PUBLISHED ON : ஜன 27, 2020

உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து வேர்ச்சொற்களை எடுத்து, தன்னுடையதாக தகவமைத்துக்கொண்டது ஆங்கிலம். அவ்வகையில் தமிழ்ச் சொற்களை வேராகக் கொண்டு, ஆக்ஸ்ஃபோர்டு, கேம்ஃப்ரிட்ஜ் அகராதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வார்த்தைகள் 80 வரை இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வார்த்தைகளின் ஆங்கில ஒலி வடிவங்களும், ஏறக்குறைய தமிழ் ஒலி வடிவங்களையே ஒத்திருக்கின்றன என்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, 'மொளகட்வெனி' (Mulligatawny) என்பது ஓர் ஆங்கிலச் சொல். நம்மூரில் பேச்சு வழக்கில் 'மொளகுத்தண்ணி' என்பதைத்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் சொல்லாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இந்தச் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ஆண்டு 1784. ஆங்கிலத்தில் 'மொளகட்வெனி' என்பது கோழி அல்லது ஆட்டிறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பைக் குறிக்கிறது. நம்மூரில் 'மொளக்குத்தண்ணி' ரசத்தைக் குறிக்கும்.
1679இல் ஆங்கிலத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட 'செரூட்' (Cheroot) என்னும் சொல்லின் பின்னணி வரலாறும் சுவையானது. இந்த வார்த்தை தமிழில் இருந்து இரண்டு அயல்மொழிகளுக்குள் பயணித்து, பின் ஆங்கிலத்தை அடைந்திருக்கிறது. 1670இல் பயன்படுத்தப்பட்ட போர்ச்சுகீசிய சொல், 'சருட்டோ' (Charuto). 1970 முதல் 80 வரையிலான பத்தாண்டுகளில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு சொல், 'செரூட்' (Cheroute). சருட்டோவுக்கும், செரூட்டுக்கும் மூலம் தமிழ்ச்சொல் 'சுருட்டு'. பிரஞ்சு,போர்ச்சுகீசிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்குப் பயணித்த சொல் இது. ஆங்கிலேயருக்கு முன் இந்தியா பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்களின் காலனியாக இருந்த வரலாற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுக்குகளாலான கூரைகளைக் கொண்ட கோவிலைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் 'பகோடா' (Pagoda) இது பகவதி அல்லது பார்வதியில் இருந்து பிறந்ததாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகவதி என்னும் தமிழ்ச்சொல் கோவில்களைக் குறிக்கும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 'ஹாப்சன்ஜாப்சன்' என்னும் புத்தகத்தில் ஹென்றி யூல், பகோடா என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு, மதிப்பு உயர்ந்த தங்கம் அல்லது வெள்ளியாலான நாணயம் என்னும் பொருளும் விளங்கி வந்ததாகவும் கூறுகிறார். நாணயத்தில் பொரிக்கப்பட்டிருந்த பார்வதியின் உருவத்தைப் பின்னணியாக வைத்து இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்றும் கூறுகிறார். 1525இல் ஆங்கிலத்தில் இந்தச் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், 1664இல் 'பட்லர்' தனது பிரசித்திபெற்ற நூலான ஹூடிபிராஸில் 'இந்தியாவின் பகோடா' (Indian Pagoda) என குறிப்பிட்ட பின்னர், ஆங்கிலேயர்கள் மத்தியில் இச்சொல்லுக்குத் தனிச்சிறப்பு கிடைத்திருக்கிறது.
பச்சுலி (Patchouli) என்பதும் ஓர் ஆங்கிலச்சொல். 1845இல் முதன்முதலாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட இச்சொல்லின் வேர்ச்சொல் தமிழின் 'பச்சிலை' அல்லது 'பச்சை இலை'. தமிழரின் பண்டைய கால மருத்துவ முறைகளில் ஒன்றான பச்சிலை மருத்துவத்தின் சிறப்பும் பெருமையும் கடல்கடந்து மேலைநாடுகளைச் சென்றடைந்திருக்கிறது.
'கட்டமரன்' (Catamaran) என்னும் ஆங்கிலச்சொல்லை முதன்முதலில் 1673இல் வில்லியம் டெம்பியர் தனது புத்தகத்தில் பயன்படுத்தினார். அந்த வார்த்தையின் மூலச் சொல், 'கட்டுமரம்' என்று குறிப்பிடுகிறார். கட்டுமரம் என்பது மரக்கட்டைகளைப் பிணைத்து உருவாக்கப்படும் ஒரு சிறிய படகு. அந்தப் புத்தகத்தில் கட்டுமரத்தின் சித்திரமொன்றும் இடம்பெற்றிருக்கிறது. அதற்கு முன் கட்டுமரம் என்னும் பொருள் தரும் வேறு ஆங்கிலச்சொல் அவர்களிடம் இல்லை. அதை சித்திரமாக வரைந்து ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் அப்போது ஏற்பட்டிருக்கிறது. மேலைநாடுகளில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழரிடம் கட்டுமரங்கள் பயன்பாட்டில் இருந்ததையும் உணர்த்துகிறது.
-பேராசிரியை நவீனா

