PUBLISHED ON : மார் 21, 2016

மார்ச் 23 - ஜி.டி.நாயுடு பிறந்த தினம்
தமிழக அறிவியல் மேதைகளில் முக்கியமானவர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. சுருக்கமாக, ஜி.டி. நாயுடு. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்தவர். தொழில்நுட்பம் வளராத காலத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த கருவிகள் பிரமிக்க வைப்பவை. இந்தியாவின் முதல் மோட்டார் ஜி.டி.நாயுடுவால் 1937ல் தயாரிக்கப்பட்டது.
அவர் தயாரித்த எலக்ட்ரிக்கல் ரேசர் (Electrical Razor) மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மெல்லிய ஷேவிங் பிளேட், கேமராக்களில் தூரத்தை சரிசெய்வது (Zooming), பழச்சாறு பிழியும் கருவி, மண்ணெண்ணெயால் இயங்கும் விசிறி போன்றவற்றைக் கண்டுபிடித்தார்.
அவர் 1941-ஆம் ஆண்டு ஐந்து வால்வுகளைக் கொண்ட ரேடியோவை 1941ல் தயாரித்தார். அதை மிகக் குறைந்த விலையாக, 70 ரூபாயில் கிடைக்கச் செய்தார். இரண்டு இருக்கைகளைக் கொண்ட பெட்ரோல் காரை 1952-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதன் விலை ரூபாய் 2000 மட்டுமே.
ஜி.டி.நாயுடு விவசாயத்திலும் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்.
விதைகள் இல்லாத நாரத்தங்காய், ஆரஞ்சுப் பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி, நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18.5 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் ஜி.டி.நாயுடுவின் அதிசயச் செடிகளில் 39 கதிர்கள் வரை இருந்தன! அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது. ஒரே வாழைத் தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர்.
அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள் அவருடைய அதிசயப் பருத்திச் செடிக்கு 'நாயுடு காட்டன்' என்ற பெயர் சூட்டிக் கவுரவித்தனர்.
இவரது நினைவாக, கோயம்புத்தூரில் 'ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டுள்ளது. வியக்க வைக்கும் விஞ்ஞானக்கூடமாக அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில், தொழில்நுட்ப வரலாறுகள், பழைய கால வால்வு ரேடியோ, இந்தியாவின் முதல் மோட்டார், ரெக்கார்ட் பிளேயர், கால்குலேட்டர் போன்ற பழங்காலத்து அரிய பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
