
மெலனின் ரத்த செல்கள் மூலம் உற்பத்தியாகிறது.
தவறு. மெலனின் மெலனோசைட் செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மெலனோசைட்டுகள் மெலனினை முடியின் தண்டுக்குள் செலுத்தி, அதற்குத் தனித்துவமான நிறத்தை அளிக்கிறது. இந்தச் செல்கள் தோலின் ஆழமான அடுக்கில் முடி பாப்பிலாவிற்குச் (மயிர்க்கால்களின் கீழ்ப்பகுதி) சற்று மேல் அமைந்துள்ளன. மெலனினில் இரண்டு வகைகள் உள்ளன. யூமெலனின் என்பது, இருண்ட நிறம் கொண்டது. இது பழுப்பு, கறுப்பு முடிக்குக் காரணமாகிறது. பியோமெலனின் என்பது, மஞ்சள் நிறத்தைத் தருகிறது. குறைந்த அளவு யூமெலனின் உற்பத்தி செய்யப்படும்போது, மஞ்சள் நிற முடி உண்டாகிறது. மெலனோசைட்டுகள் குறைவாக இருந்தால், மெலனின் உற்பத்தி குறைந்து வயதாகும்போது முடி நரைக்கிறது.
பெருங்காயம் ஃபெருலா தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
உண்மை. உலகின் பல பகுதிகளில் இது உணவில் சுவையூட்டியாகவும், பல்வேறு நோய்களுக்கான பாரம்பரிய மருந்தாகவும் பயன்படுகிறது. தாவரவியல் பெயர் ஃபெருலா அசஃபோட்டிடா (Ferula asafoetida). இது அம்பெல்லிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபெருலா, தாவரங்களின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இச்செடி, 30 - -40 செ.மீ. அளவுள்ள இலைகளுடன் 2 மீட்டர்கள் உயரம் வரை வளர்கிறது. இத்தாவரங்கள், மத்திய ஆசியா, மேற்கு ஆப்கானிஸ்தான், ஈராக், துருக்கி, கிழக்கு ஈரான் உள்ளிட்ட நாடுகளில் வளர்கின்றன. இதன் நெடி அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் பொதுவாகக் கிடைக்கிற கூட்டுப் பெருங்காயத் தூளானது, 30 சதவீத பெருங்காயப் பசையுடன் அரிசி மாவு, அரேபிய கோந்து கலந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

