PUBLISHED ON : ஆக 27, 2018

ஆசியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்று தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம். இது எந்த ஆண்டு நிறுவப்பட்டது என்பதற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால், ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறது. நூலகத்தைச் சோழர் காலத்தில் 'பண்டாரம்' என்று அழைத்தனர். பண்டாரம் என்றால் கருவூலம் என்று பொருள். சரஸ்வதி, கல்விக்கான கடவுளாகக் கருதப்படுவதால், நூல்கள் நிறைந்த இடம் 'சரசுவதி பண்டாரம்'.
இந்நூலகத்தில், சோழர் காலத்தைச் சார்ந்த சுவடி நூல்கள், நாயக்கர் காலத்துச் சுவடிகள், மராட்டிய மன்னர்களின் சுவடிகள், ஆங்கிலேயர் காலத்து அச்சு நூல்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் இருக்கின்றன.
இச்சுவடிகள் தமிழ், கிரந்தம், சமஸ்கிரும், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மராத்தி மொழியின் ஒரு வடிவமான 'மோடி' எழுத்தில் அமைந்த ஆவணங்களும் உள்ளன.
மொழிச் சுவடிகளில் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், கணிதம், ஜோதிடம், இசை, வானியல் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.
மன்னர் காலத்து அச்சு நூல்கள், ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், டேனிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளில் உள்ளன.
இந்த நூலகம் இந்திய விடுதலைக்குப்பின் பலமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பழஞ்சுவடிகள், பழமையான நூல்கள் மட்டுமல்லாது, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சு நூல்கள் வாசகர்கள் படித்து பயன்பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
நினைவிற்கு
1. சரஸ்வதி மகால் நூலகம் .........................ஆண்டுகள் பழமையானது (500, 400)
2. சோழர் காலத்தில் நூலகம் .........................என்று அழைக்கப்பட்டது (பண்டாரம், காந்தாரம்)
3. மராட்டிய மொழியின் ஒரு வடிவம்....................... எழுத்து (மோடி, மேடி)
- மணி.மாறன்
