PUBLISHED ON : டிச 09, 2019

உள்ளாட்சிகளின் வெற்றிக்கதையைப் பேசினாலே, குத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த இளங்கோவன் பெயர் நினைவுக்கு வரும். இவரது வெற்றிக்குக் காரணம் என்ன? அவரோடு பேசினோம்:
கிராமத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது எப்படி?
எனக்கு குத்தம்பாக்கத்தை 'மாதிரி கிராம'மாக மாற்ற வேண்டும் என்கிற ஆசை வந்தது. சின்ன வயதில் இருந்து பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்களே… 'அறம் செய விரும்பு' என்று. அது என் மனத்தில் படிந்தது. சின்ன வயதில் என் தந்தையார், சுற்றி இருப்பவர்களுக்குச் சின்னச்சின்ன உதவிகள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவரால் பெரிய அளவில் செய்ய முடியவில்லை. பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் செய்யவில்லை. அதனால் நாம் செய்யலாம் என்று தோன்றியது.
அப்போது உங்கள் கிராமத்தின் நிலை எப்படி இருந்தது?
கிராமம் மிகவும் பின்தங்கியிருந்தது. ஜாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்தார்கள். கொடுமையான வறுமை. குடிப் பழக்கத்தால் ஆண்கள், பெண்களைச் சித்ரவதை செய்வது போன்றவை இருந்தன. தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி போன்றவை எல்லாம் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற ஆசை வந்தபோது, தற்செயலாக 'பஞ்சாயத் ராஜ்' என்கிற மத்திய அரசின் திட்டமும் வந்தது. 'பஞ்சாயத்துகளுக்குக் கூடுதல் அதிகாரம்', 'மக்களுக்கே அதிகாரம்' 'கிராம மக்களே திட்டமிடலாம்' போன்ற எண்ணங்களை அது விதைத்தது. தேர்தலில் நின்று பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். மொத்தப் பஞ்சாயத்தின் தன்மையும் எனக்குத் தெரியும். என்னென்ன செய்ய முடியும் என்று தெரியும். சித்தாந்தங்கள் படித்து, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, ஐந்தாண்டுத் திட்டங்கள் தயாரித்தோம். பின்னர், கிராமசபையைக் கூட்டி, மக்களோடு பேசி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மக்களையும் இணைத்துக்கொண்டு வேலையைத் தொடங்கினோம். வெற்றி, தேடி வந்தது.
உங்கள் வெற்றிப் பயணம் எப்படி இருந்தது?
முதலில், இந்தியா முழுக்க கிராமப் பகுதிகள் எங்கெங்கே முன்னேறி இருக்கின்றன என்று சென்று பார்த்தேன். அண்ணா ஹசாரே, நானாஜி தேஷ்முக் போன்றோர் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்துவந்தேன். பஞ்சாயத் ராஜ் என்பது சமூக - பொருளாதார மாற்றங்களுக்கான அடித்தளம். இவற்றில் பொருளாதார உயர்வுக்கான சாலை, தொழில் போன்றவற்றையே பலரும் பேசுவார்கள்.
உள்ளாட்சியில் சமூகமாற்றத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அகவளர்ச்சி, நகரத்தில் சாத்தியம் இல்லை. ஏனெனில், அங்கே சமூகமோ சித்தாந்தமோ கிடையாது. கிராமங்களில் இவை உண்டு. அதனால்தான், 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்றார் காந்தி. எனவே, சமூக முன்னேற்றத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். இதனால், அந்த ஐந்தாண்டுகளில் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது.
அடுத்த ஐந்தாண்டுகளில், விடுபட்ட பணிகளைச் செய்தோம்.
சமூக முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானது என்று எதைக் கருதுகிறீர்கள்?
எங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அதிகம். தண்டனைகளோ, பயமுறுத்தலோ குற்றங்களைத் தடுக்கும் என்று நான் நம்பவில்லை. ஒருவன் ஏன் குற்றம் செய்கிறான்? அவனுக்கு வேலை இல்லை, வருமானம் இல்லை. எந்தப் பொறுப்பும் இல்லை. இந்நிலையில், செய்யக்கூடாதவற்றைச் செய்கிறான். அந்த நபருக்கு மேற்சொன்ன பொறுப்புகளை உணர்த்தும்போது, சந்தோஷமாக அவற்றைச் செய்கிறான். அதன் பிறகு குற்றம் செய்வதற்கு அவனுக்கு நேரமில்லாமல் போகிறது. மனம் மாறினால், பொறுப்பு வந்துசேரும். அப்போது, வாழ்க்கைத் தரம் உயரும். இந்த யோசனையைத்தான் நான் பயன்படுத்தினேன்.
