PUBLISHED ON : நவ 11, 2019

பிற்காலச் சோழர்களின் தமிழ் அவையைத் தலைமையேற்று நடத்திய பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். தற்போது திருவெறும்பூர் என்று அழைக்கப்படும் மலரி என்ற ஊரிலே பிறந்தவர்.
விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவைகளிலும் புலவராக வீற்றிருந்தவர்.
குலோத்துங்க சோழனுக்கு ஒட்டக்கூத்தரிடம் மிகுந்த ஈடுபாடு. மன்னனின் அவையில் மட்டுமன்றி உள்ளத்திலும் வீற்றிருந்தார் ஒட்டக்கூத்தர். இருவரிடையேயும் மதிப்பான நட்பு இருந்தது. அரசனின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார் ஒட்டக்கூத்தர்.
மன்னனின் ஆட்சிச் சிறப்பைப் புகழ்ந்து பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.
முற்காலத்தில் அரண்மனை முன்பு மணி கட்டப்பட்டிருக்கும். அதற்கு ஆராய்ச்சி மணி என்று பெயர். அரசனின் ஆட்சியில் குறைகண்டோர் அந்த மணியை அடிப்பார்கள். மணியோசையைக் கேட்டு அரண்மனையிலிருந்து வெளியே வரும் அரசன், மணியடித்தவரின் குறையை உடனே தீர்த்துவைக்க வேண்டும்.
அக்காலத்தில் அரசனிடம் நேரடியாக முறையிடுவதற்கு இப்படி ஒரு வழக்கம் இருந்தது. குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் ஆராய்ச்சி மணியின் நாவு அசையவே இல்லையாம். அவ்வளவுக்கு யாருக்கும் குறையின்றி ஆட்சி செலுத்தியவன் குலோத்துங்கன். அதுமட்டுமன்றி அவனுடைய பேரரசு பரந்து விரிந்திருந்ததாம். இப்பொருளில் ஒட்டக்கூத்தர் முதலிரண்டு அடிகளைப் பாடுகிறார்.
'ஆடுங் கடைமணி நாவசையாமல் அகிலமெலாம்
நீடுங் குடையைத் தரித்தபிரான்
ஒட்டக்கூத்தர் இவ்வாறு பாடி முடித்துவிட்டு அடுத்த அடியை எடுப்பதற்கு முன்பாக மன்னன் முந்திக்கொண்டான். தம்மை இவ்வாறு புகழ்ந்து பாடும் அவைப்புலவரை மன்னனும் சிறப்பித்துத் தொடர்கிறான்.
'இந்த நீணிலத்தில்' பாடும் புலவர் புகழ் ஒட்டக்கூத்தர் பாதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழன் என்றே எனைச் சொல்லுவரே.'
“மேற்சொன்னவாறு பாடும் புகழ்பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர் காலடித் தாமரையைத் தன் தலையில் சூடிக்கொண்ட குலோத்துங்க சோழன் என்றே என்னைச் சொல்வார்களே…” என்று புலவரைப் புகழ்ந்து கூறுகிறான் சோழன்.
மன்னரைப் புகழ்ந்து புலவர்கள் பாடுவது வழக்கம். புலவரைப் புகழ்ந்து ஒரு மன்னன் பாடியது அரிய செயலாகும். அப்பாடலில் புலவரின் காலடியைத் தன் தலையில் சூடிக்கொண்டிருப்பவனாகச் சொன்னது உயர்வினும் உயர்வு.
அக்காலத்தில் மன்னர்களும் தமிழ்ப்புலமை பெற்றிருந்தார்கள் என்பதற்கும் கற்றறிந்தோரைத் தலைமேல் வைத்துக்கொண்டாடினர் என்பதற்கும் மேற்சொன்ன பாடல் எடுத்துக்காட்டு.
- மகுடேசுவரன்
