
பெயர் : ஸ்ரீவித்யா வீரராகவன்
தொழில் : கதைசொல்லி
நிறுவனம்: ஸ்டோரி ட்ரெய்ன் (Story train) நிறுவனர்
மொழி ஆளுமை: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி
“யார் வேண்டுமானாலும் கதைகள் சொல்லலாம். அறிவியல், கணிதம், வரலாறு என எதில் வேண்டுமானாலும் கதைகளை உருவாக்க முடியும். பாடத்தைப் புரிந்துகொள்ள கதைவடிவம் நன்கு உதவும். அதனால் பல பள்ளிகளுக்குச் செல்கிறேன். கதாபாத்திரங்களை உருவாக்கப் பயிற்சி கொடுக்கிறேன்.” என்று பேசத் தொடங்கினார், சென்னையின் டாப் 10 கதைசொல்லிகளில் ஒருவரான ஸ்ரீவித்யா வீரராகவன்.
மேலும், 'வழக்கமான வேலையை விட்டதும், எனக்கு என்னவெல்லாம் செய்யப் பிடிக்கும் என்று ஒரு பட்டியல் போட்டேன். என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தது பள்ளி, கல்லூரிக் காலங்கள் தான். அப்போது தோழிகளுக்கு நிறைய கதைகள் சொல்வேன். கதைகள் எழுதுவேன். வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால், பதிலையே கதைபோலச் சொல்வேன். கதைகள் தான் என் பலம் என்பதைக் கண்டுபிடித்தேன். அங்கிருந்து ஆரம்பித்த பயணம் தான் இது.
இன்றைக்கு நிறைய பேருக்குக் கதைசொல்ல வேண்டும் என்று ஆசை இருக்கிறது. குறிப்பாக, மாணவர்கள், 'உங்களைப் போல கதை சொல்ல முடியுமா?' என்று கேட்பார்கள். தாராளமாகச் சொல்லலாம் என்பேன். ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ஒருசில அடிப்படைகள் தெரிய வேண்டும், அவ்வளவுதான்.
சின்ன வயதில் நிறைய கதைகள் கேட்டிருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால், இப்போதாவது நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். சம்பவங்களை மனத்தில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் மனத்தில் தோன்றும் கற்பனையான விஷயங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். எழுதியதை, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.
இதற்கு அடுத்த விஷயம், உணர்ச்சிகள். எந்த மாதிரியான கதைகளுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சிகள் தேவை? எப்படிச் சொன்னால், கேட்பவர்களைக் கவரமுடியும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தது குரல். ஏற்ற இறக்கம், மென்மை, வலிமை, கனிவு, ரெளத்திரம் என்று அத்தனையும் வெளிப்பட வேண்டியது குரலில்தான்.
எல்லாவற்றையும்விட முக்கியம், தனித்துவம். பொதுவாக, ஒருவர் மாதிரியே இன்னொருவர் கதைகள் சொல்ல மாட்டார். உங்களுக்கென்று தனித்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கும் மேல் ஒன்று உண்டு. அதன் பெயர் பயிற்சி. சொல்லச் சொல்லத்தான் கதைசொல்லும் திறமை மேம்படும்.
அதற்கு வீட்டிலும் வகுப்பிலும் கதைச் சொல்லிப் பழகுங்கள். சொல்லும் கதை நண்பர்களை ஈர்க்கிறதா என்று பாருங்கள். தேவைப்பட்ட இடத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். சம்பவங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு குரலை மாற்றிக்கொள்ள வேண்டும். இடத்திற்கு ஏற்றுவாறு கதைகளை உருவாக்க வேண்டும். ரொம்ப முக்கியமானது, கதை நடக்கும் இடத்திற்கே, கேட்பவர்களை அழைத்துச் சென்ற அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். கருத்துகளோ, பிரசாரமோ, ஆலோசனைகளோ, தத்துவங்களோ வேண்டவே வேண்டாம். உள்ளது உள்ளபடி, உணர்ச்சிபூர்வமாக கட்டமைத்துச் சொன்னாலே போதும்.
உங்களுக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் திரள்வது உறுதி.” என்றார்.
யார் இவர்?
சமூகவியல், எம்.எஸ்.டபிள்யூ படித்து முடித்து, பெரிய நிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை செய்தார். பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து, கார்ப்பரேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கதைசொல்லியானார் ஸ்ரீவித்யா.