PUBLISHED ON : ஜூலை 17, 2017

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் நல்லது என்பது, நமக்குத் தெரிந்திருக்கும். குழந்தையின் உடலுக்கு அது தெம்பூட்டும். ஆனால், அனுபவமே குழந்தைகளுக்கு அறிவை ஊட்டும். இது மனிதர்களுக்குத்தான் பொருந்தும். குரங்கினத்தில் தாய்ப்பால் வழியே பண்புகளும், உணர்ச்சிகளும் ஊட்டப்படுவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு, பலவிதமான விலங்கினங்களின் தாய்ப்பால்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 'ரீசெஸ் மக்காக்யூ' (Rhesus macaque) என்ற இன குரங்குகளில் தாய்ப்பால் மூலமாக உணர்வுகளும், பண்புகளும் கடத்தப்படுவது அறியப்பட்டது. இந்தக் குரங்குகளின் உயிரியல் பெயர் 'மகாகா முலாட்டா (Macaca Mulatta). இவை 10 முதல் 80 வரையான கூட்டங்களாகவே திரியக்கூடியவை.
குட்டி போட்ட ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை, குரங்கின் தாய்ப்பால் பலசோதனைகளுக்கு உட்படுத்தி ஆராயப்பட்டது. அப்போது, ஆரம்பத்தில் ஊட்டமளிக்கும் தாய்ப்பால், காலப்போக்கில் குரங்குக் குட்டிகளுக்கு பழக்க வழக்கங்களைக் கற்பிக்கும் விதமாகவும், சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படும் மனோபாவத்தை வளர்க்கும் விதமாகவும், ஊட்டம் அளிப்பது தெரியவந்துள்ளது. 'ரீசெஸ் மக்காக்யூ' இன குரங்குகளின் தாய்ப்பாலில் உள்ள 'பிடிஎன்எஃப்' (PDNF) என்ற வேதிப்பொருள், அதைக் குடிக்கிற குட்டிகளின் நரம்புகளின் வழியே சமிக்ஞைகளாக (Signals) கடத்தப்படுவதே இதற்குக் காரணம் என்று, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ப.கோபாலகிருஷ்ணன்