
அக்டோபர் 2, 1869: மகாத்மா காந்தி பிறந்த நாள்
இந்திய விடுதலைப் போரில் மகத்தான பங்களிப்பு செய்தவர். சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலமாக இந்திய விடுதலைக்கு வழிவகுத்தார். உலக அமைதி, சமூக ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அனைத்துத் தரப்பு மக்களும் அறியச் செய்வதே இந்த நாளின் நோக்கம்.
அக்டோபர் 2, 1908: டி.வி. ராமசுப்பையர் பிறந்த நாள்
தினமலர் நாளிதழின் நிறுவனர். சமூக சேவகர், மனிதநேயம் படைத்தவர், தேசப்பற்று மிக்கவர். சாதி உயர்வு, தாழ்வு நீக்கப் பாடுபட்ட தமிழகத் தலைவர்களில் முக்கியமானவர். இவரது நினைவு அஞ்சல் தலை மத்திய அரசால் 2008ல் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 4, 1884: சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்
விடுதலைப் போராட்ட வீரர்; ஆன்மிகவாதி. ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைப் போர் பற்றிப் பேசினார். பாரதியாருடன் சேர்ந்து மேடைகளில் விடுதலைப் போராட்ட முழக்கமிட்டார். தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தி சிறை சென்றார்.
அக்டோபர் 4, 1931: உலக வன விலங்குகள் நாள்
விலங்குகளைப் பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். இத்தாலி நாட்டு வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 5, 1994: உலக ஆசிரியர் நாள்
மாணவர்களை வலுப்படுத்தினால் நிலையான சமூகத்தைக் கட்டியெழுப்பலாம். அதற்கு உதவும் ஆசிரியர்களின் மேன்மையை வருங்காலத்தினர் உணரவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 8, 1932: இந்தியா - விமானப் படை நாள்
முப்படைகளுள் ஒன்று விமானப்படை. உலகின் நான்காவது பெரிய விமானப்படை இந்தியாவினுடையது. விமானப்படை வீரர்கள் போரில் ஈடுபடுவதோடு, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும், அமைதி காப்பதிலும் ஈடுபடுகின்றனர். அவர்களின் தியாகங்களை நினைவுபடுத்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

