தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டைரி (10) - பள்ளிகளில் வேண்டும் பப்பட் ஷோ!

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (10) - பள்ளிகளில் வேண்டும் பப்பட் ஷோ!

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (10) - பள்ளிகளில் வேண்டும் பப்பட் ஷோ!


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“எல்லாரும் நாடகம் பார்க்கலாமா?” என்று கூப்பிட்டார் ஞாநி மாமா.

“அய்யோ அது ஒரே போர் மாமா. எந்தச் சேனலை திருப்பினாலும் ரெண்டு பொண்ணுங்க ஒருத்தரை ஒருத்தர் பழி வாங்கறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரைக் கவிழ்க்கறதுக்கு சதி பண்றாங்க. கடத்தல், மிரட்டல், அழுவாச்சின்னு ஒரே மாதிரிதான் இருக்கு. எங்க அம்மா எப்பிடிதான் தெனமும் நாலு மணி நேரம் அதைப் பாக்கறாங்கன்னே புரியல.” என்றான் பாலு.

“அதுக்கெல்லாம் பேரு நாடகம் இல்ல. சீரியல். நாடகம்ங்கறது வேற.” என்றார் மாமா.

“எங்கம்மா அதை நாடகம்னுதான் சொல்றாங்க” என்றான் பாலு. “ அது ஒரு குழப்பம். அவ்வளவுதான். ஒரு இருபது இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னே தூர்தர்ஷன்ல, மேடை நாடகங்களை கேமரா வெச்சு ஸ்டூடியோல ஷூட் பண்ணி செவ்வாய்க் கிழமைல ஒளிபரப்பிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம்தான் சீரியல் எல்லாம் வர ஆரம்பிச்சுது. ஆனா ஜனங்க எல்லாத்தையும் நாடகம்னே சொல்லிப் பழகிட்டாங்க.” என்றார் மாமா.

''அப்ப எது நாடகம்?''

“உன் கண்ணெதிரே ரத்தமும் சதையுமா நடிச்சுக் காட்டறதுதான் நாடகம். அதை மேடையில லைட், சீன், மேக்கப் எல்லாம் போட்டும் நடிக்கலாம். அதெல்லாம் இல்லாம வெறுமனே தரையில, தெருவுல நடிக்கலாம். நடிகர்கள் நம்ம கண்ணெதிரே நிஜம் போல நடிக்கறதுதான் நாடகம். இன்னிக்கு 'உலக நாடக தினம்'. அதுக்காக ஐம்பது நடிகர்கள் தனித்தனியா சோலோவா நடிக்கப் போறாங்க. அதைப் பார்க்கப் போகலாம்னுதான் உங்களைக் கூப்பிட்டேன்” என்றார் மாமா.

''தனித்தனியா நடிக்கறதுன்னா எப்பிடி?''

“ஒருத்தரே பல கேரக்டர் பண்ணலாம். மாறிமாறி நடிக்கலாம். இல்லாட்டி ஒரே ஒரு கேரக்டரா வந்து ஒரு கதை சொல்லலாம்.”

''ஒரே ஆள், ஒரே கதையை சொல்லிக்கிட்டே இருந்தா போரடிக்காதா?''

“அது ஆளையும் கதையையும் பொறுத்தது. தவிர ரெண்டு பேர் மட்டும் சேர்ந்துகிட்டு நிறைய பொம்மையை வெச்சு கதை சொல்லலாம். இன்னிக்கு நாடக தினம். அதுக்கு சரியா மூணு நாள் முன்னாலதான் உலக பொம்மலாட்ட தினம். அதையும் இத்தோட சேர்த்துக் கொண்டாடறாங்க.”

''பொம்மையை வெச்சுக்கிட்டு கதை சொல்றதை, யாரு எப்ப மாமா முதல்ல கண்டுபிடிச்சாங்க?''

“2500 வருஷத்துக்கு முன்னால் மொகஞ்சதாரோல இருந்தவங்க மண்ணுல செஞ்ச எருது பொம்மை கெடச்சிருக்கு. அதுல தலை மட்டும் தனியா அசையற மாதிரி செஞ்சு வெச்சிருக்காங்க. இதே மாதிரி ஒரு பழைய குரங்கு பொம்மை இருக்கு. அதை அசைச்சு அசைச்சு மரத்துல ஏறிப் போற மாதிரி செஞ்சிருக்காங்க. அதனால் அப்பவே பொம்மையை விதவிதமா நம்மை மாதிரி அசையவெச்சு கதை சொல்லிப் பார்த்திருப்பாங்கன்னு தோணுது.”

“பொம்மையை எப்பிடி அசைக்கறது? எனக்கு இதுவரைக்கும் கெடச்ச பொம்மை எல்லாம் டெட்டி பேர், பெரிய மங்க்கி. அது எல்லாம் சாஃப்ட் டாய்ஸ். வளைஞ்சு வளைஞ்சு விழும் அவ்வளவுதான்.”என்றான் பாலு.

“பொம்மலாட்டத்தை ஆங்கிலத்தில் 'பப்பெட்ரி'ன்னு சொல்றோம். லத்தீன் மொழில 'பாப்பு'ன்னா பொம்மைனு அர்த்தம். விதவிதமான பப்பெட் இருக்கு. துணியில செய்யலாம். மரத்துல செய்யலாம். கை கால் தலையெல்லாம் தனித்தனியா அசைக்கற மாதிரி செய்யலாம். கிளவ் பப்பெட்ங்கறது கையில உறைமாதிரி மாட்டிக்கிட்டு அசைக்கற பொம்மை. அப்பறம் பொம்மையை மேலருந்து கயிறு கட்டி, கயிறை அசைச்சு ஆடவெக்கலாம். பழைய சமஸ்கிருத நாடகத்துல சூத்ரதாரின்னு கதை சொல்றவனை சொல்லுவாங்க. சூத்ரம்னா கயிறு. அதை வெச்சுகிட்டு பொம்மையை ஆட்டி வெக்கறவன்தான் சூத்ரதாரி.”

உடனே பாலு, “அப்படின்னா நான் இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு பொம்மலாட்டம்தான் பார்த்திருக்கேன். ரெண்டுமே சினிமாலதான் பார்த்தேன். ஒண்ணு சவுண்ட் ஆஃப் மியூசிக். அதுலதான் கயிறை வெச்சுகிட்டு பொம்மையை ஆடவெப்பாங்க. இன்னொண்ணு தமிழ்ல தசாவதாரம். அதுல முகுந்தா முகுந்தான்னு ஒரு பாட்டுக்கு பொம்மையை ஆடவெப்பாங்க.” என்றான்.

“அதுக்கு தோல்பாவைக் கூத்துன்னு பேரு. மிருகத்தோட தோலைப் பதப்படுத்தி மெல்லிசாக்கி அது மேல உருவம் வரைஞ்சு பின்னால் குச்சி ஒட்டி கையில வெச்சுக்கிட்டு ஆடவெப்பாங்க. அதுக்கு ஒரு திரையும் லைட்டும் கூட வேணும்.” என்றார் மாமா.

இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றியது. ஏன் நானோ பாலுவோ பொம்மலாட்டத்தை இதுவரைக்கும் நேரில் பார்த்ததே இல்லை? நாங்கள் பார்த்த இரண்டுமே சினிமாவில் வந்ததுதான். சந்தேகத்தை மாமாவிடம் கேட்டேன்.

“நியாயமா பார்த்தா, ஒவ்வொரு பள்ளிக் கூடத்துலயும் கண்டிப்பா பப்பெட் ஷோ நடத்தணும். பசங்களுக்கு பப்பெட் ஷோ நடத்தக் கத்துக் குடுக்கணும். நீங்க இப்ப வகுப்புல சில பாடத்தை நாடகமா நடிச்சுப் பார்க்கறீங்க இல்ல. அந்த மாதிரி நிறைய பாடங்களை பொம்மைகளை வெச்சு பப்பெட் ஷோவா செஞ்சு பார்க்கலாம். பப்பெட் ஷோ செஞ்சா, உங்களுக்கெல்லாம் பல ஸ்கில்ஸ் கெடைக்கும். பொம்மையை கையில வெச்சு அசைக்கற கண்ட்ரோல், பாட்டு, கதை சொல்ற கற்பனை, இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா நீங்களே உங்களுக்கான பொம்மையைக் கூட தயார் செய்யற ஸ்கில் எல்லாமே வளரும்.” என்றார் மாமா.

''தியேட்டருக்குப் போய் டிக்கட் வாங்கி சினிமா பார்க்கற மாதிரி, இந்த பப்பெட் ஷோலாம் பார்க்கற இடம் எதுவும் நம்ம ஊர்ல இருக்கா?'' என்று மாமாவிடம் கேட்டேன்.

“அதெல்லாம் வெளிநாட்டுலதான் அப்படி தியேட்டர்கள் இருக்கு. இந்த உலக பொம்மலாட்ட தினத்துக்காக அமெரிக்கால நியூயார்க் டைம் ஸ்கொயர்ல நிறைய பொம்மலாட்டக்காரங்க வந்து குவிஞ்சிருக்காங்க. ஐரோப்பா முழுக்க பல ஊர்கள்ல நிறைய பப்பெட் ஷோ தியேட்டரிருக்கு. நம்ம ஊர்ல இந்தக் கலையை செய்யத் தெரிஞ்ச குடும்பங்கள் எல்லாம் அழிஞ்சுகிட்டே இருக்கு. கும்பகோணத்துல தோல்பாவைக் கூத்து செய்யறவங்க நிறைய இருந்தாங்க.இப்ப ஒருத்தர்தான் இருக்காரு. சென்னையில பொம்மலாட்டம் செய்யறவங்க மொத்தமே மூணு நாலு பேர்தான் இருக்காங்க.”

உடனே வாலு சொல்லியது. “மாமா. அவங்க யார்கிட்டயாவது எங்களைக் கூப்பிட்டுக்கிட்டுப் போங்க. நாங்க பொம்மலாட்டம் கத்துக்கறோம்”.

“வாலு, நீ கத்துக்கப் போறியா ?”

“மாலுவும் பாலுவும் பொம்மலாட்டம் கத்துப்பாங்க. நான் ஷோவுக்கு டிக்கட் போட்டு எல்லா சில்ட்ரனுக்கும் வித்து மார்க்கெட்டிங், இவெண்ட் மேனேஜ்மெண்ட்டெல்லாம் பார்த்துகலாம்னு இருக்கேன்” என்று வாலு சொன்னதும் மாமா சிரித்தார்.

“இது தேர்தல் நேரம். வாலு, உனக்கு பாலிடிக்ஸ்ல நல்ல வாய்ப்பு இருக்கு.” என்றார். உடனே வாலு, “ஹைய்… எல்லா பார்ட்டி லீடர்ஸையும் பப்பெட் கேரக்டரா வெச்சு ஷோ பண்ணலாம் இல்ல ?” என்றது.

“அதை டி.வி.காரங்க ஏற்கனவே பண்ணிக்கிட்டிருக்காங்க” என்றார் மாமா.

“சே! நாடகம், பப்பெட் எதையும் விட்டு வெக்க மாட்டேங்கறாங்க இந்த டி.வி.காரங்க.” என்று அலுத்துக் கொண்டது வாலு. எல்லாரும் சிரித்தோம்.

வாலுபீடியா 1: சுமார் 1800 வருடங்களுக்கு முந்தைய சிலப்பதிகாரத்தில் பொம்மலாட்டம் பற்றிய குறிப்பு இருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய திருக்குறளிலும் பொம்மலாட்டத்தில் கயிறு பயன்படுத்துவதை உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

வாலுபீடியா 2: குழந்தைகள் எந்த வயதிலும் பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவதன் மூலம்தான் உடல் திறன், மொழித் திறன், சக மனிதர்கள் மீதான அன்பு, பாசம், அக்கறை போன்ற உணர்ச்சிகளை வளர்ப்பது எல்லாமே மேம்படுவதாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us