PUBLISHED ON : ஜூன் 17, 2019

ஸ்மார்ட் போனில் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் எளிமையாக தட்டச்சு செய்ய, செயலி வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த வாரம் கே4 விசைப்பலகைச் செயலியை வெளியிட்டார். அதுபற்றி அவரிடம் உரையாடினோம்:
ஒரு முறை இரயிலில் பயணம் செய்தேன். அப்போது, பார்வைத்திறன் குறைபாடு உடைய ஒருவர் ஸ்மார்ட்போனில் டைப் செய்ய தடுமாறுவதைப் பார்த்தேன். பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள், சாதாரண போனைவிட ஸ்மார்ட் போனில் டைப் செய்ய அதிகம் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாகத் தொட்டால், அது என்ன எழுத்து என ஒலிக்கும். ஒலியைக் கேட்டு தட்டச்சு செய்து, அந்த வார்த்தையை உறுதி செய்யவேண்டும். இடையில் ஏதாவது ஓர் எழுத்தை தவறாகத் தட்டச்சு செய்தால், வேறுவழியில்லை. வார்த்தையை மீண்டும் முதலிலிருந்து தட்டச்சு செய்வதே ஒரே வழி.
இப்பிரச்னையைத் தீர்க்க உருவானதுதான் இந்த கே4 விசைப்பலகை (K4 Key Board). இதனை உருவாக்குவதற்கே சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனது. பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் இதைப் பயன்படுத்தி, மாற்றங்களைச் சொன்னார்கள். அதன்படி, பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கி விசைப்பலகையை வடிவமைத்துள்ளோம். என்னுடைய மாணவர்களும் இப்பணிக்கு உதவினர்.
கே4 விசைப் பலகையின் சிறப்பு அம்சம், இதில் உள்ள நான்கு பெரிய பட்டன்கள்தான். அப்பட்டன்களில் விரலை வைத்து, மேலே, கீழே, இடது, வலது என சின்னதாக கோடுபோல இழுத்தால் போதும். அதற்கேற்ப எழுத்துகள் வரும். அதுமட்டுமல்ல; குறுக்குவெட்டாகவும், பாதி அளவு கோடுகளுக்கும்கூட தனி எழுத்துகள் எழுதலாம். எனவே, பிழைகள் வரும் வாய்ப்புக் குறைவு.
தமிழ் மட்டுமன்றி, யுனிகோடு உடைய எந்த மொழி எழுத்துருவையும் கொண்டு தட்டச்சு செய்யலாம். தற்போது, தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட 14 மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும். எங்களுடைய இலக்கு 100 மொழிகளை உள்ளடக்கிய விசைப்பலகையாக இதை வடிவமைப்பதுதான்.” என்றார் பேரா. கிருஷ்ணமூர்த்தி. K4 Key Board செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் தரவிறக்கலாம்.
