PUBLISHED ON : மே 14, 2018

எனக்கு அம்மாவுடைய ஸ்கூட்டியை ஓட்ட வேண்டும் என்று ஆசை. ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அம்மா மறுத்துவிடுவார். இத்தனைக்கும் நான் நன்கு சைக்கிள் ஓட்டுவேன். சைக்கிள் ஓட்டுவது போல் தான் ஸ்கூட்டியும். ஆனாலும், அம்மாவுக்குப் பயம்.
அதேபோல், எங்கே போவதென்றாலும் யாரேனும் கூட வருவார்கள். பள்ளியில் சென்ற ஆண்டு, ஊட்டிக்கு இன்பச் சுற்றுலா கூட்டிக்கொண்டு போனார்கள். அப்பா அனுமதிக்கவே இல்லை. இத்தனைக்கும் எங்களோடு நான்கைந்து டீச்சர்கள் வருவதாகத் திட்டம். அப்பாவுக்கு ஏனோ நம்பிக்கையே ஏற்படவில்லை.
உமா மிஸ்ஸிடம் வருத்தத்துடன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். என் வயசு பையன்களில் பலர் பெரிய பைக்கே ஓட்டுகிறார்கள். மிஸ்ஸுக்கு என் கவலை புரிந்ததோ இல்லையோ, ஆனால், ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நீ வீட்டுல டீ போடுவியா கதிர்?”
“டீயா, கேஸ் அடுப்புப் பக்கமே போகமுடியாது மிஸ். அம்மா விடவே மாட்டாங்க.”
“ஓ! என்னிக்காவது குண்டு பல்பு மாத்தியிருக்கியா?”
“எங்கப்பாவே எல்லாத்தையும் செஞ்சுடுவாரு மிஸ். டியூப் லைட் மாத்துவாரு. கேஸ் சிலிண்டர் மாத்துவாரு. என்னை எதையும் செய்யவிட மாட்டாங்க மிஸ்.”
“ரொம்ப பாதுகாப்பு போல. செல்லம்.”
இப்போதெல்லாம் இப்படிக் கேட்கும்போது வெட்கமாக இருக்கிறது. இத்தனை நாள் யோசித்ததில்லை. தண்ணீர் மோட்டர் போடவேண்டும், தண்ணீர் தொட்டிமீது ஏறி, சரியாக வருகிறதா என்று பார்க்கவேண்டும் என்றெல்லாம் பரபரக்கும். அனுமதிக்கவே மாட்டார் அப்பா. ரொம்ப சின்ன பையனாகவே இன்னும் பார்க்கிறார்களே என்று தோன்றும்.
“பாதுகாப்போடு இருக்கிறது தப்பில்ல. ஆனால், ஓவர் பாதுகாப்பு உடம்புக்கு ஆகாது. இந்த அதீத பாதுகாப்பை உடைக்கிறதுக்காகவே அமெரிக்காவுல கேவர் டுல்லிங்கறவர் ஒரு ஸ்கூல் நடத்தறார். அபாயத்தை அருகே இருந்து பார்க்கிறது எப்படிங்கறதுதான் இவரோட கருத்து….”
கேவர் டுல்லி, முதலில் டிங்கரிங் ஸ்கூல் என்ற விடுமுறைக்கால பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் பெற்றோர்கள். பள்ளிகளும், அரசாங்கங்களும் இதில் சேர்ந்துகொள்கின்றன. ஒருகட்டத்தில், இதெல்லாம் ரொம்பவும் அதிகமாகிவிட்டதோ என்ற எண்ணம் எழாமலில்லை.
பொத்தி பொத்தி வளர்ப்பதால், மாணவர்கள் போதிய பக்குவத்தைப் பெறமுடியவில்லை. நிஜ உலகத்தைச் சந்திக்க முடியவில்லை. துணிச்சலானவர்களாக இல்லை என்ற எண்ணம் ஒருசில பெற்றோர்களிடம் இருக்கிறது. இவர்களுடைய பிரதிநிதிதான் கேவர் டுல்லி.
டிங்கரிங் ஸ்கூலில், எல்லா கருவிகளையும் சிறுவர்கள் கையில் கொடுத்தார். பாலம் கட்டச் சொன்னார். மரச் சட்டங்களையும் பலகைகளையும் பொருத்தி இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனங்கள் தயாரிக்கச் சொன்னார். சிறுவர்கள் குதித்துக்கொண்டு செய்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக வட கலிபோர்னியாவில் 'பிரைட்வொர்க்ஸ்' என்ற வித்தியாசமான பள்ளியைத் தொடங்கிவிட்டார். அபாயத்தை அச்சமில்லாமல் அணுகுவதுதான் இந்தப் பள்ளியின் தத்துவம்.
ஆமாம். சிறுவர்கள் நெருப்போடு வேலைசெய்யலாம், கையில் ரம்பத்தையும் உளியையும் வைத்துக்கொண்டு வேலை செய்யலாம், தண்ணீரில் மிதக்கும் படகைச் செய்யலாம், அதில் பயணமும் செய்யலாம். எதையெல்லாம் பெற்றோர் மனது அபாயம் என்று விலக்கி வைக்கிறதோ, அவற்றையெல்லாம் செய்யவைப்பதுதான் இந்தப் பள்ளியின் பாடத்திட்டம்.
“காயம் பட்டால் ரொம்ப டேஞ்சராச்சே மிஸ்?” என் சந்தேகத்தைக் கேட்டேன். என் வீட்டில் இதற்குத்தானே பயப்படுகிறார்கள்.
“ஏன் காயம் படப் போகுது? முதலில் ஒவ்வொரு கருவியையும் எப்படி பயன்படுத்தணும்னு சொல்லிக் கொடுத்துட்டா, ஆபத்தே இல்லையே?”
“அப்படின்னா?”
“ஆபத்து, கிட்டே போகாதேன்னு தான் பெரியவங்க சொல்வாங்க. ஆனால், ஆபத்துகளை எப்படி கையாள்றதுங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டா, அது ஆபத்தே இல்லையே…உதாரணமா, உன்னை உங்கம்மா டீ போடவே விடறதில்லைன்னு சொன்னே இல்லையா? நீ நெருப்புக்கிட்ட போறது உங்கம்மாவுக்கு பயமா இருக்கு. ஆனால், நெருப்பு எப்படிப்பட்டது, அதன் வெப்பம் எப்படி இருக்கும், அது ஏன் நீலமா எரியுது, அது எப்படியெல்லாம் அலைபாயும், என்ன செஞ்சா அதைக் கட்டுப்படுத்த முடியும்ங்கறதை எப்போ நீ கத்துப்பே?”
“அதை நானே நேரடியாக கையாளும்போது கத்துப்பேனா மிஸ்?”
“கரெக்ட். அதேபோல் கத்தி. கையில் காயம் பட்டுடும்னு சொல்வாங்க. ஆனால், அதனோடு கைப்பிடியை எப்படிப் பிடிச்சுக்கணும், காய்கறிகளை எப்படி லாகவமா வெட்டணும்னு எப்போ தெரிஞ்சுப்பே?”
“கத்தியைக் கையில பிடிச்சு பார்க்கும்போதுதானே மிஸ்?”
“கரெக்ட். அதாவது அபாயங்களை கண்டு விலகி ஓடறதில்லை வாழ்க்கை. அதை எதிர்கொள்வதும், சாமர்த்தியமாகப் பயன்படுத்தறதும், உபயோகமாக மாத்திக்கறதும்தான் முக்கியம்.”
கேவர் டுல்லி, இது போன்ற ஐம்பது அபாயமான விஷயங்களைப் பட்டியலிட்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் ஃபிப்டி டேஞ்சரஸ் திங்க்ஸ் - யூ ஷுட் லெட் யுவர் சில்ரன் டு (Fifty Dangerous Things - You Should Let Your Children Do). இந்தப் புத்தகம் மிகவும் பிரபலமானது.
“சிறுவர்களுக்கு படிப்பு எப்படி தேவையோ, அதே அளவுக்கு தாங்கும் சக்தி, அச்சமின்மை, எதையும் செய்துபார்க்கும் சாகச குணம் ஆகியவையும் தேவை. புத்தகப் புழுவா இருப்பதைவிட, கட்டுப்பெட்டியாக வீட்டை மட்டுமே சுற்றிக்கொண்டு இருப்பதைத் தவிர, எல்லாத்தையும் மொபைல்போன்ல மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கிறதைவிட, நிஜ உலகம் இன்னும் சுவாரசியமானது. சவாலானது. அதைச் சந்திக்க இத்தகைய கடுமையான பயிற்சிகள் வேண்டும்னு நினைக்கறாங்க. பிரைட்வொர்க்ஸ் பள்ளி அந்த வாழ்க்கைப் பயிற்சியைத்தான் மையமாக வெச்சுக்கிட்டு இருக்கு.” என்றார் உமா மிஸ்.
எவ்வளவு விஷயங்கள் எனக்குத் தெரியாமல் போய்விட்டது? அம்மா, அப்பாவுடைய பயத்தைத் தெளியவைத்து, ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
