PUBLISHED ON : ஆக 01, 2016

1906: இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது உருவாக்கப்பட்ட இந்தக் கொடி பார்ஸி பகன் சதுக்கத்தில் (Parsi Bagan Square) முதன் முறையாக ஏற்றப்பட்டது. இதை 'கல்கத்தா கொடி' என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கொடியை வடிவமைத்தவர் சச்சிந்திர சந்திர போஸ்.
1907: கல்கத்தா கொடியில் சில மாற்றங்கள் செய்து, 'சப்தரிஷி' எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது தேசியக் கொடி. இதை 'பிகாஜி காமா' (Bhikaji Cama) அம்மையார் 1907ஆம் ஆண்டில், ஜெர்மனியின் 'ஸ்டட்கார்ட்' (Stuttgart) நகரில் நடைபெற்ற முதல் உலக சோஷலிச மாநாட்டில் ஏற்றி வைத்தார்.
1917: டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பால கங்காதர திலகரும் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் மூன்றாவது தேசியக் கொடியை அறிமுகம் செய்தனர். இந்தக் கொடியின் மேல் இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும், வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும், நடுவில் சில நட்சத்திரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன. இக்கொடி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
1921: விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, 'பிங்கலி வெங்கய்யா' (Pingali Venkayya) என்ற சுதந்திரப் போராட்ட வீரர், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக காவி, பச்சை வெள்ளை நிறத்துடன் வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார். இந்தக் கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது.
1931: மூன்று வண்ணங்களுக்குப் பதில், காவி வண்ணமும் அதில் ராட்டையும் என மாற்ற வேண்டும் என காங்கிரஸ் ஆட்சிக்குழு அமைத்த ஏழு நபர்கள் குழு வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் இதை ஏற்கவில்லை. மூவர்ணத்துடன் ராட்டை இணைந்த கொடியை பயன்படுத்தினர்.
1931: இதே சமயத்தில், மூவர்ணத்துடன் 'ஆசாத் ஹிந்த்' என்ற எழுத்துகளும், நடுவில் புலியின் உருவம் இடம்பெற்ற கொடியை நேதாஜியின் இந்திய தேசியப் படை பயன்படுத்தியது. இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிட்டாலும் மணிப்பூரில், சுபாஷ் சந்திர போஸ் இதை ஏற்றினார்.
1947: சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, கே.எம்.முன்ஷி, பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் அடங்கிய குழு தேசியக் கொடி தொடர்பாக ஆலோசித்தது. 'பிங்கலி வெங்கய்யா' வடிவமைத்த கொடி நடுவில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்ட மூவர்ணக் கொடி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 அன்று கூடியபோது இந்திய தேசியக் கொடி அறிவிக்கப்பட்டது. பின்னர், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
