
பெயர்: சோஃபி ஜெர்மைன் (Sophie Germain)
பிறப்பு: ஏப்ரல் 1, 1776.
இறப்பு: ஜூன் 27, 1831.
இடம்: பாரீஸ் நகரம், ஃபிரான்ஸ்.
பெற்றோர்: மேரி மேடலின் ஜெர்மெய்ன் (Marie -Madeleine Germain), அம்ப்ரோஸ் ஃபிரான்கோ ஜெர்மெய்ன் (Ambroise -Francois Germain).
1. 19ம் நூற்றாண்டின் மத்திவரை, ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களில், பெண்கள் படிக்கவோ, பணியாற்றவோ அனுமதி கிடையாது. சோஃபியால், பள்ளியில் சேர முடியவில்லை என்பதால், அரசியல் பிரமுகரான அவரது தந்தை, வீட்டில் வைத்திருந்த நூலகத்தில் புத்தகங்களை வாசித்தார். 'ரோமானியர்கள் கிரீஸைக் கைப்பற்றி, தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த தருணத்தில், ஆர்கிமிடிஸ் கணிதம் குறித்து சிந்தித்துக்கொண்டு, தெருவோரத் தரையில் கிறுக்கிக்கொண்டிருந்தார். ஒரு ரோமானிய வீரனின் எச்சரிக்கையைக் காதில் வாங்காததால், ஈட்டியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்' என்ற செய்தியை ஒரு நாள் அவர் படிக்க நேரிட்டது.
2. தந்தையின் நூலகத்தில் இருந்த கணித நூல்களை எல்லாம் படித்தார் சோஃபி. நியூட்டன், ஆய்லர் போன்ற மேதைகளின் சிந்தனைகளைப் படிக்க, கிரேக்கமும், லத்தீனும் தெரிந்திருக்க வேண்டியிருந்தது. சோஃபி, தானாகவே அந்த மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சோஃபியின் ஆர்வத்தைக்கண்டு பயந்த அவரது பெற்றோர், மெழுகுவத்திகளை ஒளித்துவைத்து, அவர் படிப்பதைத் தடுக்க முயன்றார்கள். சோஃபியோ நிலவு வெளிச்சத்தில் படித்தார். ஒரு கட்டத்தில் அவரது வழியிலேயே விட்டுவிட்டார்கள்.
3. கணிதமேதைகளையும், அறிவியல் மேதைகளையும் உருவாக்க, ஈகோல் பாலிடெக்னிக் (Ecole Polytechnique) என்ற கல்வி நிலையம் பாரீஸில் தொடங்கப்பட்டது. பெண் என்ற காரணத்தால், சோஃபிக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. தொலைதூரக் கல்வி முறையில் பயின்று, படிப்பைப் பாதியில் விட்ட ஒரு மாணவனின் பெயரில், பாடங்களைப் பெற்றுப் படித்தார் சோஃபி. அந்தப் பெயரில் கட்டுரைகளையும் எழுதி அனுப்பினார். அந்தக் கல்வி நிலையத்தில் பணியாற்றிய லக்ராஞ்ச் என்ற கணிதமேதை, சோஃபியின் கட்டுரைகளைக் கண்டு அசந்துபோனார். நேரில் சந்தித்தபோது, கட்டுரையாளர் ஒரு பெண் என்பதைக் கண்டு வியந்தார். தொடர்ந்து சோஃபியை ஊக்குவித்தார்.
4. 1801ம் ஆண்டில்... புகழ்பெற்ற ஜெர்மானியக் கணிதமேதை கார்ல் ஃப்ரெட்ரிக் கவுஸுக்கு (Carl Friedrich Gauss), கணிதச் சிந்தனைகளை விவாதித்துக் கடிதம் எழுதினார் சோஃபி. ஓர் ஆண் பெயரில், சோஃபி அவருக்கு கடிதங்களை எழுதினாலும், காலப்போக்கில் அதை எழுதியது சோஃபிதான் என்பதைக் கண்டறிந்தார் கவுஸ்.
சாதனைகள்
* 1816ம் ஆண்டில், பரப்புகளின் நெகிழ்திறன் (Elasticity Of Surfaces) குறித்த இவரது கட்டுரை, பிரெஞ்சு அகாடமி அமைப்பின் பரிசு பெற்றது. பிற்காலத்தில் பாரீஸின் ஈஃபில் கோபுரத்தின் கட்டுமானத்துக்கு சோஃபியின் சிந்தனைகள் உதவின.
* பிரெஞ்சு அகாடமியின் உறுப்பினர் அந்தஸ்து சோஃபிக்கு வழங்கப்பட்டது. அதன் முதல் பெண் உறுப்பினர் சோஃபிதான்.
* புகழ்பெற்ற தீர்க்கப்படாத கணிதப் புதிர்களில் ஒன்றாக இருந்த, 'பெர்மா இறுதித் தேற்றம்' (Fermat Last Theorem) எனப்படும் புதிருக்கான விடையைக் கண்டறிவதற்கான, அடிப்படைச் சிந்தனைகளை வழங்கினார்.
* கார்ல் கவுஸின் பரிந்துரைப்படி, 1837ம் ஆண்டில், காட்டிங்கென் பல்கலைக்கழகம் (Gottingen university) சோஃபியின் சாதனைகளைப் பாராட்டி, முனைவர் பட்டம் வழங்கியது. ஆனால், இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, தனது 55 வயதில் மார்பகப் புற்றுநோயால் மரணமடைந்தார் சோஃபி.
- இரா. செங்கோதை, ஆசிரியர், பை கணித மன்றம்.