PUBLISHED ON : ஜன 09, 2017

நல்லமுத்து: 1896 - 1972
தமிழகப் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட சகோதரிகளில் மூத்தவரான, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு, அறிமுகமே தேவை இல்லை. அவரைப் போலவே அவரது சகோதரி நல்லமுத்துவும் ஒரு நல்முத்து தான்.
டாக்டர் முத்துலட்சுமி சென்னைக்கு படிக்க வந்ததும், அவர் குடும்பமும் சென்னைக்கு குடிபெயர்ந்தது. நல்லமுத்துவும் சென்னைவாசியானார். எழும்பூரில் உள்ள, பெண்கள் பள்ளியில் படித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
1918ல் சென்னை ராணி மேரி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தார். வரலாறு, புவியியல் பாடங்களுக்கான ஆசிரியராகத் திகழ்ந்தார். பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளுதவி பெற்று, மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்.
முதல் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச அமைதி சங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பில், உலக அளவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நல்லமுத்து. இவர் பணியாற்றிய ராணி மேரி கல்லூரியில் ஐரோப்பிய பெண்களே கல்லூரி முதல்வராக இருந்து வந்தனர். அந்த நடைமுறை மாற்றப்பட்டு, முதல் இந்தியப் பெண் முதல்வராக பொறுப்பேற்றார் நல்லமுத்து.
கல்வியில் ஊக்கமுடைய இரு மாணவிகளைவிடுதியில் சேர்க்க, வெலிங்டன் சீமாட்டி கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. அந்தப் பெண்கள் இருவரும், தேவதாசி ஒழிப்பு சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களையும் முத்துலட்சுமி நடத்திய அவ்வை இல்லத்தில் சேர்த்து, கல்வி தொடர வழிவகை செய்தார் நல்லமுத்து. அந்தப் பெண்களில் ஒருவர், ஆசிரியராகவும், மற்றவர் மருத்துவராகவும் உயர்ந்தனர்.
இவரின் சிறப்புகள்
* 1926ல் பாரிசில் நடைபெற்ற பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
* இந்திய மகளிர் சங்கத்தின் சென்னை மாநிலத் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தார்.
* 1932ல் மகளிருக்கு வாக்குரிமை வழங்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட லோதியன் குழுவில் (Lothian Committee) பங்கேற்று தகவல்கள் வழங்கினார்.
* செஞ்சிலுவைக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
* நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1956ல் நியமிக்கப்பட்டார்.
* வரதட்சணை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற துணைக்குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
* சர்வதேச அமைதி, பெண்கள் சங்கத்திற்கான துணைத்தலைவராகவும் இருந்தார்.

