தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புது உலகம் காட்டும் கதைகள்!

புது உலகம் காட்டும் கதைகள்!

புது உலகம் காட்டும் கதைகள்!


PUBLISHED ON : அக் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசிப்பு

தியோடர் ரூஸ்வெல்ட்

27.10.1858 - 6.1.1919

“இன்னிக்கு என்ன புக் படிச்சே கதிர்?” காலையில் பள்ளிக்கு நடந்துவரும்போது உமா மிஸ் கேட்டார்கள். புத்தகமா? எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பள்ளிப் புத்தகத்தைத் தவிர வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்கவே முடியவில்லை. முன்பெல்லாம், நூலக பாடப் பிரிவில் ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிப்பேன். அடுத்த ஒரு வாரத்துக்குள் அதை முடித்துவிடுவேன். இப்போது, அந்தப் பாட வேளையையும் வேறு ஏதேனும் சப்ஜெக்ட் மிஸ் எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

“பேப்பர் கூட படிக்க முடியலை மிஸ்.”

“ஏன்? படிக்க நேரமே இல்லைன்னு சொன்னா, நான் ஏத்துக்கவே மாட்டேன். உன்னையே நீ ஏமாத்திக்கறேன்னு அர்த்தம்.”

“ஏன் மிஸ் அப்படிச் சொல்றீங்க? புத்தகம் படிச்சா என்ன கிடைக்கப் போகுது?”

“உலகப் புகழ்பெற்ற அத்தனை தலைவர்களும் பெரும் படிப்பாளிகள். வாசிப்பாளர்கள். இன்னிக்கும் நாம் புகழற மார்க் ஜுகர்பர்க், வாரன் பஃபெட், நாராயணமூர்த்தி, பில் கேட்ஸ் எல்லோருமே தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருப்பவங்க. தியோடர் ரூஸ்வெல்ட்டைப் பத்தி தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவே.”

“அவர் அமெரிக்காவின் 26வது அதிபர் தானே மிஸ்?”

“கரெக்ட். அவர் மகா படிப்பாளி. காலையில் பிரேக்ஃபஸ்ட்டுக்கு முன்னாடி ஒரு புத்தகத்தைப் படிச்சு முடிச்சுடுவார். மத்த வேலைகளைப் பொறுத்து, இராத்திரிக்குள்ள இன்னும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களைப் படிச்சுடுவார். இதெல்லாம் அவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்திலேயே செஞ்சுருக்கார். மிக மிக அதிகமான புத்தகங்களைப் படிச்சவர்னு இவரைத்தான் சரித்திரம் கொண்டாடுது. அவர் புத்தக வாசிப்பு பத்தி பல ஆலோசனைகள் சொல்லியிருக்கார்.”

“அதெல்லாம் என்ன மிஸ்?”

“மிகச் சிறந்த நூறு புத்தகங்கள், ஐம்பது புத்தகங்கள், இதையெல்லாம் நீங்க படிச்சே தீரணும்னு சொல்லி, பலர் பலவிதமான பட்டியல் போடுவாங்க. தங்களுடைய பட்டியலைப் பத்தி ரொம்பவும் பெருமையாவும் பேசிப்பாங்க. ரூஸ்வெல்ட் அப்படிப்பட்ட பட்டியல்களில் அர்த்தமே இல்லைங்கறார். வாசிப்புக்கான விருப்பங்களும் அதற்கான வாய்ப்புகளும் ஏராளம். உண்மையில் அளவே இல்லைங்கறார்.”

“அப்புறம்?”

“ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வாசகருக்கு ஒரு புத்தகம் சுவாரசியமாகத் தோன்றலாம்.”

“அப்படின்னா, எல்லா நேரமும் எல்லா புத்தகமும் எல்லோருக்கும் பிடிக்கணும்னு, அவசியமில்லையா மிஸ்?”

“கரெக்டா சொன்னே. ஒரு புத்தகத்துலேருந்து கிடைக்கவேண்டிய முதற்பயன், வாசிப்பு இன்பம் தான். பிற லாபங்கள் எல்லாம் துணைப் பயன்கள் தான். முதற்பயன்ங்கறது மகிழ்ச்சிதான்.”

“ஓ!”

“இன்னொரு விஷயமும் சொல்றார். நமக்கு எதைத் தேடிப் படிக்கணும்ங்கற தெளிவு இருக்கணும். மத்தவங்க சொல்றதுக்காகப் படிக்கக்கூடாது. மத்தவங்களுடைய தேர்வு எப்படி உன்னுடைய தேர்வாக இருக்க முடியும்?”

“அப்படின்னா, மத்தவங்க நல்லா இருக்குன்னு சொல்ற புக், நமக்கு பிடிச்சிருக்கணும்னு அவசியமில்லை.”

“சரியா சொன்னே. இப்படியும் பார்க்கலாம். உனக்கு ஒரு புத்தகம் பிடிக்கலைன்னா, அது உன் வரைக்கும் மோசமான புத்தகம். மத்தவங்க சொல்றாங்களேன்னு, நீயும் அதைப் பாராட்டறா மாதிரி நடிக்க வேண்டியது இல்லை. புத்தகங்கள் நண்பர்கள் மாதிரி. நண்பர்கள் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ரூல்ஸ் போட முடியாது இல்லையா? அதுபோலத்தான் புத்தகங்கள் பத்தியும் ரூல்ஸ் போட முடியாது. என்ன புத்தகங்கள் படிக்கணும் பலரும் ரூஸ்வெல்ட்டைக் கேட்டிருக்காங்க. அவரோட தேர்வு கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் தான். அமெரிக்காவின் அதிபராக இருந்தவரே, வேறு புத்தக வகைகளைப் படிங்கன்னு சொல்லல. கவிதையையும் கதையும் தான் படிக்கச் சொல்றார்.”

“அற்புதம் மிஸ்.”

“சும்மா எல்லோரும் சொல்றாங்களேன்னு புத்தகங்களை வாங்கி, வீட்டு நூலகத்துல அடுக்கக் கூடாது. நீயோ, உங்க குடும்பத்துல இருக்கிற யாரோ ஒருத்தர் படிப்பாங்கன்னு தெரிஞ்சா மட்டுமே, புத்தகங்களை வாங்கிச் சேகரிக்கணும். சும்மா, எல்லோரும் பெருமையா நினைப்பாங்கன்னு நினைச்சு புத்தகங்களை வாங்கிச் சேர்க்கக் கூடாது. புத்தகங்களை ஏன் படிக்கணும்ங்கறதுக்கு ரூஸ்வெல்ட் சொல்ற விளக்கம் தான் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துது.”

“என்ன சொல்றார் மிஸ்?”

“மனிதனோட இயற்கையான குணங்கள் என்ன, அவன் மனசுல இருக்கிற ஆழமான எதிர்பார்ப்புகள் என்ன என்பதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா, புத்தகங்கள் தான் படிக்கணுங்கறார். இதெல்லாம் கதைகளிலும் கவிதைகளிலும் தான் வெளிப்படும். அதனால், படைப்புகளை ஏராளமா படிக்கணும்ங்கறது அவரோட வழிகாட்டல்.”

“அப்ப, கதையிலும் கவிதையிலும் தான் வாழ்க்கைப் பத்தி தெரிஞ்சுக்க முடியுமா மிஸ்?”

”சந்தேகமே வேண்டாம். ஒவ்வொரு எழுத்தாளரும், தனக்குத் தெரிஞ்ச ஓர் உலகத்தை நம் கண்முன்னே கொண்டுவருவார். நாம் அந்த உலகங்களையும் வாழ்க்கை முறைகளையும் பார்த்தே இருக்க முடியாது. கேட்டே இருக்க முடியாது. ஒவ்வொரு புதிய புத்தகமும் ஒரு புது உலகத்தைத் திறந்து காண்பிக்குது. அது வெளிஉலகம் மட்டுமல்ல, மன உலகத்தையும் புரிஞ்சுக்க, புத்தகங்கள் தான் உதவும். அதனால் தான் ஏராளமான கதைப் புத்தகங்களை படிங்க, படிங்கன்னு சொல்றோம்.”

பள்ளி வந்துவிட்டது. உமா மிஸ், வகுப்பறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். நான் நூலக அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us