PUBLISHED ON : பிப் 26, 2024

அன்றாடம் நாம் பேசும் சில பேச்சுகளைப் பார்ப்போம். அவை மாறுபட்டு இருப்பதைக் கவனிப்போம்.
'என்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை.' (1)
'என் தம்பிக்கு எட்டு வயது மட்டுமே ஆகிறது.' (2)
'மருந்தைத் தவறாமல் எடுத்துக்கொள்.' (3)
'இரவு உணவை இங்கேயே முடித்துக் கொள்ளலாம்.' (4)
'ராமுவைப் பள்ளியில் போட்டிருக்கிறார்கள்.'(5)
இந்தச் சொற்றொடர்கள் நன்றாக உள்ளனவா?
இவை ஏன் வித்தியாசமாக உள்ளன என்று பார்ப்போம்.
01. “என்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை” என்று நாம் சொன்னால், நம்மிடம் பணம் கேட்டவர், “அசுத்தமாக இருந்தாலும் கொடு” என்று சொல்லக்கூடும். இங்கே பொருள் குழப்பம் இருக்கிறது. இதை, 'என்னிடம் பணமே இல்லை' என்று கூறலாமே …
02. வயது மட்டும்தான் ஆகிறது; வேறு எதுவும் ஆகவில்லை என்கிற பொருள் வருகிறது. இதை, 'என் தம்பிக்கு எட்டே வயதுதான் ஆகிறது' என்று சொன்னால், குழப்பம் இராது.
03. மருந்தை, அது இருக்கும் இடத்தில் இருந்து எடுத்துக் கையில் வைத்துக்கொண்டால் நோய் தீருமா? 'மருந்தைத் தவறாமல் உட்கொள்' என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.
04. உணவை முடிப்பது என்பது பொருளே கொடுக்கவில்லை. 'இரவு உணவை இங்கேயே உண்டுவிடலாம்' என்பதுதான் அவர் சொல்ல வந்தது.
05. சிறுவனைக் கொண்டுபோய் ஓர் இடத்தில் போடுவது என்றால் என்ன? 'தொப்' என்று போட்டார்களா? அவனுக்கு அடிபட்டிருக்காதா? சரியாகச் சொல்ல வேண்டுமானால், 'ராமுவைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்' என்று சொல்லலாம்.

