PUBLISHED ON : அக் 03, 2016

குழந்தைகள் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஜான் நியூபெரி (John newbery) என்பவர். இங்கிலாந்தில் கி.பி. 1713ல் பிறந்தார். அனைவரும் பெரியவர்களுக்கான நூல்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், குழந்தைகள் பற்றியும், அவர்களின் விருப்பம், செயல் திறன், ஆற்றல் குறித்தும் யோசித்தவர். கி.பி.1744ல் குழந்தைகளுக்கான முதல் படக்கதைப் புத்தகத்தை அவர் வெளியிட்டார். குழந்தைகளின் வாசிப்பு நிலை பற்றி சிந்தித்து, அதற்கேற்றவாறு அவர் புத்தகங்கள் எழுதினார். எழுதிய புத்தகங்களை விற்பனை செய்ய லண்டனில் ஒரு புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார்.
புத்தகங்கள் தரமான தாளிலும், கண்ணை கவரும் விதத்திலும் அச்சிடப்பட்டு இருந்தன. அட்டையிலும் குழந்தைகள் படங்கள் இடம்பெற்றிருந்தன. எ லிட்டில் ப்ரெட்டி பாக்கெட் புக் (A Little Pretty Pocket- Book) என்பதுதான் அந்த முதல் புத்தகத்தின் பெயர். இந்தப் புத்தகம் 1762ல் அமெரிக்காவில் மீண்டும் வெளியிடப்பட்டது
அமெரிக்க நூலகச் சங்கம், கி.பி. 1922 முதல் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு ஜான் நியூபெரி பெயரில் பதக்கம், பரிசு வழங்கி வருகிறது.
