PUBLISHED ON : டிச 11, 2017

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான படிப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. பல்வேறு கல்வியாளர்கள் குழு கலந்தாலோசித்து, புதிய பாடத்திட்ட மாற்றம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், கல்வித்துறையினர் ஆகியோரிடம், பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளன. பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து, மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? புதிய பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்? சென்னை, நங்கநல்லூர் பி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கி.ஹரிஹரன், 11ஆம் வகுப்பு
பல ஆண்டுகளா பழைய வரலாறையே படிச்சிட்டிருக்கோம். வரலாறு பாடத்தைப் பொறுத்தவரை, நவீன வரலாறு பத்திய பாடங்கள் சேர்க்கணும். அதேபோல, பொருளாதாரம், புள்ளியியல் பாடப்பிரிவுல எல்லா தகவல்களும் அப்பப்ப அப்டேட் பண்ணணும். ஒவ்வோராண்டும் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் பத்தின தகவலை, அறிவியல், கணினி பாடங்களில் சேர்க்கணும்.
பி.பாலசுப்ரமணியன், 11ஆம் வகுப்பு
புதிய பாடத்திட்டத்துல, 30 மார்க் செயல்முறை தேர்வுக்கு வெச்சிருக்காங்க. அதனால எல்லா மாணவர்களும் ஈசியா மார்க் எடுத்துடலாம்னு நினைக்கறாங்க. பிராக்டிகலுக்கு 30 மார்க் அப்படிங்கறதைக் குறைக்கணும். சப்ஜெக்டை நல்லா படிக்கணும்னா தியரியிலதான் முடியும். பிராக்டிகலும் வேணும். ஆனா, அதுக்கு மார்க் குறைவா வைக்கலாம். உடல், மன ஆரோக்கியம் பத்தின கல்வியறிவை சின்ன வயசுல இருந்தே படிக்கிற வகையில, புதிய பாடத்திட்டம் இருக்கணும்.
மூ.ராகேஷ், 11ஆம் வகுப்பு
புதிய பாடத்திட்டத்துல மாற்றம் செய்யறதோட புதிய பாடப்பிரிவுகளையும் இணைக்கலாம். இன்ஜினீயரிங், மருத்துவம்னு தேடிட்டிருந்த காலம் மாறி, இப்ப நிறையப் பேர் காமர்ஸ் படிக்கறாங்க. விவசாயம், பொருளியல், தொழிற்கல்வி இதுபோல பாடப்பிரிவுகளை ஆறாம் வகுப்பிலேயே சேர்க்கலாம். வங்கியியல் பாடங்கள் இன்னைக்கு எல்லோருக்குமே அவசியம். அதையும் பாடத்திட்ட மாற்றத்துல சேர்க்கணும். முடிந்த வரை காட்சித் தகவல்களாக பாடங்களை உருவாக்கலாம். அது கற்றலை எளிமையாக்கும்.
மூ.கார்த்தி மாதேஷ், 11ஆம் வகுப்பு
அறிவியல், வரலாறு பாடங்களை ரொம்பச் சுருக்கமா, தேவையான தகவல்களை படவிளக்கங்களாக சொன்னா படிக்க எளிமையா இருக்கும். சி.பி.எஸ்.இ. போன்ற பிற கல்வி முறைகளில் என்ன இருக்கோ அதுபோலவே புதிய பாடத்திட்டத்திலயும் மாற்றங்கள் செய்யணும். ஆறாவது வகுப்பிலிருந்தே கணினி, கணக்குப் பதிவியல், வங்கியியல் நடைமுறை போன்றவற்றின் அடிப்படைகளை பாடங்களாகச் சேர்க்க வேண்டும்.
அ.தினேஷ்குமார், 10ஆம் வகுப்பு
புதிய துறைகளைச் சேர்க்கணும். அறிவியல், வரலாறு, புவியியல் எல்லாமே அவுட் டேட்டடா இருக்கு. அப்படியில்லாம, எல்லா பாடங்களிலும் உரிய மாற்றங்கள் செய்யணும். பத்தாவதுல ஐந்து பாடம் படிக்கறோம். பத்தாம் வகுப்புக்கு முன்னேயே தொழிற்கல்வியை கட்டாய பாடப்பிரிவா சேர்க்கணும்.
வெ.நித்யஜோதி, 11ஆம் வகுப்பு
பாடங்களில மாற்றம் செய்யறது மட்டும் போதாது. பள்ளிகளில லேப் கிளாஸ் குறைவா இருக்கு. பிராக்டிகலான ஆய்வு அனுபவங்களை நிறைய செஞ்சு பார்த்தாதான் பாடம் புரியும். பாடங்கள் எல்லாமே பத்தி பத்தியா இல்லாம சுருக்கமா, எளிமையா இருந்தா நல்லது. விளக்கப்படங்கள் நிறையக் கொடுக்கணும். மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து விவாதித்துப் புரிஞ்சுக்கற வகையில பாடங்கள் அமைஞ்சா சிறப்பா இருக்கும்.
ந.லாவண்யா, 10ஆம் வகுப்பு
புதிய பாடத்திட்டத்தில முக்கியமா மாத்த வேண்டியது தமிழ், ஆங்கிலத்துலதான்னு நினைக்கறேன். இலக்கியங்களைப் படிக்கிறபோது, இதுவரைக்கும் பழைய பாடல்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகளையே படிச்சிட்டு இருக்கோம். அவங்களுக்குப் பிறகு யாருமே குறிப்பிடத்தகுந்த அளவுக்கு எழுதலையான்னு தோணுது. ஆங்கிலத்திலயும், தமிழ்லயும் தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெறணும்.
சு.சத்யா, 11ஆம் வகுப்பு
இலக்கண, இலக்கியப் பாடங்களை புதுசா மாத்தணும். நுழைவுத் தேர்வுக்கு என்ன படிக்கணுமோ அதை ஆறாம் வகுப்புலயிருந்தே கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் கொடுக்கணும். வேலைக்கு போறதுக்குத் தேவையான பொதுஅறிவுக் கல்வியைத் தனிப்பாடமா சேர்க்கணும். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களுக்கான புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செஞ்சா நல்லாயிருக்கும்.
