PUBLISHED ON : டிச 09, 2019
சாதனை : பஞ்சாயத்தின் வலிமை
1997இல், அரசு ஊழியர்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு. அது வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட 1.88 ஹெக்டர் நிலம் ஆகும். அந்த நிலத்தை வழங்கக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வேங்கைவாசல் பஞ்சாயத்துத் தலைவர் வனஜா தனசேகரனுக்கு ஆணை பிறப்பித்தார்.
ஒதுக்கப்பட்ட நிலம், வண்டிப்பட்டி புறம்போக்கு. அதாவது, பொதுமக்கள் வண்டிகளை ஓட்டிச்செல்லப் பயன்படும் சாலை. அதனால், அந்த இடத்தை அரசு ஊழியர்களுக்குத் தரஇயலாது என்று வேங்கைவாசல் பஞ்சாயத்துத் தலைவர் நிலத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
தமிழ்நாடு அரசு, நிலத்தைப் பயன்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்தது.
பொதுமக்கள் உபயோகப்படுத்தும் சாலையை ஆக்கிரமித்தால், அவர்கள் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளாவார்கள். மேலும் பஞ்சாயத்தின் அனுமதி இல்லாமல் தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று, மாவட்ட ஆட்சியரின் ஆணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் வேங்கைவாசல் பஞ்சாயத்துத் தலைவர் வனஜா.
“வண்டிப்பட்டி புறம்போக்காக இருப்பது தானே பிரச்னை. அந்த நிலத்தை நத்தம் புறம்போக்காக மாற்றி வகைப்படுத்திவிட்டால் போகிறது என்று. நத்தம் புறம்போக்காக மாற்றி, நிலத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள்” என்று ஆணை பிறப்பித்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
உயர் நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து, மேல்முறையீடு செய்தது பஞ்சாயத்து.
“பஞ்சாயத்தின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை வகைப்படுத்தக்கூடாது. மேலும், பஞ்சாயத்துக்கு எதிராகப் பிறப்பித்த ஆணை, அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானது. அதனால், உயர் நீதிமன்றத்தின் ஆணை செல்லுபடியாகாது.” என்று டிவிஷன் பெஞ்ச் ஆணை பிறப்பித்தது.
ஒரு கிராமப் பஞ்சாயத்தின் சக்தியை, இந்தியாவிற்கு காட்டிய சம்பவமாகும் இது.
