வலி மிகுதல் 23 - 'கு' விகுதிக்குக் கட்டாயம் வலி மிகும்
வலி மிகுதல் 23 - 'கு' விகுதிக்குக் கட்டாயம் வலி மிகும்
PUBLISHED ON : மார் 04, 2019

ஒரு வினைச்சொல் தனியாக மட்டுமே தோன்றாமல், தன்னோடு துணைவினை ஒன்றைக்கொண்டும் தோன்றும்.
'கண்டேன்' என்று சொல்லாமல், 'கண்டு கொண்டேன்' என்று சொல்வார்கள். 'ஓடினான்' என்று சொல்லாமல் 'ஓடிவிட்டான்' என்பார்கள். 'சென்றான்' என்பதைச் 'சென்றிருந்தான்' என்றும் கூறுவார்கள். இவ்வினைச் சொற்களைப் பாருங்கள்: கண்டான், ஓடினான், சென்றான் என்று தனி வினைச்சொல்லாக இல்லாமல், கண்டு கொண்டான், ஓடிவிட்டான், சென்றிருந்தான் என இருக்கின்றன.
காணும் செயல் நன்கு நடைபெற்றதை உணர்த்துவதற்காகக் 'கண்டு கொண்டான்' என்று சொல்கிறார்கள். ஓடியதன் விரைவுக் குறிப்பு, ஓடிவிட்டான் என்பதில் இருக்கிறது. சென்றிருந்தான் என்பதில், ஓர் உறுதித் தன்மை தெரிகிறது. இவ்வாறு துணைவினைகளாய் அமைகின்ற தொடர்களையும் வினையெச்சத் தொடர்களாகக் கருத வேண்டும்.
ஒரு வினையெச்சத் தொடரில், எங்கெங்கே வலி மிகும், வலி மிகாது என்பனவற்றை இதுகாறும் பார்த்து வந்தோம். இத்தகைய துணை வினைகளைக் கொண்டு அமையும் வினையெச்சத் தொடர்களிலும் அந்த விதிமுறைப்படியே வலி மிக வேண்டும்.
கண்டுகொண்டேன் என்பதில் 'கண்டு' என்ற வினையெச்சம் மென்தொடர்க் குற்றியலுகரமாக (ண்டு) இருந்தமையால் அங்கே வலி மிகவில்லை.
முடித்துக் கொண்டான் என்ற தொடரைப் பாருங்கள். இங்கே 'முடித்து' என்பது வன்தொடர்க் குற்றியலுகரமாக (த்து) இருக்கிறது. வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலி மிகும். அதனால், முடித்துக் கொண்டான் என்று வலி மிகுந்தது.
முதற்சொல், ஒரு வினையைக் குறித்தபடி, 'கு' என்ற விகுதியைப் பெற்று நிற்கையில், அடுத்ததாய் ஒரு வினைச்சொல் வரும். கீழுள்ளவற்றைப் பாருங்கள்.
எடுப்பதற்குக் காத்திருந்தான்
பாடுவதற்குச் சென்றாள்
உண்பதற்குத் தகுந்தது
'கு' என்ற விகுதி, எங்கே வந்தாலும், அங்கே கண்ணை மூடிக்கொண்டு வலி மிகுவித்து விடலாம். மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள் எல்லாவற்றிலும் வலி மிகுந்திருக்கின்றன.
'கு' என்ற விகுதி, பயிலும் சொற்களில், 'அதற்கு, இதற்கு, எதற்கு' ஆகியன இன்றியமையாதவை. இந்தச் சொற்கள் எங்கே வந்தாலும் வருமொழி வல்லினத்தில் தொடங்கினால், கட்டாயம் வலி மிகும். வருமொழி பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்று பார்க்க வேண்டியதில்லை.
அதற்குத் தெரியும்.
இதற்குக் குருவி என்று பெயர்.
எதற்குத் தனியாக நிற்கிறாய் ?
- மகுடேசுவரன்

