PUBLISHED ON : பிப் 26, 2018

பிப்ரவரி 28, 1987 - இந்திய தேசிய அறிவியல் நாள்
சர். சி.வி. இராமன் தனது புகழ்பெற்ற 'ராமன் விளைவு' ஆராய்ச்சி முடிவை இந்த நாளில்தான் வெளியிட்டார். அதன் நினைவாகவும், அறிவியல் மேதைகளைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்திய அரசால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 1, 1968 - குஞ்சராணி தேவி பிறந்த நாள்
பளு தூக்குதலில் 44, 46, 48 கிலோ எடைப்பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். தொடர்ச்சியாக ஏழு பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்திய அரசு, அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை இவருக்கு வழங்கியுள்ளது.
மார்ச் 1, 1983 - மேரிகோம் பிறந்த நாள்
உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜுவ்காந்தி கேல் ரத்னா ஆகிய விருதுகள் பெற்றுள்ளார். 'அன்பிரேக்கபிள்' என்கிற தனது சுயசரிதையை 2013இல் வெளியிட்டார்.
மார்ச் 3, 1839 - ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த நாள்
நவீன தொழில்துறையில், இந்தியாவின் முன்னோடி. இந்திய தொழில்துறையின் தந்தை என்றும் அறியப்படுகிறார். டாடா குழுமத்தை நிறுவியதும் இவர்தான். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரம் இன்று இவருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது.
மார்ச் 3, 1847 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் பிறந்த நாள்
அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். 1876இல் தொலைபேசியைக் கண்டறிந்தார். காது கேளாதோர் பேசவும், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதற்குமான முறைகளை மேம்படுத்தினார். 'பெல்' தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் இவரே!
மார்ச் 4, 1971 - தேசியத் தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்
பல்வேறு தொழில்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உடல்நலன், பாதுகாப்பு, பணிபுரியும் சூழல் ஆகியவை பாதிக்காத வகையில் பணி செய்ய வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
