PUBLISHED ON : அக் 23, 2017

அக்டோபர் 24, 1921: ஆர்.கே.லஷ்மண் பிறந்த நாள்
'திருவாளர் பொதுஜனம்' (The Comman Man) என்கிற கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தை வரைந்த, இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் தம்பி. பத்மவிபூஷண், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அக்டோபர் 24, 1948: ஐக்கிய நாடுகள் தினம்
உலகின் மிக உயர்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது ஐ.நா. சபை. இந்தச் சபை எதைப் பற்றியும் விவாதம் செய்யவும், ஆராயவும், சமாதானம், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் உரிமைகளைக் கொண்டுள்ளது. இந்தச் சபையின் சாதனைகளை எடுத்துக் கூறுவது இந்த நாளின் நோக்கம்.
அக்டோபர் 27, 1920: கே.ஆர்.நாராயணன் பிறந்த நாள்
இந்தியாவின் 10வது ஜனாதிபதி. கல்லூரி விரிவுரையாளராகத் தனது பணியைத் தொடங்கினார். லண்டனில் பத்திரிகையாளராக இருந்தபோது, அப்போதைய பிரதமர் நேருவின் கோரிக்கையை ஏற்று, இந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார். துணை ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார்.
அக்டோபர் 27, 2005: உலக ஒலி, ஒளி பாரம்பரிய நாள்
யுனெஸ்கோ அமைப்பு இந்த நாளை அங்கீகரித்தது. திரைப்படம், தொலைக்காட்சி போன்ற காணொலிக் காட்சிகளால் (Audio visuals) ஏற்படும் நன்மை, தீமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம்.
அக்டோபர் 28, 1955: இந்திரா நூயி பிறந்த நாள்
உலகின் முன்னணி குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO). இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை 2007ல் பெற்றார். ஃபார்ச்சூன் பத்திரிகையின் 2006 - 2009ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
அக்டோபர் 29, 1985: விஜேந்தர் சிங் பிறந்த நாள்
இந்திய குத்துச்சண்டை வீரர். பெய்ஜிங் ஒலிம்பிக் (2008) போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றார். குத்துச் சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை உடையவர். இந்தச் சாதனைக்காக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் பெற்றிருக்கிறார்.
