''பட்டமே என் வளர்ச்சிக்கு ஆதாரம்'' 'நாசா' செல்லும் மதுரை மாணவர்கள்
''பட்டமே என் வளர்ச்சிக்கு ஆதாரம்'' 'நாசா' செல்லும் மதுரை மாணவர்கள்
PUBLISHED ON : ஜன 27, 2020

''இந்த மாணவர்கள் அனைவரும் மிகச் சிறந்த கேட்கும்திறனை வளர்த்துக்கொண்டவர்கள், அதனாலே, அவர்கள் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் இந்த மாணவச் சிங்கங்களும் தங்கங்களும், இந்த நாட்டை வழிநடத்துகிற தலைவர்களாக வருவார்கள் என்பதே என் நம்பிக்கை” என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேருவகையோடு பேசிய இடம், நமது தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழின் 'பதில் சொல் அமெரிக்கா செல்' மதுரை வினாடி வினா நிறைவு நிகழ்ச்சியில்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கம் காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் சாரிசாரியாக வந்தவண்ணம் இருந்தனர். நமது பட்டம் இதழ் சார்பாக, மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தேர்வான 90 அணியினர் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தனர்.
ஒரு மாணவி, பட்டம் இதழ் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து வைத்துப் படித்துக்கொண்டிருந்தார். இன்னொரு அணியினரோ, அத்தனை இதழ்களின் பைண்டு வால்யூம்களையும் எடுத்து வந்து கடைசிநேர தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சரியாக, காலை 9 மணிக்கு தகுதிச் சுற்று தொடங்க, அத்தனை மாணவர்களும் விறுவிறுவென விடை எழுதத் தொடங்கினர். பின்னர், அந்த 90 அணியினரில் மிகச் சிறப்பாக விடைகள் எழுதிய 8 அணியினர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான இறுதிச் சுற்று ஆரம்பமானது. அதில், குறுக்கெழுத்து, விடை ஒன்று, தொடர்பு ஒன்று, பட்டம் இதழ் அட்டைகளில் இருந்து கேள்விகள் என்று பல சுற்றுகள் நடைபெற்றன. வேகமாகவும் உற்சாகமாகவும் மாணவர்கள் விடைகள் அளிக்க, மதிப்பெண்களும் உயர்ந்துகொண்டே சென்றன.
இறுதியில், சிவகங்கையிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், நா. கிரிஷா மால்னியும், து. கீதணியும், முதல் பரிசு பெற்றனர். இவர்களே, அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா'வுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர்.
இரண்டாம் இடத்தை, சூரக்குளத்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆர்.அபிநந்தனும், க.ஆதினேஸ்வரனும் பெற்றனர். மூன்றாம் இடத்தை ஸ்ரீவி லைன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.விஜய்மதியும் எஸ்.ஹரிநாத்தும் பெற்றனர்.
முன்னதாக, பட்டம் இதழையும் மாணவர்களையும் ஊக்கப்படுத்திய பள்ளி தாளாளர்களுக்கும் முதல்வர்களுக்கும் 'தங்கத் தாமரை' விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை தினமலர் இணை இயக்குநர் ஆர். சீனிவாசன் வழங்கி கெளரவித்தார்.
“என் வளர்ச்சிக்கான ஓர் ஆதாரமாக நான் பட்டம் இதழைக் கருதுகிறேன். எனக்கு நிறைய கனவுகள் உண்டு. அதையெல்லாம் அடைய நிறைய அறிவும் ஞானமும் வேண்டும். அதற்குப் பட்டம் இதழ் தான் துணை புரிகிறது.” என்று முதல் பரிசு பெற்ற கிரிஷா மால்னி தெரிவிக்க, “நாசா போகணுங்கறது என் கனவு. அதற்கான வாய்ப்புக் கிடைக்குமான்னு சந்தேகமாக இருந்துச்சு. இப்போ அது நிறைவேறியிருக்கு,” என்றார் மற்றொரு வெற்றியாளரான து. கீதணி.
மாணவர்களின் உற்சாகம் கொப்பளித்தது, ஆடியன்ஸுக்கான கேள்விகளின் போதுதான். அரங்கமே அதிர அதிர பதில்கள் வந்தன.
மேடைக்கு வந்த எட்டு அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசு பெற்ற அணியினருக்கு தலா 54,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்புகள் வழங்கப்பட, மூன்றாம் பரிசுபெற்ற அணியிருக்கு தலா ரூ. 25,000 பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. எல்லா மாணவர்களுக்கும் வேட்டிகளும் வெள்ளி நாணயங்களும் கைக்கடிகாரங்களும் கூட பரிசுகளாக வழங்கப்பட்டன.
அரங்கத்தில் இருந்து ஆடியன்ஸ் கேள்விகளுக்குப் பதில் அளித்த மாணவர்களுக்கு தலா ரூ. 1,000 பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.
இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் பேசும்போதுதான், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மேற்கண்டவாறு பேசினார். அவர் சொன்னது போலவே, மாணவர்கள் தனித்திறன் பெற்றவர்களாக இருந்தனர்.
வெளியேறியபோது, பல பள்ளி மாணவர்கள், ''அடுத்த ஆண்டு நிச்சயம் நாங்கள் நாசா போட்டியில் வெற்றி பெற்றே தீருவோம்'' என்று உற்சாகம் பொங்க பேசியது, மகிழ்ச்சி அளித்தது.
- ஆர்.வெங்கடேஷ்

