தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்குவது, கல்வி தொடர்பான படங்கள் திரையிடுவது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என, அனுதினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில், மாணவர்கள் ஈடுபடுவதால், ஆசிரியர்கள் விடுப்பில் இருந்தாலும் நிகழ்ச்சிகள் தவறாமல் நடந்துவிடும்.
இந்தச் செயற்பாடுகளை மேலும் திறம்பட ஒருங்கிணைத்து நடத்துவதற்கு சட்டமன்ற பாணியிலான ஓர் அமைப்பை ஏற்படுத்தினால் என்ன என்ற சிந்தனை, பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திற்குத் தோன்ற, அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்களும் மாணவர்களும் செய்து முடித்தனர். மாணவ முதலமைச்சர், துணை முதல்வர், வேளாண் அமைச்சர், கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், மக்கள் தொடர்பு அமைச்சர், எனப் பள்ளியின் செயற்பாடுகளைப் பொறுத்து, பல்வேறு பதவிகளை உருவாக்குவது; அந்தப் பொறுப்புகளுக்கு மாணவர்களைப் போட்டியிட வைப்பது; அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தான் நிறைவேற்ற விரும்பும் துறை சார்ந்த செயல்திட்டங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டு, மாணவர்கள் போட்டியிட விண்ணப்பிப்பது; அந்தச் செயல்திட்டங்களை முன்னிலைப்படுத்தி, போட்டியாளர்கள் வாக்குகோரி, சக மாணவர்களிடையே பிரசாரம் செய்வது; என மளமளவென வேலைகள் நடந்தேறின.
தேர்தல் நாளன்று, பெயர் விவரம் சரி பார்ப்பது, மை வைப்பது, வாக்கு செலுத்துவது ஆகிய மூன்று முக்கிய தேர்தல் பணிகளுக்கும், தனித்தனி தேர்தல் அலுவலர்களாக ஆசிரியர்கள் செயற்பட்டார்கள். தேர்தல் பார்வையாளர்களாக, தேவகோட்டை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியும், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர், சந்திரமோகனும் செயற்பட்டார்கள். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தலைச் சந்திக்கும் அனுபவம் இப்படித்தான் இருக்கும் என்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தின.
எட்டாம் வகுப்பைச் சேர்ந்த ஜெனிஃபர், “அனைவரும் 18 வயதில்தான் ஓட்டுப் போடுவார்கள். பள்ளிப் பருவத்திலேயே ஓட்டுப் போட்டது எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் தேர்தலில் போட்டியிடும் காலங்களில் இந்த அனுபவம் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.
“பதவிக்கு வந்தால் என்ன வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளோம்,” என்று சொன்னது ஏழாம் வகுப்பைச் சேர்ந்த காயத்ரி. கடந்த 30.8.2017 அன்று, நகராட்சி ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, முதல்வராக அஜய் பிரகாஷும், துணை முதல்வராக காயத்ரியும், கல்வி அமைச்சராக கார்த்திகேயனும்,வேளாண் துறை அமைச்சராக ராஜேஷும், மக்கள் தொடர்புத் துறை அமைச்சராக விக்னேஷும், உணவுத் துறை அமைச்சராக ராஜேஷும், சுகாதாரத் துறை அமைச்சராக சபரியும், பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜெனிஃபரும், அறிவியல் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நந்தகுமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பள்ளியின் செயற்பாடுகளை மெருமேற்ற இருக்கும் இந்த மாணவ பேரவைக்கு, 'பட்டம்' இதழின் வாழ்த்துகள்.

