PUBLISHED ON : ஆக 15, 2016

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டுத் தியாகிகளின் பங்கு முக்கியமானது. தன்னலம் கருதாத அந்தத் தன்மையாளர்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். அந்த வகையில் சிலருடைய குறிப்புகள் இந்த இதழில் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களைப் போன்ற 'பாடல் பெறாத நாயகர்'களைப் போற்றுவது நம் கடமை அல்லவா...
செண்பகராமன் (15.09.1891 - 28.05.1934): ஆங்கிலேயர் மனதில் திக்... திக்... வரவழைத்த 'செண்பக்' என்கிற நாஞ்சில் நாட்டு (திருவாங்கூர்) மாவீரன் செண்பகராமன்! இந்திய விடுதலைக்காகப் போராட வந்து, 'ஜெய் ஹிந்த்' என்று முதலில் முழங்கியவர். இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசிய ஹிட்லரை, 'வந்து பார்' என்று வாதாடி வென்றவர். ஆங்கிலேய அரசு நிர்வாகம் செய்த சென்னைத் துறைமுகம், புனித ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசிய 'எம்டன்' நீர்மூழ்கிக் கப்பலில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றியவர் 'ஜெய்ஹிந்த்' செண்பகராமன்.
வெ. அ. சுந்தரம் (02.02.1896 - 11.03.1967): சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் சுந்தரம்! மகாத்மாவைப் பார்த்து தன் ஆத்மாவை நேரடியாக இந்திய விடுதலை இயக்கத்தில் இணைத்தவர். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடி சிறை செல்ல நேரும்போது மறுக்காமல் ஒத்துழைத்தவர். இந்திய விடுதலை குறித்த செய்திகளை ஐரோப்பிய நாடுகளில் பரப்பினார். லண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கான காந்தியின் திட்ட ஆசைக்கு உதவியாக இருந்தார் இந்த வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம்.
ருக்மிணி லட்சுமிபதி (06.12.1892 - 06.08.1951): ருக்மிணி; நாட்டின் கண்மணி; சுதந்திரம் வாங்கப் போராடிய பெண்மணி. பெண்களைப் போராட அழைத்தார் காந்தி; அதற்கு முன்பே வீரத்தை நெஞ்சில் ஏந்தி, விடுதலைக்கு குரல் கொடுத்தவர். தீண்டாமையை வேண்டாம் என்று பெண்கல்வியை வற்புறுத்தினார். பங்கேற்றது உப்பு சத்தியாக்கிரகம், தப்பு என்றது பால்ய விவாகம். அன்னியத்துணி எரித்து, சிறை சென்று சிரித்தவர் ருக்மிணி லட்சுமிபதி.
வெ.இராமலிங்கம் (19.10.1888 - 24.08.1972) : வெள்ளையர் ஓட, கவிதை பாட வந்தவர் நாமக்கல் கவிஞர்! இந்திய, காந்தியக் கொள்கைகளைக் கவிதையில் பரப்பிய 'காந்தியக் கவிஞர்'. “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று கத்திக் கத்திப் பாடிய அகிம்சைப் புரட்சியாளர்! மகாகவி பாரதியால் பாராட்டுப் பெற்ற, தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் நாமக்கல். வெ. இராமலிங்கம் பிள்ளை.
என். ஜி. ராமசாமி (11.03.1912 - 12.02.1943) : கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாக்கிரகி! நெஞ்சில் அடி வாங்கி, பஞ்சாலைத் தொழிலாளர்களுக்காகப் போராடியவர். ராஜாஜி தலைமையிலான சட்டசபையில் இளமையிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனவர். 1941ல் சிறை சென்று திரும்பி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை விரும்பினார். ”கொதிப்பும் ஆத்திரமும் காந்திய கொள்கைகளுக்கு முரணானவை' என்று கூறியவர் என்.ஜி.ஆர்.
