
யோசிக்க வைக்கும் கதை புதிர் இது. கவனமாகப் படியுங்கள். விடையைச் சொல்லுங்கள்.
மன்னர் காலத்தில் நடந்த சம்பவம்.
ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த மன்னருக்கு வயதாகிவிட்டது. தனது அரசப் பொறுப்பை மூத்த மகனுக்குக் கொடுத்து, அவனை அரசனாக்குவது அந்தக்கால வழக்கம். இங்கே ஒரு சிக்கல். அந்த மன்னருக்கு இரண்டு மகன்கள். இரட்டைப் பிள்ளைகள் இருவரில் யார் மூத்தவன் என்று எப்படித் தீர்மானிப்பது?
அரசர் யோசித்தார். மந்திரிகளின் அறிவுரைப்படி ஒரு முடிவுக்கு வந்தார்.
இரு மகன்களையும் அழைத்தார். 'பிள்ளைகளே, உங்கள் இருவருக்கும் ஒரு சவால். இருவரின்
குதிரைகளில் யாருடையது கடைசியில் வருகிறதோ, அவர்களுக்கே மன்னராகப் பட்டம் சூட்டப்போகிறேன்' என்றார்.
குறிப்பிட்ட நாளில் பந்தயம் தொடங்கியது.
சகோதரர்கள் இருவரும் தத்தம் குதிரைகளில் ஏறிக்கொண்டனர்.
யாரின் குதிரை கடைசியாக எல்லைக் கோட்டைத் தொடுகிறதோ அவருக்கே அரசாட்சி. எனவே, இருவரும் தங்கள் குதிரையை மிக மிக மெதுவாகச் செலுத்தத் தொடங்கினர்.
செலுத்தினர் என்பதைவிட அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள் என்றும் சொல்லலாம். ஏனெனில் ஓர் அங்குலம் நகர்ந்தாலும் அடுத்தவரை விட முன்னால் செல்ல வேண்டி வருமே... இப்படியே இருந்தால் பந்தயம் எப்படி முடியும்?
இது பெரிய சிக்கலாக இருக்கிறதே... என்ன செய்வது? என்று இரு சகோதரர்களும் குழம்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சிந்தனையாளர் வந்தார்.
சகோதரர்களின் பிரச்னையைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இரண்டே வார்த்தைகள்தான் சொன்னார். சகோதரர்கள் அப்படியே செய்தார்கள். பந்தயம் முடிந்தது. அவர் சொன்ன வார்த்தைகள் என்ன?
விடைகள்:
'குதிரையை மாற்றிக்கொள்ளுங்கள்.' இதுதான் அவர் சொன்ன வார்த்தைகள்
குதிரையை மாற்றிக்கொண்டால், இவன் குதிரை அவனிடம் உள்ளது. அவன் குதிரை இவனிடம் உள்ளது. இப்போது ஒவ்வொருவரும் அடுத்தவர் குதிரையை முதலில் எல்லை கோட்டைத் தொடவைக்க வேண்டும். அதற்கு வேகமாகக் குதிரையைச் செலுத்த வேண்டும். பந்தயம் வெற்றிகரமாக முடியும்.