PUBLISHED ON : அக் 29, 2018

வல்லபபாய் படேல்
31.10.1875 - 15.12.1950
நாடியாத், குஜராத்
குஜராத், நர்மதை ஆற்றின் நடுப்பகுதியில் 597 அடி உயரத்தில் 'ஒருமைப்பாட்டு சிலை' எனும் பிரமாண்ட சிலையை இவருக்காக உருவாக்கி வருகிறது இந்திய அரசு. 25,000 டன் இரும்புடன் உலகிலேயே உயரமான சிலையாகவும் இது அமைய இருக்கிறது. இந்த அத்தனை சிறப்புகளும் 'இரும்பு மனிதர்' வல்லபபாய் படேலுக்காக!
சிறுவயதில் இருந்தே படிப்பில் முதல் மாணவர். சட்டக் கல்வி முடித்து குஜராத்திலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆனார். அதன் பிறகு, லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்காக வாதாடி, பிரபல வழக்கறிஞரானார். சுதேசி இயக்கத்தில் இணைந்து, காந்திய வழியில் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். குஜராத்தில் பஞ்சம் நிலவியபோது, வரிவிலக்கு கேட்டு பிரிட்டிஷ் அரசிடம் விவசாயிகள் போராடினர். படேல் தலைமை தாங்கிய அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது!
போராட்டங்களும் அதற்கான சிறைவாசமும் அவருக்குப் பழகிப் போனது. மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடியதால் மக்கள் அவரை 'சர்தார்' என்று அன்போடு அழைத்தனர். நியாயத்தை நிலைநாட்டப் போராட வேண்டும் என்னும் வேகம் அப்போதே அவருக்கு இருந்தது. இதுதான், பின்னாளில் அவரை இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அழைத்து வந்தது.
பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபிறகு, சிதறிக்கிடந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடன் ஒன்றுசேர மறுத்துவிட்டன. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் முக்கிய பொறுப்பு படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தார். நாடு முழுவதும் மன்னராட்சி நடந்துகொண்டிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்களை ஒருங்கிணைத்து வெற்றி கண்டார் இந்த 'இரும்பு மனிதர்'!
எளிமை, நேர்மையின் அடையாளமாக இருந்து, விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைசென்று, கடைசிவரை மக்களுக்காக வாழ்ந்து இன்றும் மக்களின் நெஞ்சில் வாழ்கிறார் இந்த இந்தியாவின் சிற்பி!
