PUBLISHED ON : அக் 14, 2019
தமிழ்ப் பெயர்: பூமன் ஆந்தை
ஆங்கிலப் பெயர்:Brown fish owl
அறிவியல் பெயர்:கெடுபா நீலோனென்சிஸ் (Ketupa neylonensis)
வாழிடம்:மரங்கள், பாறைகள்
காணப்படும் இடங்கள்: காடுகள், கிராமங்கள், ஏரிகள் கொண்ட நீர்நிலைகள்
அளவு: 48 -- 61 செ.மீ.
உருவத்தில் கொம்பன் ஆந்தையைப் போல் இருந்தாலும், பூமன் ஆந்தை சற்று அடர் பழுப்புநிற உடலைக் கொண்டிருக்கும். அதன் மேல் சிறு புள்ளிகள் காணப்படும். இதன் கால்களில் முடிகள் இருப்பதால், மற்ற ஆந்தைகளுடன் இதை வேறுபடுத்திக் காட்டும். கழுத்தும், மார்புப் பகுதியும் சற்று வெள்ளை நிறம் கலந்தாற்போன்று காணப்படும்.
-இந்த ஆந்தை பகல் நேரத்தில் உயரமான மரங்களில் ஓய்வெடுக்கும். மாலை சூரியன் மறைந்ததும், ஏரிகளின் மேல் பறந்து மீன்களை வேட்டையாடும்.
மீன் தவிர, சிறு பறவைகளையும் வேட்டையாடி உண்ணும் இயல்புடையது. மரக்கிளைகளில் இயற்கையாக அமைந்த பொந்துகளிலும், பாறை இடுக்கிலும் தங்கும். அந்த இடுக்குகளில்தான் முட்டைகள் இட்டு வைத்திருக்கும். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டம் இவற்றின் இனப்பெருக்க காலம். மேலும், இந்த காலகட்டங்களில் இணை சேர்ந்து குஞ்சு பொரிக்கும்.
சங்க இலக்கியங்களில் ஊமன் என்ற பெயரில் வந்துள்ளது. காலப்போக்கில் மருவி 'பூமன்' என்று மாறி இருக்க வாய்ப்புண்டு. ஊமத்தங் கூகை என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளது. ஊம்... ஊம் என்று குரல் எழுப்புவதால், இந்தப் பெயரில் அழைக்கப்பட்டு இருக்கலாம்.
பூமன் ஆந்தை கத்துவதை தமிழகத்தில் சில கிராமப்புறங்களில் நல்ல சகுனமாகப் பார்க்கும் வழக்கம் உண்டு. இரவு வேளைகளில் பூமன் கூவினால், குழந்தைகளைத் தாலாட்டக் கூவுவதாக நம்பப்படுகிறது.
