில்லை என்று அர்த்தம்” என்றார் மாமா. “மகிழ்ச்சியாக இருப்பது என்றால் என்ன?” என்று கேட்டான் பாலு.

“ஹா... கண்ணு, நீ உலக வல்லரசுகள் மாதிரி பேச ஆரம்பித்துவிட்டாய். அவர்கள்தான் இப்போது மகிழ்ச்சி என்றால் என்ன என்று ஆராயத் தொடங்கி இருக்கிறார்கள்” என்று பலமாகச் சிரித்தார் மாமா. சிரித்து முடித்துவிட்டு பாலுவிடம் “வல்லரசு என்றால் என்ன? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“நாட்டில் எல்லாரிடமும் நிறைய பணம் இருக்கவேண்டும். வீடு கார் எல்லாம் இருக்க வேண்டும். வேறு எந்த நாடும் வந்து பிடிக்க முடியாத மாதிரி பலமான ராணுவம், விதவிதமான நவீன ஆயுதங்கள் இருக்கவேண்டும். இதெல்லாம் இருந்தால் அது வல்லரசு” என்றான் பாலு.

“இதெல்லாம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சி வந்துவிடுமா? நிறைய நாடுகளிடம் அணுகுண்டே இருக்கிறது. ஆனாலும் எந்த நிமிடம், எந்த மூலையில் எந்த பயங்கரவாதி வருவானோ என்று பயந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.”

உடனே வாலு சொல்லிற்று, “கரெக்ட். கார் பங்களா எல்லாம் கூட இருந்து பயனில்லை. வெள்ளம் வந்தபோது முடிச்சூரில் பங்களா, பி.எம்.டபிள்யூ எல்லாம் போய்விட்டது. ஒரு சுனாமி வந்தால் கடலோர பங்களா எல்லாம் காலி.”

எனவே, இதெல்லாம் மகிழ்ச்சிக்கு கேரன்டி இல்லை. ஒரு நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா என்று எப்படித்தான் கண்டுபிடிப்பது? ஷேர் மார்க்கெட் சரிந்தால் பொருளாதாரம் விழுந்துவிட்டது என்றும் ஏறினால் எகானமி பலமாக இருக்கிறது என்றும் ஒரு அளவுகோல் சொல்கிறார்களே, அந்த மாதிரி மகிழ்ச்சிக்கு எதுவும் இண்டெக்ஸ் கிடையாதா? மாமாவையே கேட்டேன்.

“உனக்கு வந்த இதே சந்தேகம் ஒரு நாட்டு ராஜாவுக்கும் வந்தது. அதுக்கப்புறம் இன்னும் நிறைய நாட்டு அரசாங்கங்களுக்கும் வந்தது. அதையடுத்துதான் மார்ச் 20ஐ 'உலக மகிழ்ச்சி தினம்' என்றே மூன்று வருடம் முன்னால் அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.”

“யார் அந்த ராஜா?”

“நம் நாட்டுக்கு மேற்கே இமயமலை அடிவாரத்தில் இருக்கும் குட்டி நாடான பூட்டானின் ராஜாதான் அவர். 'ஜிக்மே சிங்கே வாஞ்சுக்' என்று அவருக்குப் பெயர். 1972ல் அவர் ஒரு நாட்டின் நிலைமையை மதிப்பிடுவதற்கு சராசரி தனி நபர் வருமானத்தையோ சராசரி உற்பத்தியையோ கணக்கிட்டால் போதாது. அந்த தேச மக்களின் மகிழ்ச்சி அளவு என்ன என்று அளவிட வேண்டும் என்று சொல்லி அதற்கு ஒரு பெயரும் கொடுத்தார். கிராஸ் நேஷனல் ஹேப்பினெஸ் (Gross national happiness).”

அதை எப்படி அளவிடுவது ?

“அதற்கும் அவர் நான்கு விதிகளை வகுத்தார். முதல் விதி, எந்த வளர்ச்சி ஏற்பட்டாலும் அது தொடர்ந்து நீடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் (Sustainable development). இரண்டாவது, இயற்கையான சுற்றுச் சூழலைக் கெடுக்காமல் பாதுகாத்திருக்க வேண்டும் (Preserve natural environment). மூன்றாவது, பண்பாட்டு மதிப்பீடுகளை ஊக்கப்படுத்த வேண்டும் (Promotion of cultural values). நான்காவது, நல்ல ஆட்சிமுறை இருக்கவேண்டும். (Good governance).

'ஹை” என்று குதித்தது வாலு. “எல்லாமே சூப்பர். பெட்ரோல் நிலக்கரி எல்லாம் தீர்ந்துபோய்விடும். அப்புறம் மின்சாரம் தயாரிக்க முடியாது. எப்பவும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் குன்றாத வளர்ச்சி இருக்கும். அது சூழலைக் கெடுக்காது. மார்க் மார்க்னு சொல்லி, இப்ப நிறைய ஸ்கூல்ல பாட்டு, இசை, நடனம், நாடகம், ஓவியம், இலக்கியம் எதுவும் இல்லை. அதெல்லாம் திரும்ப வரணும். நல்ல ஆட்சிமுறை இருந்தா, லஞ்சம் ஊழல்லாம் இருக்கக் கூடாது, வெள்ளம் வந்தா முழுகற எடத்துல யாரும் கட்டடம் கட்ட முடியாது. இப்பிடிலாம் இருந்தா மகிழ்ச்சியாதான் இருக்கும்” என்றது வாலு.

சரி. இதை எப்படி பூட்டான் ராஜா சொன்னார் ?

“பூட்டான் கொஞ்சம் வித்தியாசமான நாடு. அந்த ராஜாவே 2006ல தானா பதவி விலகி தன் மகன் 'நாம்யால் வாங்சுக்'கை ராஜாவாகச் சொன்னார். அந்த நாம்யால், ராஜாவான உடனே ஆச்சரியமா, இனிமே தன் நாட்டுல தேர்தல் நடத்தி மக்கள் தேர்ந்தெடுக்கற பிரதிநிதிகளைக் கொண்டு ஜனநாயக அரசுதான் நடக்கணும்னு உத்தரவு போட்டாரு! உலகத்துலயே அப்படி செஞ்ச முதல் ராஜா அவர்தான்.'

மகிழ்ச்சி பற்றின அவர் கருத்தை எப்படி ஐ.நா. சபை ஏத்துகிட்டது?

“பூட்டான் ராஜா 1972ல சொன்னதை அடுத்தடுத்து சீனா, ஜப்பான், அமெரிக்கான்னு நிறைய நாடுகள்ல பல அறிஞர்கள் சொல்ல ஆரம்பிச்சாங்க. இதைப் பத்தி நிறைய புத்தகம் எழுதினாங்க. ஐ.நா. சபைக்கு ஆலோசகரா இருந்த ஒரு தொண்டு நிறுவனத்துடைய தலைவர் 'ஜெமே இல்லியன்' என்பவர் இதைப் பத்தி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். அவர் நம்ம ஊர்க்காரர்தான். அவர் ஒரு அனாதைக் குழந்தை. கொல்கத்தாவுல மதர் தெரேசாவுடைய அனாதை விடுதியில வளர்ந்தவரு. அவரை அமெரிக்கால 'அன்னா இல்லியன்' என்கிற பணக்காரப் பெண் தத்து எடுத்துகிட்ட பிறகு அந்த அம்மாவும் அவருமா தொண்டு அமைப்பு நடத்த ஆரம்பிச்சாங்க.”

“என்னை யாராவது அப்படி தத்து எடுத்துப்பாங்களா?” என்றான் பாலு.

“ஒரு தடவை ஒருத்தர் தத்தெடுத்துட்டா திரும்ப இன்னொருத்தர் எடுக்கமாட்டாங்க” என்றார் மாமா. “புரியலியே” என்றான் பாலு. “நம்ம மூணு பேரையும்தான் மாமா ஏற்கனவே தத்து எடுத்துட்டாரே” என்றது வாலு. எல்லாரும் சிரித்தோம்.

“மகிழ்ச்சி தினத்தன்னைக்கு என்ன மாமா செய்யணும்” என்று கேட்டேன். “எல்லா நாளும் மகிழ்ச்சியா இருக்கோமா இல்லியான்னு நம்மை நாமே சோதிச்சுப் பார்க்க ஒரு டெஸ்ட் இருக்கு. நேத்து என்னலாம் செஞ்சோம்னு டயரி எழுதற இல்ல... அதை திரும்பப் படிச்சுப் பார்த்தா அது தெரிஞ்சுடும். தவிர மகிழ்ச்சியை அளக்க பூட்டான் ராஜா சொல்றதுக்குலாம் முன்னால பல நூறு வருஷம் முன்னால் மகாபாரதத்துல ஒரு வழி சொல்லியிருக்கு” என்றார் மாமா, அந்தக் கதையில யட்சன் என்ற தேவதை கேட்ட கேள்விக்கு தருமர் அந்த பதிலை சொல்லியிருக்காராம்.

“எவன் ஒருத்தனுக்கு கடன் இல்லையோ, எவன் ஒருவன் வெளியூரில் வசிக்கவில்லையோ, எவன் ஒருவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு உண்ண முடிகிறதோ அவனே மகிழ்ச்சியானவன்” என்று தருமர் சொல்லியிருக்கிறார்.

இந்த மூன்றில் எனக்கு இரண்டு ஓகே. எந்த ஊரில் இருந்தால் என்ன?

“நான் ஏன் உம்முன்னு இருந்தேன்னு கண்டுபிடிச்சுட்டேன்” என்றான் பாலு. “என்ன?” என்றார் ஆவலோடு மாமா. “மாலு குடுத்த ஆறு கமர்கட்ல அஞ்சை சாப்பிட்டுட்டேன். வயிறு லேசா கடமுடன்னு இருந்துது. அதான் விஷயம்னு இப்ப புரிஞ்சுது” என்றான் பாலு.

வாலுபீடியா 1: பூடானின் மொத்த மக்கள் தொகை ஏழரை லட்சம்தான். அங்கே 100% இயற்கை விவசாயம் நடக்கிறது. உலகத்திலேயே, புகை பிடிப்பதை நாடு முழுக்க தடை செய்து, அதற்குக் கடும் தண்டனை விதிக்கும் ஒரே நாடு பூடான்.



வாலுபீடியா 2:
உலக மகிழ்ச்சி அளவுகோலில் ஆசியாவிலேயே முதல் இடம் பூடானுக்கு. உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்து!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us