தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அறம் செய்து பழகு!

அறம் செய்து பழகு!

அறம் செய்து பழகு!


PUBLISHED ON : ஜன 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு முறை ஏதாவது ஓர் ஊருக்குப் போய் வரும்போதும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஞாநி மாமா எங்களோடு பகிர்ந்து கொள்வார். அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று யோசிக்கத் தூண்டுபவையாக அவை இருக்கும். அனுபவங்கள் எதுவும் அசாதாரணமானவை அல்ல, சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படக்கூடியவைதான். அவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்க முடியும்.

இந்த முறை மதுரை, திருச்சிக்கெல்லாம் போய்விட்டு வந்த அனுபவங்களை மாமா சொல்லிக்கொண்டிருந்தார். ரயில் நிலையம், பஸ் நிலையம், பொது அரங்கங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கு உதவும் விதத்தில் சறுக்குப் பாதை (Ramp), நகரும் படிக்கட்டுகள் (Escalator) முதலியவற்றை அமைப்பதில் நம் நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறது. ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலும் இவை கட்டாயமாக அமைக்கப்படுகின்றன.

திருச்சி ரயிலடியிலும் மதுரை ரயிலடியிலும் நிலையத்தின் முன்புறம் இல்லாமல் உட்புறம் இருக்கும் நடைமேடைகளுக்குச் (Platform) செல்ல, மிகவும் செங்குத்தான மாடிப்படிகளில் சூட்கேசுடன் ஏறி இறங்கி சிரமப்பட்ட அனுபவத்தை மாமா சொல்லிக்கொண்டிருந்தார்.

“யாரும் உதவ முன்வரவில்லையா? சூட்கேசை உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டு உதவியிருக்கலாமே?” என்று கேட்டான் பாலு.

“அதுதான் இந்த அனுபவத்தில் முக்கியமான அம்சம். என்னைக் கடந்து நூற்றுக்கணக்கானவர்கள் போய் வந்துகொண்டிருந்தார்கள். நிறைய இளைஞர்கள். குழு குழுவாக ஏதோ விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்த விளையாட்டு வீராங்கனைகள்கூட இருந்தார்கள். நான் ஒவ்வொரு படிக்கட்டாக சூட்கேசை எடுத்துவைத்து, நானும் மெல்ல மூச்சு வாங்கிக்கொண்டு ஏறிக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே பலரும் கடந்து போனார்கள். கடைசியில் எனக்கு உதவ முன்வந்தவர்கள் யார் தெரியுமா?'' என்று கேட்டார் மாமா.

எங்களால் ஊகிக்கவே முடியவில்லை.

“சீருடையில் இருந்த இரண்டு வடநாட்டு ராணுவ வீரர்கள்தான். என்னைப் பார்த்துவிட்டு ஹிந்தியில் 'பெட்டியைக் கொடுங்கள்' என்று சொல்லி வாங்கிக்கொண்டார்கள். ரயில் நிலைய வாசல் வரை வந்து உதவினார்கள்” என்றார் மாமா.

நானும் பாலுவும் பலமாகச் சிரித்தோம். “உங்களுக்குத்தான் ராணுவம் என்றாலே பிடிக்காதே” என்றான் பாலு.

'ஆமாம். இன்னொரு நாட்டைப் பகை நாடாகச் சித்தரிப்பது, போர் நடத்துவது, ஒருவரையொருவர் தாக்கிக் கொன்று அழிப்பது இதெல்லாம் இல்லாத உலகம் தான் நான் விரும்புவது. எந்த நாட்டுடன் என்ன பிரச்னையானாலும் பேசித் தீர்க்க முடியும் என்றே நான் நம்புகிறேன். அதற்கு எல்லா நாடுகளும் ராணுவத்தைக் குறைக்க வேண்டும் என்பது என் கருத்து. அது வேறு விஷயம்” என்றார் மாமா.

ரயிலடியில் மாமாவுக்கு ராணுவ வீரர்கள் உதவியது எதனால் என்று யோசித்தோம். பல ரயில்களில் கூட்டமாகப் பயணம் செய்யும் ராணுவச் சிப்பாய்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் சண்டை வருவது பற்றியும் மாமா சொல்லியிருக்கிறார். “ஆண்டுக் கணக்கில் சொந்த ஊரைவிட்டு, குடும்பத்தை விட்டு ஒரு சில நாட்கள் விடுமுறையில் மணிக்கணக்கில் பயணம் செய்து வீடு திரும்பும் அந்த வீரர்களின் மன அழுத்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால் சண்டை வராது” என்றார் மாமா.

பொது இடத்தில் ஒருவருக்கு சிறுஉதவிகள் செய்ய முன்வருவது என்பது, ராணுவப் பயிற்சியினால் அவர்களுக்கு வந்த பழக்கம் என்று மாமா விளக்கினார். அமைதிக் காலத்தில் சிவிலியன்களான பொதுமக்களுக்கு உதவுவது என்பது ராணுவப் பயிற்சியிலேயே சொல்லித் தரப்படுகிறது. சிவிலியன்களுக்கு உதவ வேண்டும் என்பது அந்த அளவுக்கு போலீஸாருக்குப் பயிற்சியில் சொல்லித் தரப்படுவதில்லை. எல்லோரையும் எப்போதும் சந்தேகப்படுவதற்குத்தான் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.

“என் கவலையெல்லாம், ஏன் அத்தனை இளைஞர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் என்னைக் கடந்து போனார்கள் என்பதுதான்” என்றார் மாமா. ஏன் என்பதற்கு எனக்கும், பாலுவுக்கும் பதில் தெரியும்.

ஏன் என்றால், இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் கல்வியில் சொல்லித் தரப்படுவதில்லை என்பதுதான். ஒன்று குடும்பம் சொல்லித் தரவேண்டும். குடும்பங்கள் பொதுநலத்தை சொல்லித்தருவதைவிட அதிகமாக சுயநலத்தைத்தான் கற்றுத் தருகின்றன. பள்ளிக்கூடத்தில் பாடம், மதிப்பெண் என்பதைத் தாண்டிச் செல்வதே இல்லை.

“இந்த முறை பயணத்தில் இன்னொரு அனுபவமும் இருந்தது” என்றார் மாமா. “மதுரையிலிருந்து திருச்சிக்கு ஒரு பகல் நேர சிறப்பு ரயிலில் சென்றேன். அந்த ரயில் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் செல்லும் ஸ்பெஷல் ரயில். பெட்டிகள் முழுக்க சிவப்பாடை அணிந்த பெண்கள்தான்.

நான் மட்டும் தான் ஒரே ஆண். வந்த பெண்கள் எல்லோரும் கிராமத்துப் பெண்கள். பள்ளிக்கூட படிப்பறிவில்லாதவர்கள். ஆனால், எல்லோரும் உணவு முதல் பிஸ்கட், பழம், பொறி கடலை என்று எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டார்கள். பக்திதான் அவர்களை இணைக்கின்ற விஷயம். ஆனால், அதைவிட அந்தப் பெண்கள் எல்லோருக்கும் அன்றாட அலுப்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இரண்டு நாள் இப்படி சுற்றுலா செல்வது ஒரு பெரிய விடுதலை உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்துகொண்டேன்” என்றார் மாமா.

“பக்தியும், அனுபவமும் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப் பட்டிருக்கலாம். ஆனால், காலப்போக்கில் அவையே சுமையாக மாறிவிடும்போது சிக்கலாகிவிடுகிறது” என்றேன்.

“பாடம் முதல் பக்தி வரை எதுவுமே சுமையாக மாறக்கூடாது. எதுவுமே வாழ்க்கையில் சுமையாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் வாழ்க்கையின் வெற்றி” என்றான் பாலு.

“இன்றைக்குத்தான் கடைசியில் பாலு நான் ராணுவத்தில் சேரப்போகிறேன் என்றோ, ஆன்மிக சாமியார் ஆகப் போகிறேன் என்றோ சொல்லவில்லை. ஆச்சரியம் தான்” என்றேன்.

“நான் எதுவும் ஆகப்போவதில்லை. எது நடக்கிறதோ அது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்றான் பாலு.

“இதுவும் கடந்துபோகும்” என்றார் மாமா. எல்லாரும் சிரித்தோம்.

வாலுபீடியா 1

உலக அணைப்பு தினம் -ஜனவரி 21. ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு ஆதரவாக இருப்போம் என்று காட்ட அணைத்து (Hug) அன்பைத் தெரிவிக்கும் நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.

வாலுபீடியா 2

பொது இடங்களில் சறுக்குப்பாதை, நகரும் படிக்கட்டுகளை அமைத்தாக வேண்டும் என்று சட்டம் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டு சமவாய்ப்புச் சட்டத்தின் 46ஆம் பிரிவு இதைச் செய்யும்படி மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us