PUBLISHED ON : நவ 13, 2017

நவம்பர் 14, 1889 - ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். 1947 முதல் தன் வாழ்நாளின் கடைசி வரை (1964 வரை) பிரதமராக இருந்தார். குழந்தைகள் மீது அன்பு கொண்டிருந்ததால், இவர் பிறந்த நாள் தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 14, 2006 - உலக நீரிழிவு நாள்
நீரிழிவு குறைபாட்டைக் குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை சார்லஸ் பெஸ்ட் உடன் இணைந்து கண்டுபிடித்தார் ஃப்ரெடரிக் பான்டிங் (கனடா). அவர் பிறந்த நாளை உலக நீரிழிவு தினமாக ஐ.நா. அமைப்பு அறிவித்தது. நீரிழிவு நோய் குறைபாடு குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்பது, இந்த நாளின் நோக்கம்.
நவம்பர் 15, 1986 - சானியா மிர்சா பிறந்த நாள்
இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை. 2003 முதல் 2013 வரை மகளிர் டென்னிஸ் சங்கத்தால், 'இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை' என்ற சிறப்பு பெற்றார். 2004ல் இவருக்கு, 'அர்ஜுனா விருது' வழங்கப்பட்டது. இவரது சுயசரிதை நூல் 'ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்' (Ace against Odds).
நவம்பர் 17, 1941 - அனைத்துலக மாணவர் நாள்
செக்கோஸ்லோவேகியா, பிராக் நகரில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939, நவம்பர் 17ல் நடந்தது. நாஜிப் படையினரால் அடக்கப்பட்ட அந்தப் போராட்டத்தில், 10 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் நினைவாக, அனைத்துலக மாணவர் அமைப்பால், லண்டனில் முதன்முதலில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
நவம்பர் 18, 1923 - ஆலன் ஷெப்பர்ட் பிறந்த நாள்
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதர்; முதலாவது அமெரிக்கர். மெர்குரி விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றினார். அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்று, நிலவில் இறங்கியதும் அங்கே கால்ஃப் விளையாடி இருக்கிறார்!
நவம்பர் 19, 2013 - உலக கழிவறை நாள்
மக்களையும், உலக சுகாதாரத்தையும் பாதுகாக்க, ஐக்கிய நாடுகள் சபையில் இந்த நாளை அனுசரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கம்.
