PUBLISHED ON : ஜன 30, 2017

கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள பச்சையாகவும், உட்புறம் இனிப்பான சிவப்பு சதைப்பகுதி சாறுடனும் காணப்படும். தர்பூசணியில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ஆகியவற்றுடன் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.
எதிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நாடு ஜப்பான்! ஜப்பானிலும் தர்பூசணிப்பழங்கள் கோடையில் மிக அதிகமாக விரும்பி உண்ணப்படுகின்றன. உருவில் பெரியதாய், உருண்டு வளர்ந்து குளிர்சாதனப்பெட்டியிலும், கடைகளிலும் நிறைய இடத்தை ஆக்கிரமித்து, இடப் பிரச்னை ஏற்படுத்தியதால், ஜப்பானிய விவசாயிகள் வித்தியாசமாக, சதுர வடிவில் அழகிய தர்பூசணியை பயிர் செய்கிறார்கள். டொமொயுகி ஓனோ (Tomoyuki Ono) என்னும் ஜப்பானியப் பெண்ணே 1978ல், முதன்முதலில் இதுபோன்ற சதுர வடிவப் பழங்களை உருவாக்கி சாதனை புரிந்தார். ஒருபுறம் திறந்திருக்கும் சதுர வடிவ கண்ணாடிப் பெட்டியில், தர்பூசணி சிறிய காயாக இருக்கும்போதே உள்ளே வைத்து எளிதாக சதுர வடிவில் விளைவிக்கிறார்கள். இது மட்டுமல்ல; பிரமிட், இதய வடிவ தர்பூசணிகளும் உருவாக்கப்படுகின்றன.
தற்போது விவசாய ஆராய்ச்சியாளர்கள், பல புதிய வகை தர்பூசணி ரகங்களையும் கண்டுபிடித்திருப்பதால், மஞ்சள், வெள்ளை நிறங்களிலும், சுவையான உட்சதை கொண்ட தர்பூசணி பழங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் சந்தைகளில் கிடைக்கின்றன.
- அ.லோகமாதேவி, பேராசிரியை

