PUBLISHED ON : அக் 16, 2017

இந்தியவின் முதல் பசுமை ரயில் நிலையமாக செகந்திராபாத் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமைக் கட்டட ஆய்வகம் (Indian Green Building Council - Confederation of Industry - IGBC-CII) இத்தேர்வை நடத்தியுள்ளது. ஒரு கட்டடத்தைப் 'பசுமைக் கட்டடம்' என்று தீர்மானிக்க, அங்கே தண்ணீர் மேலாண்மை, மின்சார சிக்கனம், சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம் போன்ற முக்கியமான காரணிகள் உதவுகின்றன. மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கான புதுமையான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த ரயில் நிலையத்தின் மின் தேவையில் 37 சதவீதம் வரை சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. ரசாயன உரங்கள் அற்ற இயற்கை விவசாய முறையில் செடிகள், மரங்கள் வளர்க்கப்படுகின்றன. குப்பை சேகரிக்கும் நவீன வசதிகள், எல்.ஈ.டி. விளக்குகள், கார்பன் டை ஆக்சைட் சென்ஸார்கள், வயதானோருக்கு உதவும் பேட்டரி வாகனங்கள் என, பல்வேறு செயற்பாடுகளின் மூலம் செகந்திராபாத் ரயில் நிலையம் இந்த விருதுக்குத் தகுதியானதாக விளங்குகிறது.
கடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவில், நிலைய அதிகாரிகளுக்கு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக பசுமைக் கட்டடங்களுக்கான கெளன்சிலின் தலைவர் டாய் லீ சியாங்க் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் டெரி வில்ஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட இந்த விருது மூன்று ஆண்டுகளுக்கானது.

