PUBLISHED ON : மே 14, 2018

பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கமாக இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடாமல், பெற்றோர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட மாணவனின் தேர்வு முடிவைச் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், 'பொதுத்தளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், தோல்வியடையும் மாணவர்கள், அவமானத்தால் தற்கொலை செய்யக்கூடிய சம்பவங்கள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து, அவர்களிடம் தேர்வு முடிவை சொன்னால் போதுமானது. பொதுத்தளங்களில் தேர்வு முடிவைச் வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.' என்று கோரப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
