PUBLISHED ON : ஜூலை 29, 2024

ஆடிப்பட்டம் என்பது தமிழக விவசாயத்தில் மிக முக்கியமான காலகட்டமாகும். இது ஆடி மாதத்தில்(ஜூலை - ஆகஸ்ட்) பயிர்கள் விதைப்பதற்கு ஏற்ற சரியான நாட்களைக் குறிக்கிறது. இந்தப் பருவம் இளவேனில், முதுவேனில் காலங்கள் முடிந்து மழைக்காலத்தின் தொடக்கமாக அமைகிறது.
முக்கியத்துவம்
கோடை மாதங்களான சித்திரை முதல் ஆனி வரை (ஏப்ரல்- - ஜூலை) மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும். ஆடி மாதம் வந்தவுடன் மழை தொடங்கும் போது, நிலம் ஈரப்பதத்தைப் பெறுகிறது. இதனால் விதைப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. கடும் கோடையில் இறுகிக் காணப்படும் மண், ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கிவிடுகிறது. ஈரப்பதமான மண்ணில் நுண்ணுயிரிகள், மண் புழு, நத்தைகள் உள்ளிட்டவை உருவாகத் தொடங்குகின்றன. இதனால் மண் செழிப்புற்று புற்கள், சிறு செடிகள் முளைக்கத் தொடங்குகின்றன. புதிதாக முளைத்த தாவரங்களை மேய வரும் கால்நடைகளின் கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகிறது. இதனால் செழிப்பான மண் உழவுக்குத் தயாராகிறது. இதன் காரணமாகவே ஆடிப்பட்டத்தில் விதைத்தால், பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து, நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழி இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
வேளாண் செயல்முறை, பயிர்கள்
ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பயிர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் தானியங்களே விதைக்கப்படுகின்றன. விதைப்பதற்கு முன்பு நிலத்தை உழுது, சமப்படுத்தி, உரம் இடுதல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. இந்தக் காலத்தில் விதைக்கப்படும் பயிர்கள் பொதுவாக மழைக்காலத்தைத் தாங்கி வளரக்கூடியவை. தமிழகத்தின் முக்கிய உணவுப்பயிரான நெல், ஆடிப்பட்டத்தில் அதிகளவில் விதைக்கப்படுகிறது. கம்பு பயிரிடப்படுகிறது.
இது மழைக்காலத்தில் நன்கு வளரும். சோளம் மற்றொரு முக்கியமான தானியப்பயிர். இது ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும். சோள தானியம் உணவாகவும் சோளத்தட்டை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. உளுந்து, துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளும், எள், கடுகு உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும் சில இடங்களில் ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படுகின்றன.

