தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மழைநீர் சேகரிப்பு மாமனிதர்!

மழைநீர் சேகரிப்பு மாமனிதர்!

மழைநீர் சேகரிப்பு மாமனிதர்!


PUBLISHED ON : ஜூலை 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்திற்குள் சென்னையில் குடங்களைத் தூக்கிக்கொண்டு மக்கள் அலையத் தொடங்கி விடுகின்றனர். காரணம், சென்னை பெருநகரம், அதைச் சுற்றியுள்ள ஏரிகளை மட்டுமே குடிநீர்த் தேவைக்கு நம்பியுள்ளது. ஏரிகளில் நீர் சேமிப்பதோடு, வீடுகளிலும் சேகரிப்பைத் தொடங்குவது எதிர்கால அவசியம். இவ்வகையில் முன்னோடியாகச் செயற்பட்டு வருகிறார் பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த இந்திரகுமார்.

வீட்டைச் சுற்றிலும் கசிவுநீர்க்குட்டைகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரைச் சேமித்துப் பயன்படுத்தி வருகிறார் இந்திரகுமார்.

'எங்க வீட்டிலுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை, எக்ஸ்னோரா அமைப்பின் நிர்மல் தான் அமைத்துக் கொடுத்தார். 1998ஆம் ஆண்டில்தான் நிலத்தடிநீர் சேகரிப்பைத் தொடங்கினேன். இதுவரை நாங்க தண்ணீர் பஞ்சத்திற்காக அலையும் நிலை வரலை' என்று பேசத் தொடங்கினார்.

இவர் தன் வீட்டின் கொல்லைப்புறத்தைத் தாழ்த்தியும், வாசல்புறத்தை உயர்த்தியும் கட்டி மழைநீரைச் சேமித்து வருகிறார். வீடு அமைந்துள்ள வளாகத்தில் கிடைக்கும் மழை நீரை, கசிவுநீர்க்குட்டைகள் மூலமாக நிலத்தடி நீராக சேமிக்கிறார்.

''எங்க வீட்டின் அளவு 3,200 ச.அடி. ஆண்டுக்கு சராசரியாக நூறு செ.மீ. மழை கிடைக்குதுன்னாக்கூட நாங்க இதுவரை தோராயமாக 3 லட்சம் லிட்டர் மழைநீரைச் சேமிச்சிருக்கிறோம்” என்று துல்லியமாகக் கணக்குச் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார். தமிழக அரசு மழைநீர் சேகரிப்பை அமலாக்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அதை இந்திரகுமார் உருவாக்கிவிட்டார்.

இவர் வீட்டிலுள்ள கழிவறைத் தொட்டியில், பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி அதைச் சுத்திகரிக்கிறார். கழிவு நீரிலுள்ள யூரியாவை எடுக்க நீர்ப்பாசியைப் பயன்படுத்துகிறார். கழிவுநீர்த் தொட்டியிலுள்ள கழிவுகளை உணவாகக் கொள்ள குறிப்பிட்ட பாக்டீரியாக்களைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார் இந்திரகுமார்.

”வீட்டுக் கழிவறைகளில் வேதிப்பொருட்கள், அமிலங்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாக எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றின் தோல்களை மிக்சியில் நன்கு அரைத்து பேஸ்ட் போலாக்கி பயன்படுத்துங்க. சூழல் கேடு குறையும்” என்கிறார்.

சமையல் அறை, குளியல் அறை என தனித்தனியாகப் பிரித்து அந்நீரிலுள்ள வேதிப்பொருட்களை இந்திரகுமார் சுத்திகரிக்கிறார். இதன்மூலம் அதைத் தூய்மையான நிலத்தடி நீராக்குகிறார். குளியல் அறையிலிருந்து வெளியேறும் சோப்பு நீரை கல்வாழை, சேப்பங்கிழங்கு செடிகள் மூலம் தூய்மையாக்குகிறார். மாடிச்சுவர் விளிம்புகளைத் தோட்டமாக்கி நெல், வேர்க்கடலை என பயிராக்கி ஆச்சரியம் தருகிறார் இந்திரகுமார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us