PUBLISHED ON : செப் 02, 2019

அமேசான் நதி உலகில் ஒரு பெரும் நதி. இந்த பெரும் நதி எப்படி உருவாகிறது? வானிலிருந்து பொழிகின்ற மழை, ஆங்காங்கே சிறு நீரோடைகளாக, நிலத்தில் வழிந்தோடும். இப்படிப்பட்ட சிறு ஓடைகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரும் நதியை உருவாக்கும். அவற்றை நாம் துணை ஆறுகள் (Tributary) என்கிறோம். இப்படிப்பட்ட பல துணை ஆறுகளின் சங்கமமே, அமேசான் நதி.
ஓடைகள் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சங்கமிக்கிற வகையில் நிலப்பரப்பு, மேலிருந்து கீழ்நோக்கி சாய்வாக (உதாரணம் மலைகள்) இருக்கும். நீரோடைகள் இயற்கையாகவே அமைந்த பள்ளங்கள், ஓட்டைகள், வெடிப்புகள் மூலமாக மற்ற நீரோடைகளுடன் சேர்ந்து இந்தப் பெரும் நதியை உருவாக்குகிறது.
துணை ஆறுகளை இந்த அமேசான் நதியின் மீது வழியவிடுகின்ற நிலப்பரப்பை நாம் அமேசான் படுகை (Amazon Basin) என்கிறோம்.
தென் அமெரிக்காவின் 35% பரப்பளவு (63,00,000 கி.மீ.) அமேசானின் நதிப்படுகையாகும். இந்தப் படுகையில், 85% அமேசானின் மழைக்காடுகள் அமைந்துள்ளன.
இந்த நதிப்படுகை பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், கயானா, பெரு, சுரினாம், வெனிசுலா போன்ற நாடுகளில் பரவியிருக்கிறது.
அடர்த்தியான காடுகளால் நிறைந்த இப்பகுதி, பச்சைக் கடல் (Green Ocean Amazon) போல் காட்சியளிக்கும். எனவே, அமேசானின் மழைப் பொழிவுகள்பற்றி ஆய்வுகள் நடத்தும் வளிமண்டல ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வுத் திட்டத்திற்கும் மேற்சொன்ன பெயரை உபயோகித்துள்ளனர்.
மழைக்காடுகளுக்கும் வெப்பமண்டல மேகங்களுக்கும் (Tropical Clouds) இடையே நடக்கும் நீர் சுழற்சியைப்பற்றி ஆராய்வதே இவர்களது நோக்கம். 2014ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆய்வுகளைத் தொடங்கினர்.
இந்த ஆய்வுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆற்றல் துறை மற்றும் அமேசான் ஆராய்ச்சி பௌண்டேஷன் (Department of Energy - (DOE), Amazonas Research Foundation) போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன.
மழைப்பொழிவுகள் பற்றியும், மனிதனால் உண்டாகும் காடு அழிப்புகள் ஏற்படுத்தும் பருவநிலை மாற்றங்கள் பற்றியும் இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
