வரலாற்றுத் தடம்: உ.வே.சா.வை உறங்க விடாமல் செய்த உரை
வரலாற்றுத் தடம்: உ.வே.சா.வை உறங்க விடாமல் செய்த உரை
PUBLISHED ON : மார் 11, 2024

செய்யுளில் காணப்படும் அரிய சொற்களுக்கு மட்டும் விளக்கம் தரும் உரையை 'அரும்பதவுரை' என்பர். உ.வே. சாமிநாதையர் சிலப்பதிகாரத்திற்கு முகவுரை எழுதிவிட்டு, அரும்பதவுரைக்கு, பின் இணைப்பாகச் சில விளக்கங்களை எழுதத் திட்டமிட்டிருந்தார்.
சனிக்கிழமை கும்பகோணத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் ஒரு புத்தகத்தையாவது பைண்ட் செய்து, கண்ணணால் பார்த்துவிட்டுச் செல்ல விரும்பினார். அச்சுக்குக் கொடுக்கப் பணம் கையில் இல்லை.
வெள்ளிக்கிழமை மாலை திருவல்லிக்கேணியில் இருந்த விசுவநாத சாஸ்திரியிடம் சென்று வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டார். சாஸ்திரி அன்றிரவு உ.வே.சா.வைத் தன் வீட்டிலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டார்.
அரும்பதவுரை எழுத உட்கார்ந்த உ.வே.சா.வுக்குச் சோர்வினால் உறக்கம் கண்களைச் சொக்கியது. அவர் படுக்கச் சென்றார். 'இப்போதுவரை பதவுரை எழுதவில்லையே, நாளை காலை எட்டு மணிக்குள் அச்சுக்குக் கொடுத்தால்தானே புத்தகத்தைக் கண்ணால் பார்க்க முடியும்?'
என்ற கவலை அவரை ஆழ்த்தியது. விடியற்காலையில் எழுந்து எழுதி விடவேண்டும் என்று தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றை எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டார். உறக்கத்திலும் பூர்த்தியாகாத பக்கங்கள் அவர் கண்முன்னே வந்து போயின. இரவு இரண்டு மணிக்கு உறக்கம் கலைந்தது. மீண்டும் உறங்கவும் அவருக்கு மனம் வரவில்லை.
'அயர்ச்சியில் நெடுநேரம் உறங்கி விட்டால், காரியம் கெட்டுவிடுமே' என்ற கவலை மேலோங்கி இருந்தது. கண்கள் சொக்க, கொட்டாவி விட்டார். அண்ணாந்து பார்த்தார். சுவரில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. யாருடைய படம் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்தப் படத்தில் இருந்தவர், சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவர் என்று தோற்றத்திலேயே தெரிய வந்தது. 'இவர் இத்தனை துடிப்புடன் இருக்கும்போது, நாம் ஏன் சோர்வில் மூழ்கி இருக்க வேண்டும்?' என்ற சிந்தனை எழ, அவர் உற்சாகமாகி, அரும்பதவுரையை எழுதி முடித்தார்.
எழுதியவற்றை மறுபடியும் படித்துச் சரிசெய்தார். மறுநாள் காலை, சுவரில் இருந்த படத்தில் இருந்தவர் ஆங்கிலேய அதிகாரி நார்ட்டன் துரை என்று பதில் அளித்தார் விசுவநாத சாஸ்திரி. குறிப்பிட்ட நேரத்திற்குள் புத்தகத்தின் பதவுரையை அச்சுக்குக் கொடுத்து விட்டு ஊருக்குச் சென்றார் தமிழ்த்தாத்தா. அவர் கடுமையாக உழைத்து அச்சிட்ட தமிழ் நூல்கள்தான், இன்று நம் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.

