PUBLISHED ON : ஜன 23, 2017
இயற்கை வழிபாடு, இயற்கை மருத்துவம் இரண்டிலும் மிகுந்த பற்றுடையவர் மு.வ. (மு. வரதராசனார்). அவருக்கு உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு உண்டு. உடல்நலம் குன்றினால்கூட மருந்து சாப்பிட மாட்டார். தம்முடைய கடைசி நாட்களில்தான் மற்றவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, சில மருந்துகளை எடுத்துக்கொண்டார்.
ஒரு கட்டத்தில், சாப்பாட்டில் உப்பைக் குறைக்கவேண்டும் என்கிற நிலை வந்தது மு.வ. வுக்கு. “நல்லவேளை, மருந்து எதுவும் சாப்பிடவேண்டாம். உப்பைத்தானே குறைக்கச் சொல்கிறார்கள்” என்று சொல்லி, அதை கடைப்பிடிக்கலானார். அத்துடன் சாப்பிடும்போது பக்கத்தில் ஒரு சிறு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரை வைத்துக்கொள்வார். சமைத்த காய்கறிகளை அந்த நீரில் நன்றாக கழுவிவிட்டுச் சாப்பிடுவார்.
சினிமா, நாடகம் எதிலும் ஆர்வமில்லாதவர் மு.வ. அவருடைய மனைவி விருப்பத்திற்காக எப்போதாவது படம் பார்க்கச் செல்வார். அவர் மனைவி படம் பார்க்க, இவர், மூன்று மணிநேரமும் தம்முடைய இருக்கையில் அமர்ந்து உறங்கிவிட்டு வருவார்.
எதைப் படித்தாலும் அதிலுள்ளவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார். தம்முடைய மாணவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டினார். ஒரு சமயம் ஒரு குறும்புக்கார மாணவர், ஒரு குறிப்பிட்ட பத்திரிகையின் பெயரைச் சொல்லி அதிலிருந்தும் குறிப்பெடுக்க வேண்டுமா என்று கேட்டார். அதற்கு மு.வ. சொன்ன பதில். “ஆம். அப்போதுதான் அந்தப் பத்திரிகையில் குறிப்பெடுக்க எதுவுமில்லை. அதைப் படிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பது உனக்குப் புரியும்.”
மு.வ. பகவத் கீதை படிப்பதுண்டு. தாயுமானவர் பாடல்களில் ஈடுபாடு உண்டு. “பண்ணேன் உனக்கான பூசை...” போன்ற பாடல்களை வாய்விட்டு இசையோடு பாடுவார். வீட்டில் பூசை அறை என்று தனியாக எதுவும் கிடையாது. தினமும் காலையில் நீராடி முடித்தவுடன் தம்முடைய தாயாரின் படத்தின் முன்னால் போய் நின்று சற்றுநேரம் கண்களை மூடி அவரை வணங்கிவிட்டுத்தான் அன்றைய வேலைகளைத் தொடங்குவார்.
மு.வ.வுக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் கிடையாது. மாநிலத்திலேயே முதலாவதாகத் தமிழில் தேர்ச்சிபெற்றபோது திருப்பனந்தாள் மடம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கியது. அவர் பரிசு வாங்கப் புறப்பட்டநேரம் 'ராகு காலம்' என்று அவருடைய தாயார் சொன்னார். அதற்கு, ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. நான் முயற்சியைத்தான் நம்புகிறேன். நேரங்களை அல்ல” என்று கூறினார்.
சுப்ர.பாலன்

